Showing posts with label அறுசீர் விருத்தம். Show all posts
Showing posts with label அறுசீர் விருத்தம். Show all posts

Friday, September 11, 2026

G.42 - உயர உயர - கவியரங்கம் 30

G.042

இது 2009-இல் எழுதப்பட்டது.


2009-06-28

G.42 - உயர உயர - கவியரங்கம் 30

------------

0-1) --- இறைவணக்கம் --- (வஞ்சி விருத்தம் - மா மா காய் - வாய்பாடு) ---

உயர உயரப் பறந்தன்று
முயலும் பிரமன் முடிகாணாக்
கயமார் சடையாய்; கழல்பாடி
இயலும் பணிசெய்(து) இருப்பேனே.

கயம் ஆர் சடையாய் - கங்கைச் சடையானே; (கயம் - நீர்);

0-2) --- அவைவணக்கம் ---
சந்த வசந்தச் சபையோர்க்கு
வந்த னங்கள்; வாசிக்கும்
இந்தப் பாவில் இருக்கின்ற
எந்தக் குறையும் இயம்புமினே.

இயம்புமின் - சொல்லுங்கள்;

1) --- (அறுசீர் விருத்தம் - மா மா காய் - என்ற அரையடி வாய்பாடு) ---
தவழ்ந்தி ருந்த பருவத்தில்
.. தானே வந்த(து) ஓராசை;
"கவலை இன்றி இருப்பேனே
.. காலில் எழுந்து நின்றுவிட்டால்";
உவகை பொங்கத் தன்காலில்
.. ஒருநாள் எழுந்து நடந்தவுடன்
தவறி விழுந்து புண்பட்டுத்
.. தரையை நொந்து கொள்வானே.

2)
பின்னர் அந்த அண்ணனைப்போல்
.. பெரிய வனாக ஓராசை;
இன்னும் ஈராண்(டு) ஆனாலும்
.. "எட்டி லேனே அவனுயரம்;
என்ன செய்வேன், அவனுந்தான்
.. இங்(கு)உ யர்ந்து விட்டானே"
என்னும் உண்மை உறைத்தவுடன்
.. இன்னல் கொள்ளும் மனந்தானே.

3)
காலம் நில்லா(து) ஓடுவதால்
.. கரிய மீசை முளைத்தவுடன்
சீலம் இன்றிப் பெரியவர்மேல்
.. சீறிப் பாய்தல் செய்வானே
மேலும் கீழும் குதிப்பானே
.. மேதை போல நடிப்பானே
நூலும் கற்றுத் தெளியாமல்
.. நோகப் பேசித் திரிவானே.

4)
அரசு வேலை பெற்றவுடன்
.. அதனைச் செய்ய முனையாமல்
இரவும் பகலும் இலஞ்சத்தை
.. எண்ணி எண்ணி மகிழ்வானே
பரணில் பதுக்கி வைப்பானே
.. பலனைச் சற்றும் நினையானே
பரனை எண்ணா(து) அவம்செய்தே
.. பாவக் குழியில் விழுவானே.

பரன் - கடவுள்;

5)
உயர வேண்டும் என்றஎண்ணம்
.. உதிக்கும் எல்லார் உளத்திலும்தான்;
கயமை பொங்கும் நெஞ்சிருந்தால்
.. கடைசி வரைஇங்(கு) எஞ்சுவது
துயரம் ஒன்றே; எந்நாளும்
.. துணைஇ ருக்கும் நற்பண்பில்
உயர மாந்தர் எண்ணிவிடில்,
.. உலகில் அவர்க்கோர் குறையுண்டோ?

கயமை - கீழ்மை;

6)
பதவி படிப்பு பணமென்று
.. பாரில் கூடக் கூடநெஞ்சில்
மதமும் கூடும் பலருக்கும்
.. மதிகெட் டதனால் வினைகூடும்;
இதனைத் தவிர்க்கும் வழிவினவில்,
.. எளிய முறையொன்(று) இங்குண்டு;
மதனை எரித்தான் அடியாரின்
.. வரலாற் றினைநாம் ஓதுவதே.

