Friday, September 11, 2026

G.35 - ஏன் - கவியரங்கம் 27

G.035

இது 2007-இல் எழுதப்பட்டது.


2007-11-17

G.35 - ஏன் - கவியரங்கம் 27

------------

0-1) --- இறைவணக்கம் --- (நாலடித்தரவு கொச்சகக் கலிப்பா) ---

நானென்றும் எனதென்றும் நாளுமெண்ணி அழிவேனும்

கோனென்றும் சிவனென்றும் கும்பிட்டு நின்நாமத்

தேனென்றும் நாவினிலே தித்திக்க அருள்செய்வாய்

தானென்றும் அழியாத சங்கரனே பணிந்தேனே.


0-2) --- அவை வணக்கம் --- (வெண்பா) ---

ஏனென்ற இத்தலைப்பிற் கேதேதோ சிந்தித்தே

யானொன்றை யாத்தேன் அவையோரே - பாநன்றோ

அன்றோ செவிமடுத் தாய்ந்தும் கருத்துரைக்க

என்றேன் உமைவணங்கி இங்கு.


1) --- (அறுசீர் விருத்தம் - மா மா காய் - அரையடி வாய்பாடு) ---

பேசத் தெரிந்த நாள்முதலாய்ப்

.. பிள்ளை வாயிற் பிறந்திடுமே

வாசம் மலரில் ஏன்என்றும்

.. வான வில்லும் ஏன்என்றும்

தோசை செய்தால் அதில்துளைகள்

.. தோன்று கிறதும் ஏன்என்றும்

மீசை முளைப்ப(து) ஏன்என்றும்

.. விதவி தமான கேள்விகளே.


2)

இலையில் பச்சை ஏன்என்றும்

.. இரவில் இரவி ஏன்இல்லை

மலைகள் இங்கே ஏன்என்றும்

.. மழையும் பெய்வ(து) ஏன்என்றும்

நிலைகொள் ளாமல் அடுக்கடுக்காய்

.. நீலக் கடலில் தோன்றுகிற

அலைகள் போலத் தொடர்ந்துவரும்

.. அங்கே கேள்விக் கணைகளுமே.


3)

மடைதி றந்த வெள்ளம்போல்

.. வரும்இக் கேள்வி களுக்கெல்லாம்

விடைகள் அறியாப் பெற்றோர்கள்

.. விளக்கிச் சொல்ல முடியாமல்

அட!வாய் மூடி இருகொஞ்சம்

.. அமைதி யாக நாமிருக்க

விடமாட் டாயா என்றுரைத்தே

.. விளையும் அறிவைக் குறைப்பார்;அம்


* 3-ஆம் பாடல் முற்றுப்பெறாமல், குளகமாக 4-ஆம் பாடலில் தொடர்கின்றது.


4)

மனிதர் போன்றே உலகினிலே

.. மதங்கள் கூட உள்ளனவே

புனிதம் கெடுமே என்பாரே

.. பொறாரே கேள்வி கேட்போரைக்

குனிய வைத்துக் குட்டிடுவார்

.. கொள்கை நம்பா விட்டால்நீ

இனிப்பாழ் நரகில் வீழ்ந்தழிவாய்

.. என்று சொல்லிப் பழித்திடுவார்!


5)

ஆள்வோர் ஆட்சிக் காபத்தே

.. அடிமை அறிவு பெற்றுவிட்டால்

கேள்வி கேட்டல் நம்முரிமை

.. கேட்டால் தானே வருமறிவு

வேள்வி கூட அதுவாகும்

.. மேலும் மேலும் கேள்விபல

மூள்ப வர்க்கே முடிவில்லா

.. முதல்வன் ஞானம் அளிப்பானே.


6) --- (அறுசீர் விருத்தம் - 5 மா + காய் - வாய்பாடு) ---

ஏனேன் என்(று)ஆ ராய்ந்து வந்தால் இங்கே(து) அறியாமை

நானேன் வந்தேன் நான்ஆர் என்ற ஞானம் நல்கிடுவான்

ஆனே(று) உடையான் உமைஓர் கூறன் அறிவே வடிவானான்

வானே நிலனே என்றெல் லாமாய் வரும்எம் பெருமானே.