மதம் - செருக்கு; வெறி;
மதன் - மன்மதன்;
மதனை எரித்தான் அடியாரின் வரலாறு - சிவனடியார்களின் வரலாறு - பெரியபுராணம்;

7) --- (வஞ்சித்துறை - மா மா) ---
அறிவில் வளர்ந்து
குறியில் சிறந்து
நெறியில் இருந்தால்
செறியும் உயர்வே.

குறி - இலட்சியம்; நோக்கம்;
செறிதல் - மிகுதல் (To increase; to be abundant, plentiful);


வி. சுப்பிரமணியன்

------------- -------------


G.41 - வேடிக்கை மனிதர்கள் -- (அரசியல்வாதி) - கவியரங்கம் 29

G.041

இது 2009-இல் எழுதப்பட்டது.


2009-04-20

G.41 - வேடிக்கை மனிதர்கள் -- (அரசியல்வாதி) - கவியரங்கம் 29

------------

0-1) --- இறைவணக்கம் --- (நாலடித்தரவு கொச்சகக் கலிப்பா) ---

நாடிக்கை தொழுசுரர்க்கா நஞ்சுண்டாய், அன்றயன்மால்
தேடிக்கை தொழுமாறு தீயாகி நின்றவனே;
வேடிக்கை மனிதரினை விருத்தத்தில் எழுதஅருள்;
பாடிக்கை குவித்துன்றன் பதமலரைப் பணிந்தேனே.

சுரர்க்கா - தேவர்களுக்காக;

0-2) --- அவை வணக்கம் --- (அறுசீர் விருத்தம் - மா மா காய் - அரையடி வாய்பாடு) ---
ஆவ லோடு சபையினிலே
.. அமர்ந்தி ருக்கும் அன்பர்காள்
நாவ லர்காள் வணங்குகிறேன்
.. நானு ரைக்கப் போகின்ற
பாவை நீவிர் செவிமடுத்துப்
.. பாராட்(டு) ஐயம் குற்றமென
யாவ தாயி னும்சொல்வீர்
.. யான்நும் பால்வேண் டுவதிதுவே.

ஐயம் - சந்தேகம்;

1) --- (அறுசீர் விருத்தம் - மா மா காய் - அரையடி வாய்பாடு) ---
தமிழன் என்றோர் இனமுண்டு
.. தனியே அவர்க்கோர் குணமுண்டு
நிமிர்ந்து நிற்போம் நாமென்பார்
.. நெருங்கித் தேர்தல் வந்தாலோ
திமிலம் தானே தெருவெங்கும்
.. சேலை வேட்டி வினியோகம்
குமிழி போல மறைந்தொழியும்
.. கூட்டிச் சொன்ன அப்பண்பே.

திமிலம் - ஆரவாரம்;
கூட்டிச் சொல்லுதல் - 1. மிகைப்படுத்திச் சொல்லுதல்; 2. மக்களைத் திரட்டிப் பேசுதல்;

2) --- (கலிவிருத்தம் - விளம் மா விளம் மா - வாய்பாடு) ---
பெற்றவர் வைத்த பெயரினைச் சொல்லி
மற்றவர் அழைத்தல் மதிப்பினுக் கிழிவாம்
சுற்றிய தொண்டர் சொல்கிற பட்டம்
வெற்றுரை விரும்பல் தலைவருக் கழகே.