வி. சுப்பிரமணியன்

------------- -------------


Wednesday, August 26, 2026

G.34 - "கவிதை எனக்கு ..." - கவியரங்கம் 38

G.034

இது 2013-இல் எழுதப்பட்டது.


2013-08-18

G.34 - "கவிதை எனக்கு ..." - கவியரங்கம் 38

கவிதை எனக்கு?!

------------

0-1) --- இறைவணக்கம் --- (நாலடித்தரவு கொச்சகக் கலிப்பா) ---

பாட்டிதரு பிட்டுகந்த பரம்பொருளே பழவோலை

காட்டிவந்து சுந்தரருக் கருள்புரிந்த கண்ணுதலே

ஈட்டியவல் வினைதீர்க்கும் எம்பெருமான் என்றுமுனைப்

பாட்டிசைத்துப் பரவியடி பணிவதற்குப் பணித்தருளே.


பாட்டி - வந்தி - திருவிளையாடற்புராணத்திற் பிட்டுக்கு மண்சுமந்த படலம் காண்க;

கண்ணுதல் - நெற்றிக்கண்ணன்;


0-2) --- அவைவணக்கம் --- (வஞ்சிவிருத்தம் - விளம் மா காய் - வாய்பாடு) ---

விழுமிய பாடல் எதிர்பார்த்துக்

குழுமிய அவையீர்க் கென்வணக்கம்

எழுதிய பாட்டை இயம்புகின்றேன்

பழுதிருந் தால்நீர் பகரீரே.


விழுமிய - சிறந்த;

பகரீர் - சொல்லுங்கள்;


1) --- (எண்சீர் விருத்தம் - புளிமா புளிமா புளிமா கூவிளம் - அரையடி வாய்பாடு) ---

கவிதை எமக்குத் தொழிலென் பார்சிலர்

.. கவிதை எமக்கு விருப்பென் பார்சிலர்

கவிதை எமக்குக் கரும்பென் பார்சிலர்

.. கவிதை எமக்கு வருமென் பார்சிலர்

கவிதை எமக்கு விருந்தென் பார்சிலர்

.. கவிதை எமக்கு மருந்தென் பார்சிலர்

கவிதை எனக்கர்ச் சனையென் றான்அவன்

.. கவிதை தனக்குப் பொருளென் றாகியே.


2) --- கவிதை யாருக்கு? - (கலிவிருத்தம் - விளம் மா விளம் மா - வாய்பாடு) ---

புவிதனிற் பிறந்து பொழுதினைப் போக்கிச்

செவிதனிற் சிவனார் திருப்புகழ் கேளாச்

செவிடரின் மொழிக்கோ தினம்தினம் யாக்கும்

கவிதையும் எனக்கோ கண்ணுத லாற்கே.


செவிடர் இன்மொழி - செவிடர்கள் சொல்லும் பாராட்டு;

யாத்தல் - தொகுத்தல்; செய்யுள் அமைத்தல்;


3) --- (கலிவிருத்தம் - விளம் மா மா மா - வாய்பாடு) ---

வெற்றுரைத் தொடரால் விளையும் ஒன்றாய்

மற்றவர் படித்து மறப்ப தற்கோ

நற்றவர் நயக்கும் நரைவெள் ளேற்றன்

பொற்றுணை அடியைப் புகழ்வ தற்கே.


நரை-வெள்-ஏற்றன் பொற்றுணை அடி - வெள்ளை எருதின்மேல் ஏறும் சிவன் பொன்னடி;


4) --- (அறுசீர் விருத்தம் - மா விளம் தேமா - அரையடி வாய்பாடு) ---

கூடா நட்பினைக் கூடிக் .. கோது சேர்வழி ஓடி

ஆடா ஆட்டமும் ஆடி .. அல்லல் நானடை யாமல்

நாடா என்னையும் நாடி .. நாளும் நற்றமிழ் மாலை

பாடாய் என்றருள் செய்த .. பாய்வெள் ளேறமர்ந் தாற்கே.