வெற்றுரை - பொருளற்ற சொல்;

3) --- (எழுசீர் விருத்தம் - விளம் மா விளம் மா விளம் விளம் மா - வாய்பாடு) ---
தலையினைக் கொடுத்தும் தமிழினைக் காப்போம்
.. தாயினும் மதிக்கிறோம் என்பார்;
அலையெனத் தொண்டர் திரண்டுரை கேட்பார்
.. அவர்க்கென உயிரையும் கொடுப்பார்;
பலபெயர் களையும் மாற்றிடும் தலைவர்
.. பண்பொடு தம்தொலைக் காட்சிக்(கு)
உலகினர் உவக்க ஆங்கிலப் பெயரை
.. ஒளிமிக வைத்திடு வாரே.

4) --- (எண்சீர் விருத்தம் - கருவிளம் தேமா கருவிளம் தேமா - அரையடி வாய்பாடு) ---
அடுக்கடுக் காகச் சொற்களைச் சொல்லி
.. அவையினில் நீண்ட உரையினைச் செய்வார்;
தொடுக்கிற சொல்லில் சுவையிருந் தாலும்
.. துளியள வேனும் பொருளதி ராதே;
அடுக்கிற பேரைக் கெடுக்கிற பண்போ
.. அளவிட லாகா வணம்மிக உண்டு;
நடுக்குறு வோர்கள் அடியினில் வீழ
.. நனிமகிழ்ந் தங்கே அவரிருப் பாரே.

பொருளது இராதே - பொருளின்றி (/ உண்மையின்றி) இருக்கும்;
அளவிடல் ஆகா-வணம் - அளவிட இயலாதபடி;

நடுக்குறுதல் - அஞ்சுதல்;

5) --- (அறுசீர் விருத்தம் - மா மா காய் - அரையடி வாய்பாடு) ---
யாதும் ஊரே எல்லாரும்
.. ஆவர் கேளிர் என்றுரைப்பார்;
ஓதும் சொல்லை உடன்மறப்பார்
.. ஊரைப் பிரிக்க வழிசெய்வார்;
சூதும் வாதும் மிக்கிருப்பார்
.. சுயந லத்தைப் பார்த்திருப்பார்;
தீதும் செய்ய அஞ்சாரே
.. சேவை என்றே சொல்வாரே.

6) --- (அறுசீர் விருத்தம் - மா மா காய் - அரையடி வாய்பாடு) ---
இறைவன் இல்லை இல்லையென்பார்;
.. எதற்குப் பூசை அவற்கென்பார்;
குறைவில் லாமல் நாடெங்கும்
.. கூச்சம் சிறிதும் இல்லாமல்
மறைந்த தலைவர்க் கெனச்சிலைகள்
.. வைத்து மாலை அணிவிப்பார்,
பிறந்த நாளில் துதிசெய்து
.. பெரிய பதவி வரம்கேட்பார்.

அவற்கு - அவன்+கு - அவனுக்கு;

7) --- (எண்சீர் விருத்தம் - மா மா மா தேமா - அரையடி வாய்பாடு) ---
வறுமை யாலே வாடும் மக்கள்
.. வாழ்வில் நிலவும் துன்பத் தோடு
வெறுமை எல்லாம் மிக்கி ருந்தும்
.. வேடிக் கையாய் வேடம் போட்டுச்
சிறுமை மிக்க செயல்கள் செய்து
.. சிரிக்க வைக்கும் தலைவர் தம்மைப்
பெறுவ தற்கு நாடு செய்த
.. பெருந்த வத்தை அறிகி லோமே.


வி. சுப்பிரமணியன்

------------- -------------


G.35 - ஏன் - கவியரங்கம் 27

G.035

இது 2007-இல் எழுதப்பட்டது.


2007-11-17

G.35 - ஏன் - கவியரங்கம் 27

------------

0-1) --- இறைவணக்கம் --- (நாலடித்தரவு கொச்சகக் கலிப்பா) ---

நானென்றும் எனதென்றும் நாளுமெண்ணி அழிவேனும்

கோனென்றும் சிவனென்றும் கும்பிட்டு நின்நாமத்

தேனென்றும் நாவினிலே தித்திக்க அருள்செய்வாய்

தானென்றும் அழியாத சங்கரனே பணிந்தேனே.