கோது - குற்றம்;

ஏறு அமர்ந்தாற்கு - இடபத்தை ஊர்தியாக விரும்பிய சிவபெருமானுக்கு;


5) --- (அறுசீர் விருத்தம் - மா மா காய் - அரையடி வாய்பாடு) ---

பொய்யே கவிதைக் கழகென்று .. புவியிற் சிலரின் றுரைக்கின்றார்

ஐயே அதையும் பாராட்டி .. அகம கிழ்ந்தார் பலரிங்கு

மெய்யே பாட்டுக் கழகாகும் .. மேலை வினைக்குத் தழலாகும்

மையேர் கண்டன் கழல்நாடும் .. வார்த்தை ஒன்றே மனம்பாடும்.


மை - கருமேகம்;

ஏர்தல் - ஒத்தல்;


6) --- (எண்சீர் விருத்தம் - காய் காய் மா தேமா - அரையடி வாய்பாடு) ---

மங்கையவர் மையலிலே வந்தெ ழுந்த

.. வார்த்தைகளைச் சிலரடுக்கிப் பாட்டிஃ தென்பார்

இங்குவிலை போவதெது என்று நாடி

.. எந்நாளும் பொருளுக்கா அதையே பாடித்

தங்கவிதை என்றுசிலர் மயங்கி நிற்பார்

.. தரணியுளோர் புகழுரைக்காச் சிலர்தொ டுப்பார்

கங்கையடை சடையுடையான் காரார் கண்டன்

.. கவிதையெனக் குமைகேள்வன் கழல்க ருத்தே.


எதுவென்று - எது என்று; (அப்பர் தேவாரம் - 4.12.4 - "புறங்காடு பதியாவ திதுவென்று பலர்பாடும் பழனத்தான்");

தங்கவிதை - 1. தம் கவிதை; / 2. தங்கம்+விதை (பணங்காய்ச்சி-மரத்தின் விதை);

புகழுரைக்கா - புகழுரைக்காக; கடைக்குறை விகாரம்;

கவி - பாட்டு;

கவி தை எனக்கு உமைகேள்வன் கழல் கருத்தே - பாடல் தொடுக்கும் எனக்குப் பார்வதிகோன் திருவடியே கருத்து; (தைத்தல் - தொடுத்தல்);


7) --- (பாடல் வகை ** - கூவிளம் தேமா கூவிளம் தேமா - வாய்பாடு) ---

கண்டதும் காதல் என்பது போலக்

கண்டதும் பாடல் என்றுள நாளில்

உண்டது நஞ்சு கொண்டலின் வண்ணம்

கொண்டது கண்டம் என்றுளன் கூற்றைப்

பண்டுதை காலன் பாய்விடை யான்சீர்

பண்டுதை பாட்டிற் பாடுகின் றேனே.


கண்டதும் - 1. பார்த்தவுடன்; 2. எதுவும்;

கொண்டல் - மேகம்;

பண்டுதை - 1. பண்டு உதை; 2. பண் துதை;

பண்டு - முற்காலத்தில்;


** Note: As per Prof. Pasupathy: யாப்பருங்கலத்தில் "புறநடை" என்ற பகுதியில் சொல்லப்படும் "ஒப்புமை" என்ற விதியின்படி, இப்பாடலை "நாற்சீர் கொண்ட ஆறடியான் வந்த கலிவிருத்தம்" எனலாம்.


8) --- (நாலடித்தரவு கொச்சகக் கலிப்பா) ---

ஒருகவிதை என்றாலும் ஓதுபவர் உள்ளங்கள்

உருகவிதை ஆகிப்பல் பிறப்பளிக்கும் வெவ்வினையும்

கருகவிதை ஒன்றின்றி விளைவிக்க வல்லவெந்தை

தருகவிதை நல்லன்பர் தம்மன்பன் சங்கரனே.