0-2) --- அவை வணக்கம் --- (வெண்பா) ---

ஏனென்ற இத்தலைப்பிற் கேதேதோ சிந்தித்தே

யானொன்றை யாத்தேன் அவையோரே - பாநன்றோ

அன்றோ செவிமடுத் தாய்ந்தும் கருத்துரைக்க

என்றேன் உமைவணங்கி இங்கு.


1) --- (அறுசீர் விருத்தம் - மா மா காய் - அரையடி வாய்பாடு) ---

பேசத் தெரிந்த நாள்முதலாய்ப்

.. பிள்ளை வாயிற் பிறந்திடுமே

வாசம் மலரில் ஏன்என்றும்

.. வான வில்லும் ஏன்என்றும்

தோசை செய்தால் அதில்துளைகள்

.. தோன்று கிறதும் ஏன்என்றும்

மீசை முளைப்ப(து) ஏன்என்றும்

.. விதவி தமான கேள்விகளே.


2)

இலையில் பச்சை ஏன்என்றும்

.. இரவில் இரவி ஏன்இல்லை

மலைகள் இங்கே ஏன்என்றும்

.. மழையும் பெய்வ(து) ஏன்என்றும்

நிலைகொள் ளாமல் அடுக்கடுக்காய்

.. நீலக் கடலில் தோன்றுகிற

அலைகள் போலத் தொடர்ந்துவரும்

.. அங்கே கேள்விக் கணைகளுமே.


3)

மடைதி றந்த வெள்ளம்போல்

.. வரும்இக் கேள்வி களுக்கெல்லாம்

விடைகள் அறியாப் பெற்றோர்கள்

.. விளக்கிச் சொல்ல முடியாமல்

அட!வாய் மூடி இருகொஞ்சம்

.. அமைதி யாக நாமிருக்க

விடமாட் டாயா என்றுரைத்தே

.. விளையும் அறிவைக் குறைப்பார்;அம்


* 3-ஆம் பாடல் முற்றுப்பெறாமல், குளகமாக 4-ஆம் பாடலில் தொடர்கின்றது.


4)

மனிதர் போன்றே உலகினிலே

.. மதங்கள் கூட உள்ளனவே

புனிதம் கெடுமே என்பாரே

.. பொறாரே கேள்வி கேட்போரைக்

குனிய வைத்துக் குட்டிடுவார்

.. கொள்கை நம்பா விட்டால்நீ

இனிப்பாழ் நரகில் வீழ்ந்தழிவாய்

.. என்று சொல்லிப் பழித்திடுவார்!


5)

ஆள்வோர் ஆட்சிக் காபத்தே

.. அடிமை அறிவு பெற்றுவிட்டால்

கேள்வி கேட்டல் நம்முரிமை

.. கேட்டால் தானே வருமறிவு

வேள்வி கூட அதுவாகும்

.. மேலும் மேலும் கேள்விபல

மூள்ப வர்க்கே முடிவில்லா

.. முதல்வன் ஞானம் அளிப்பானே.


6) --- (அறுசீர் விருத்தம் - 5 மா + காய் - வாய்பாடு) ---

ஏனேன் என்(று)ஆ ராய்ந்து வந்தால் இங்கே(து) அறியாமை

நானேன் வந்தேன் நான்ஆர் என்ற ஞானம் நல்கிடுவான்

ஆனே(று) உடையான் உமைஓர் கூறன் அறிவே வடிவானான்

வானே நிலனே என்றெல் லாமாய் வரும்எம் பெருமானே.


வி. சுப்பிரமணியன்

------------- -------------


Wednesday, August 26, 2026

G.34 - "கவிதை எனக்கு ..." - கவியரங்கம் 38

G.034

இது 2013-இல் எழுதப்பட்டது.


2013-08-18

G.34 - "கவிதை எனக்கு ..." - கவியரங்கம் 38

கவிதை எனக்கு?!

------------

0-1) --- இறைவணக்கம் --- (நாலடித்தரவு கொச்சகக் கலிப்பா) ---

பாட்டிதரு பிட்டுகந்த பரம்பொருளே பழவோலை

காட்டிவந்து சுந்தரருக் கருள்புரிந்த கண்ணுதலே

ஈட்டியவல் வினைதீர்க்கும் எம்பெருமான் என்றுமுனைப்

பாட்டிசைத்துப் பரவியடி பணிவதற்குப் பணித்தருளே.


பாட்டி - வந்தி - திருவிளையாடற்புராணத்திற் பிட்டுக்கு மண்சுமந்த படலம் காண்க;

கண்ணுதல் - நெற்றிக்கண்ணன்;


0-2) --- அவைவணக்கம் --- (வஞ்சிவிருத்தம் - விளம் மா காய் - வாய்பாடு) ---

விழுமிய பாடல் எதிர்பார்த்துக்

குழுமிய அவையீர்க் கென்வணக்கம்

எழுதிய பாட்டை இயம்புகின்றேன்

பழுதிருந் தால்நீர் பகரீரே.


விழுமிய - சிறந்த;

பகரீர் - சொல்லுங்கள்;


1) --- (எண்சீர் விருத்தம் - புளிமா புளிமா புளிமா கூவிளம் - அரையடி வாய்பாடு) ---

கவிதை எமக்குத் தொழிலென் பார்சிலர்

.. கவிதை எமக்கு விருப்பென் பார்சிலர்

கவிதை எமக்குக் கரும்பென் பார்சிலர்

.. கவிதை எமக்கு வருமென் பார்சிலர்

கவிதை எமக்கு விருந்தென் பார்சிலர்

.. கவிதை எமக்கு மருந்தென் பார்சிலர்

கவிதை எனக்கர்ச் சனையென் றான்அவன்

.. கவிதை தனக்குப் பொருளென் றாகியே.


2) --- கவிதை யாருக்கு? - (கலிவிருத்தம் - விளம் மா விளம் மா - வாய்பாடு) ---

புவிதனிற் பிறந்து பொழுதினைப் போக்கிச்

செவிதனிற் சிவனார் திருப்புகழ் கேளாச்

செவிடரின் மொழிக்கோ தினம்தினம் யாக்கும்

கவிதையும் எனக்கோ கண்ணுத லாற்கே.


செவிடர் இன்மொழி - செவிடர்கள் சொல்லும் பாராட்டு;

யாத்தல் - தொகுத்தல்; செய்யுள் அமைத்தல்;


3) --- (கலிவிருத்தம் - விளம் மா மா மா - வாய்பாடு) ---

வெற்றுரைத் தொடரால் விளையும் ஒன்றாய்

மற்றவர் படித்து மறப்ப தற்கோ

நற்றவர் நயக்கும் நரைவெள் ளேற்றன்

பொற்றுணை அடியைப் புகழ்வ தற்கே.


நரை-வெள்-ஏற்றன் பொற்றுணை அடி - வெள்ளை எருதின்மேல் ஏறும் சிவன் பொன்னடி;


4) --- (அறுசீர் விருத்தம் - மா விளம் தேமா - அரையடி வாய்பாடு) ---

கூடா நட்பினைக் கூடிக் .. கோது சேர்வழி ஓடி

ஆடா ஆட்டமும் ஆடி .. அல்லல் நானடை யாமல்

நாடா என்னையும் நாடி .. நாளும் நற்றமிழ் மாலை

பாடாய் என்றருள் செய்த .. பாய்வெள் ளேறமர்ந் தாற்கே.