உரைநடை அமைப்பில்:

a)

ஒரு கவிதை என்றாலும், ஓதுபவர் உள்ளங்கள்

உருக! விதை ஆகிப் பல்பிறப்பு அளிக்கும் வெவ்வினையும்

கருக! விதை ஒன்று இன்றி விளைவிக்க வல்ல எந்தை,

நல்-அன்பர்தம் அன்பன், சங்கரன் இதைத் தருக.


b)

("தருகவிதை = தரு+கவிதை" - என்று வினைத்தொகையாகக் கொண்டும் பொருள்கொள்ளலாம். அப்படிக் கொண்டால்:

விதை ஒன்று இன்றி விளைவிக்க வல்ல எந்தை, நல்-அன்பர்தம் அன்பன் சங்கரன் தரு-கவிதை ஒரு கவிதை என்றாலும், ஓதுபவர் உள்ளங்கள் உருக! விதை ஆகிப் பல் பிறப்பு அளிக்கும் வெவ்வினையும் கருக! )


உருக, கருக, தருக - வியங்கோள் வினைமுற்று; (உருக - உருகட்டும்; கருக - கருகட்டும்; தருக – தரட்டும்);

தருகவிதை - இதைத் தருக;

(அப்பர் தேவாரம் - 4.4.2 - "நரியைக் குதிரைசெய் வானும் ..... விச்சின்றி நாறு செய்வானும்..." - விதை இன்றியே பயிரை உண்டாக்க வல்லவனும்);


(கந்தர் அலங்காரம் - 100 -

கிழியும் படிஅடற் குன்றெறிந் தோன்கவி கேட்டுருகி

இழியும் கவிகற் றிடாதிருப் பீர்எரி வாய்நரகக்

குழியும் துயரும் விடாய்ப்படக் கூற்றுவனுார்க் குச்செல்லும்

வழியும் துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே.)


வி. சுப்பிரமணியன்

------------- -------------


Thursday, June 25, 2026

G.33 - சிவன் - சுந்தரர் - சிலேடை

G.033

இது 2010-இல் எழுதப்பட்டது.


2010-11-02

G.33 - சிவன் - சுந்தரர் - சிலேடை

------------

பகிரங்க மாகவோர் பாவையிடஞ் சேர

மகிழ மரமடை வாக்குப் - புகலுங்கால்

என்றவர் பார்பரவை யின்றுணைவர் ஒற்றியமர்

குன்றவில்லி நாவலர் கோன்.


சொற்பொருள்:

பகிரங்கம் - 1. வெளிப்படை; 2. பகிர் அங்கம்;

பகிர் - பங்கு; பகிர்தல் - பங்கிடுதல்;

அங்கம் - உடல்;

பாவை - பெண்;

இடம் - 1. ஏழாம்வேற்றுமை உருபு; 2. இடப்பக்கம்;

அடைதல் - சேர்தல்; அடைத்தல் - ஒளித்துவைத்தல் (hide);

வாக்கு - வாக்குத்தத்தம் (Promise);

பார் - 1. அறி; காண்; 2. உலகம்;

பரவை - 1. பரவைநாச்சியார் (சுந்தரரின் முதல்மனைவி); / 2. பரவு ஐ;

பரவுதல் - போற்றுதல்;

ஐ - தலைவன்;

இன் - 1. சாரியை / வேற்றுமை உருபு; / 2. இனிய;

துணைவன் - 1. கணவன்; / 2. உதவி செய்பவன்;


சுந்தரர்:

பகிரங்கமாக ஓர் பாவையிடம் சேர, "மகிழமரம் அடை வாக்குப் புகலுங்கால்" என்றவர் பார் - சங்கிலியாரை ஊரறியத் திருமணம் செய்துகொள்ளவேண்டி, "நான் சத்தியம் செய்யும்பொழுது (சிவபெருமானே நீ) மகிழமரத்தில் போய் இரு" என்று சொன்னவர் காண்;

பரவையின் துணைவர் - பரவையாரின் கணவர்;

நாவலர்கோன் - திருநாவலூராளியான சுந்தரர்;


சிவன்:

பகிர்-அங்கமாக ஓர் பாவை இடம் சேர - பகிர்ந்துகொண்ட திருமேனியாகப் பார்வதி இடப்பக்கம் பொருந்த; (சம்பந்தர் தேவாரம் - 1.90.4 - அங்க(ம்) மாதுசேர் பங்கம் ஆயவன்);

(ஓர் பாவையிடம் சேர) மகிழமரம் அடை வாக்குப் புகலுங்கால் என்றவர் = ஓர் பாவையிடம், "மகிழமரம் அடை, சேர வாக்குப் புகலுங்கால்" என்றவர் - சங்கிலியாரிடம் (அவர் கனவில் சென்று), "(சுந்தரர்) உன்னைச் சேரச் சத்தியம் செய்யும்பொழுது மகிழமரத்தை அடை" என்று சொன்னவர்; ("ஓர் பாவையிடம் சேர" - இந்தச் சொற்றொடரை இடைநிலைத்தீவகமாக இருபக்கமும் இப்படி இயைத்துப் பொருள்கொள்க);

பார் பரவு ஐ - உலகோர் எல்லாம் போற்றும் தலைவர்;

இன் துணைவர் - (அவ்வாறு போற்றும் பக்தர்களுக்கு) இனிய துணையாக இருப்பவர்;

ஒற்றி அமர் குன்றவில்லி - திருவொற்றியூரில் எழுந்தருளிய, மேருமலையை வில்லாக ஏந்திய சிவபெருமானார்; (ஒற்றி - திருவொற்றியூர்); (அமர்தல் - விரும்புதல்; உறைதல்); (குன்றவில்லி - மலையை வில்லாக உடையவன் - சிவபெருமான்);


பிற்குறிப்பு:

* சுந்தரர் தேவாரம் - 7.89.9

பொன்னவிலுங் கொன்றையினாய் போய்மகிழ்க் கீழிருவென்று

சொன்னஎனைக் காணாமே சூளுறவு மகிழ்க்கீழே

என்னவல்ல பெருமானே இங்கிருந்தா யோஎன்ன

ஒன்னலரைக் கண்டாற்போல் உளோம்போகீர் என்றானே.


வி. சுப்பிரமணியன்

------------- -------------


Wednesday, June 10, 2026

G.32 - தமிழ்ப் புத்தாண்டு - "சார்வரி" (Śārvarī)

G.032

இப்பாடல் 2020-இல் எழுதப்பட்டது.


2020-04-13

G.32 - தமிழ்ப் புத்தாண்டு - "சார்வரி" (Śārvarī)

------------


1) --- (அறுசீர் விருத்தம் - "விளம் மா தேமா" - அரையடி வாய்பாடு) ---

சார்வரி ஆண்டு தன்னில் .. தரணியிக் கொரோனாத் துன்பம்

தீர்வுற அருள வேண்டும் .. திருமுடி மீது கங்கை

நீர்வரி அரவு திங்கள் .. நிலைபெற வைத்த தேவா

கூர்வடி வேலன் தன்னைக் .. கொடுத்தகண் ணுதலெம் மானே.


சார்வரி ஆண்டு-தன்னில் தரணி இக்-கொரோனாத் துன்பம் தீர்வுற அருள-வேண்டும் - சார்வரி வருடத்தில் உலகம் இந்தக் கொரோனா வைரஸ் (Covid-19) என்ற துன்பம் தீர்ந்து உய்ய அருள்வாயாக;

திருமுடிமீது கங்கைநீர் வரிஅரவு திங்கள் நிலைபெற வைத்த தேவா - தலைமீது கங்கைநதி, வரிகள் திகழும் பாம்பு, சந்திரன் இவற்றை அணிந்த தேவனே;

கூர்வடிவேலன்-தன்னைக் கொடுத்த கண்ணுதல் எம்மானே - கூரிய வேலை ஏந்தும் முருகனை அருளிய நெற்றிக்கண்ணை உடைய எம்பெருமானே. (வடி - கூர்மை; கூர்வடி - ஒருபொருட்பன்மொழி);


2) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---

கார்வரி, ஈட்டிய காசுவரி, வீட்டுவரி,

நீர்வரி, இருக்கின்ற நிலவரி, என்றுமிகச்

சேர்வரி கண்டிங்கியாம் திகைக்கின்றோம்; வந்தடைந்த

சார்வரி நீயேனும் தாவெமக்கு நிம்மதியே.


கார்வரி, ஈட்டிய காசுவரி, வீட்டுவரி, நீர்வரி, இருக்கின்ற நிலவரி - காருக்கு வரி, சம்பாதித்த வருமானத்துக்கு வரி, வீட்டுக்கு வரி, நீருக்கு வரி, நிலத்துக்கு வரி;

என்று மிகச் சேர்-வரி கண்டு இங்கு யாம் திகைக்கின்றோம் - என்று பற்பல வரிகளைக் கண்டு நாங்கள் தளர்கின்றோம்; (கண்டிங்கியாம் = கண்டு இங்கு யாம்; குற்றியலிகரம்);

வந்து அடைந்த சார்வரி நீயேனும் தா எமக்கு நிம்மதியே - வந்து சேர்ந்த சார்வரி வருஷமே, நீயாவது எங்களுக்கு நிம்மதியைத் தா;


வி. சுப்பிரமணியன்

------------- -------------


G.31 - தேடித் தேடி - கவியரங்கம் 31

G.031

இப்பாடல் 2010-இல் எழுதப்பட்டது.


2010-03-20

G.31 - தேடித் தேடி - கவியரங்கம் 31

------------

0-1) -- கடவுள் வாழ்த்து --

தேடித் தேடி இருவரன்று

.. திகைத்து நிற்க உயர்தீயே!

ஆடிப் பாடி அடிபோற்றும்

.. அன்பர் உள்ளே உறைவாயே!

நாடிக் கைகள் குவித்தேனே

.. நானும் உன்னைத் தமிழ்கொண்டு

பாடிப் பாதம் பணிந்தேனே

.. பார்த்த ருள்வாய் பசுபதியே!


1) -- நாலடி தரவு கொச்சகக் கலிப்பா ---

மூவாண்டு முடிவடையும் முன்னமே இவ்வாண்டு

போவானெப் பள்ளியெனப் பொழுதெல்லாம் சிந்தித்தே

ஆவாவென் றல்லாடி அங்குமிங்கும் மிகத்தேடி

ஈவாரே பெரும்பொருளும் ஏதோவோர் பள்ளிக்கே.


இவ்வாண்டு - 1) இந்த வருடம்; 2) இந்த வாண்டு;

ஆவாவென்று - ஆ ஆ என்று;


2) -- கலிவிருத்தம் - 4 தேமா ---

ஆட்டம் பாட்டம் ஆர்க்கு வேண்டும்

நாட்டம் எல்லாம் ஏட்டின் மேலே

காட்டு வாயென் கண்ணே என்று

வீட்டில் சொல்வார் வேத வாக்காய்.


3) -- எண்சீர் விருத்தம் - 8 மா ---

'மண்டே' என்பார் திங்கள் என்னார்

.. வாழ வேற்று மொழியே தேவை

மண்டே என்பார் தமிழும் கற்றால்

.. மக்கட் காகக் காசைத் தந்தும்

கண்டார் காலில் விழுந்தும் ஏதோ

.. கல்லூ ரியிலே இடத்தை வாங்கிக்

கொண்டு வந்தி ருப்பார் இந்நாட்

.. கோலம் ஆவ(து) இஃதே அன்றோ.


மண்டு - மூடன்; (மண்டே - Monday);

இந்நாள் கோலம் - இக்கால நிலை;


4) --- அறுசீர் விருத்தம் - 6 மா ---

ஆசை விண்ணை எட்டும்

.. அதுவே ஆளை ஆட்டும்

காசைத் தருவ தொன்றே

.. கல்வி என்பார் இன்று

மாசை நீக்க எண்ணார்

.. வழியை என்றும் நண்ணார்

ஓசை ஒன்றே செய்வார்

.. உலகில் உழன்று தொய்வார்.


வழியை என்றும் நண்ணார் - நல்ல வழியை என்றும் சேரமாட்டார்கள்;

ஓசை ஒன்றே செய்வார் - பொருளற்ற பேச்சே பேசுவார்; அலம்பல் செய்வார்;


5) -- நாலடி தரவு கொச்சகக் கலிப்பா ---

வளர்கிறநாள் விளையாட்டே மனம்கருதும்; வலிமைமிகு

இளமையிலே இளமயிலே என்றென்றும் எண்ணத்தில்;

தளர்வடையும் முதுமையிலோ தாங்கொண்ணாத் தனுவலிதான்

உளம்நினையும்; உலகினிலே உளநாள்கள் இப்படியே;


இளமயில் - இளம் பெண்;

தனு - உடல்;


6) -- கலித்துறை? ---

படித்து முடித்து வேலை தேடிக் - காலைப்

பிடித்துப் பிடித்துப் பதவி தேடி - நாளும்

நடித்து நடித்துக் காசைத் தேடில் - வாழ்வை

முடிக்கத் துடிக்கும் நமனும் தேடு வானே.


7) -- அறுசீர் விருத்தம் - மா மா காய் ---

தேடி வந்த கூற்றுவனைச்

.. சீறி உதைத்த சேவடியைப்

பாடிப் பணிந்து மகிழ்கின்ற

.. பத்தர் குழாத்தை எந்நாளும்

கூடிக் களிக்க எண்ணாமல்

.. குவல யத்தில் வீணாக

ஓடிப் பேய்த்தேர் முகக்கின்றார்

.. உயிரை வளர்க்க அறியாரே.


பத்தர்குழாம் - அடியார்கூட்டம்;

குவலயம் - பூமி;

பேய்த்தேர் - கானல் நீர்;

முகத்தல் - மொள்தல்;


8) -- இன்னிசை வெண்பா ---

தேடுவது நம்மியல்பு; தேடற்குத் தக்கதை

நாடுவது நல்லறிவு; நாளெல்லாம் காசுக்கே

ஓடுவது புல்லறி(வு); உள்ளமொன்றி முக்கணனைப்

பாடுவதே உய்வுதரும் பார்.


புல்லறிவு - அறியாமை;


வி. சுப்பிரமணியன்

------------- -------------


Tuesday, June 9, 2026

G.30 - முருகன் - மரம் - சிலேடை

G.030

இது 2010-இல் எழுதப்பட்டது.


2010-01-29

G.30 - முருகன் - மரம் - சிலேடை

------------

வள்ளி அணைத்தலால் வான்வந் தடைவதால்

புள்ளமர் பொற்பினால் போற்றுவார்க் - கள்ளிக்

கொடுப்பதால் தன்னடிக்கண் கூடினார் துன்பம்

தடுப்பதால் கந்தன் தரு.


சொற்பொருள்:

வள்ளி - 1. கொடி; / 2. குறவர் மகளான வள்ளி;

அணைத்தல் - தழுவுதல்;

வான் - 1. மேகம்; / 2. தேவர்கள்;

அடைதல் - 1. சேர்தல்; / 2. சரண்புகுதல்;

புள் - 1. பறவை; / 2. மயில்;

அமர்தல் - 1. உட்கார்தல்; 2. விரும்புதல்;

பொற்பு - 1. தன்மை; / 2. அழகு;

போற்றுதல் - 1. பாதுகாத்தல்; வளர்த்தல் / 2. துதித்தல்; வணங்குதல்;

அடி - 1. கீழ்; / 2. திருவடி;

தரு - மரம்;


மரம்:

வள்ளி அணைத்தலால் - கொடிகள் தழுவிப் படர்வதால்;

வான் வந்து அடைவதால் - மேகம் வந்து பொருந்துமாறு ஓங்கி வளர்வதால்;

புள் அமர் பொற்பினால் - பறவைகள் (கிளைகளில்) உட்காரும் தன்மையால்;

போற்றுவார்க்கு அள்ளிக் கொடுப்பதால் - பராமரிப்பவர்களுக்குப் பெரும்பயனைத் தருவதால்;

தன் அடிக்கண் கூடினார் துன்பம் தடுப்பதால் - தன் அடியில் சேர்பவர்களுக்கு வெயிலின் துன்பத்தைத் தடுத்துக் குளுமை தருவதால்;

தரு - ஒரு மரம்;


முருகன்:

வள்ளி அணைத்தலால் - குறமகள் வள்ளி தழுவுவதால்;

வான் வந்து அடைவதால் - தேவர்கள் வந்து சரண்புகுவதால்;

புள் அமர் பொற்பினால் - மயிலை வாகனமாக விரும்பி ஏறுவதால்;

போற்றுவார்க்கு அள்ளிக் கொடுப்பதால் - வணங்குபவர்களுக்கு வரங்களை அள்ளித் தருவதால்;

தன் அடிக்கண் கூடினார் துன்பம் தடுப்பதால் - தன் திருவடியில் சேர்பவர்களுக்கு (வினை, நோய், முதலிய) துன்பங்களைத் தீர்த்து அருள்வதால்;

கந்தன் - முருகன்;


வி. சுப்பிரமணியன்

------------- -------------


G.29 - பாவை விளக்குமாறு - (வக்கிரோக்தி)

G.029

இது 2010-இல் எழுதப்பட்டது.


2010-01-17

G.29 - பாவை விளக்குமாறு - (வக்கிரோக்தி)

------------

(பதின்சீர் விருத்தம் - மா மா மா மா தேமா - அரையடி வாய்பாடு)


பாவை விளக்கு மாறு வேண்டி நின்றேன்

.. பார்த்தார் புலவர் ஏனோ உடனே ஏற்றும்

பாவை விளக்கு மாறு தந்து விட்டார்

.. பாரீர் இஃதென் என்றேன் அருகி ருந்த

பாவை தன்னை விளக்கல் ஏனோ என்றார்

.. பரிதா பங்கொண்(டு) அளித்தாள் அன்னார் பெற்ற

பாவை விளக்கு மாறும் பதுமை யுந்தான்

.. பாரீர் பாட்டை எண்ணிக் கலங்கி னேனே.


சொற்பொருள்:

பாவை - 1. செய்யுளை; (பா - பாட்டு); 2. பொம்மை; பிரதிமை; 3. அழகிய பெண்;

விளக்குதல் - 1. தெளிவாக்குதல் (To make clear; to explain, elucidate); 2. துலக்குதல் (To clean, brighten, polish);

விளக்குமாறு - 1. விளக்கும்படி; 2. துடைப்பம்; 3. ஆறு விளக்குகள்;

பாவைவிளக்கு - பிரதிமை விளக்கு (Lamp with a damsel-shaped stand);

பாரீர் - 1. பாருங்கள்; 2. உலகோரே;

பாட்டை - 1. பாடலை; 2. நிலைமையை; துன்பத்தை;


பாவை விளக்குமாறு வேண்டி நின்றேன் - "பாவை விளக்குமாறு வேண்டுகிறேன்" என்றேன் - பாடலைத் தெளிவாக விளக்கும்படிக் கேட்டேன்.

பார்த்தார் புலவர்; ஏனோ உடனே ஏற்றும் பாவை-விளக்கும் ஆறு தந்துவிட்டார் - என்னைப் பார்த்த புலவர் என்ன காரணத்தாலோ உடனே தீபம் ஏற்றும் ஆறு பிரதிமை-விளக்குகள் தந்தார். (--அல்லது-- என் வேண்டுகோளை ஏற்றாலும், என்ன காரணத்தாலோ ஆறு பிரதிமைவிளக்குகள் தந்தார்).

பாரீர் இஃது என் என்றேன் - "பாருங்கள்! இது என்ன?" என்றேன். ("நான் சொன்னது ஒன்று; நீங்கள் செய்தது வேறொன்றாக இருக்கிறதே" என்ற பொருளில்);

அருகு இருந்த பாவை-தன்னை விளக்கல் ஏனோ என்றார் - பக்கத்தில் இருக்கும் இந்தப் பிரதிமையைப் பற்றி விளக்கமும் தேவையோ என்றார். (--அல்லது-- இப்பிரதிமையை ஏன் துலக்கவேண்டும் என்றார்).

பரிதாபங்கொண்டு அளித்தாள் அன்னார் பெற்ற பாவை விளக்குமாறும் பதுமையுந்தான் - என்மேல் இரங்கி அவர் மகள் எனக்குத் துடைப்பமும் பொம்மையும் தந்தாள்.

பாரீர் பாட்டை எண்ணிக் கலங்கினேனே - உலகோரே! என் நிலைமையை எண்ணிக் கலங்கினேன். (--அல்லது-- பாடலின் பொருள் உணராமையை எண்ணிக் கலங்கினேன்).


வி. சுப்பிரமணியன்

------------- -------------


G.42 - உயர உயர - கவியரங்கம் 30

G.042 இ து 2009- இல் எழுதப்பட்டது . 2009-06-28 G . 4 2 - உயர உயர - கவியரங்கம் 30 ------------ 0-1) --- இறைவணக்கம் --- ( வஞ்சி ...