கோது - குற்றம்;

ஏறு அமர்ந்தாற்கு - இடபத்தை ஊர்தியாக விரும்பிய சிவபெருமானுக்கு;


5) --- (அறுசீர் விருத்தம் - மா மா காய் - அரையடி வாய்பாடு) ---

பொய்யே கவிதைக் கழகென்று .. புவியிற் சிலரின் றுரைக்கின்றார்

ஐயே அதையும் பாராட்டி .. அகம கிழ்ந்தார் பலரிங்கு

மெய்யே பாட்டுக் கழகாகும் .. மேலை வினைக்குத் தழலாகும்

மையேர் கண்டன் கழல்நாடும் .. வார்த்தை ஒன்றே மனம்பாடும்.


மை - கருமேகம்;

ஏர்தல் - ஒத்தல்;


6) --- (எண்சீர் விருத்தம் - காய் காய் மா தேமா - அரையடி வாய்பாடு) ---

மங்கையவர் மையலிலே வந்தெ ழுந்த

.. வார்த்தைகளைச் சிலரடுக்கிப் பாட்டிஃ தென்பார்

இங்குவிலை போவதெது என்று நாடி

.. எந்நாளும் பொருளுக்கா அதையே பாடித்

தங்கவிதை என்றுசிலர் மயங்கி நிற்பார்

.. தரணியுளோர் புகழுரைக்காச் சிலர்தொ டுப்பார்

கங்கையடை சடையுடையான் காரார் கண்டன்

.. கவிதையெனக் குமைகேள்வன் கழல்க ருத்தே.


எதுவென்று - எது என்று; (அப்பர் தேவாரம் - 4.12.4 - "புறங்காடு பதியாவ திதுவென்று பலர்பாடும் பழனத்தான்");

தங்கவிதை - 1. தம் கவிதை; / 2. தங்கம்+விதை (பணங்காய்ச்சி-மரத்தின் விதை);

புகழுரைக்கா - புகழுரைக்காக; கடைக்குறை விகாரம்;

கவி - பாட்டு;

கவி தை எனக்கு உமைகேள்வன் கழல் கருத்தே - பாடல் தொடுக்கும் எனக்குப் பார்வதிகோன் திருவடியே கருத்து; (தைத்தல் - தொடுத்தல்);


7) --- (பாடல் வகை ** - கூவிளம் தேமா கூவிளம் தேமா - வாய்பாடு) ---

கண்டதும் காதல் என்பது போலக்

கண்டதும் பாடல் என்றுள நாளில்

உண்டது நஞ்சு கொண்டலின் வண்ணம்

கொண்டது கண்டம் என்றுளன் கூற்றைப்

பண்டுதை காலன் பாய்விடை யான்சீர்

பண்டுதை பாட்டிற் பாடுகின் றேனே.


கண்டதும் - 1. பார்த்தவுடன்; 2. எதுவும்;

கொண்டல் - மேகம்;

பண்டுதை - 1. பண்டு உதை; 2. பண் துதை;

பண்டு - முற்காலத்தில்;


** Note: As per Prof. Pasupathy: யாப்பருங்கலத்தில் "புறநடை" என்ற பகுதியில் சொல்லப்படும் "ஒப்புமை" என்ற விதியின்படி, இப்பாடலை "நாற்சீர் கொண்ட ஆறடியான் வந்த கலிவிருத்தம்" எனலாம்.


8) --- (நாலடித்தரவு கொச்சகக் கலிப்பா) ---

ஒருகவிதை என்றாலும் ஓதுபவர் உள்ளங்கள்

உருகவிதை ஆகிப்பல் பிறப்பளிக்கும் வெவ்வினையும்

கருகவிதை ஒன்றின்றி விளைவிக்க வல்லவெந்தை

தருகவிதை நல்லன்பர் தம்மன்பன் சங்கரனே.


உரைநடை அமைப்பில்:

a)

ஒரு கவிதை என்றாலும், ஓதுபவர் உள்ளங்கள்

உருக! விதை ஆகிப் பல்பிறப்பு அளிக்கும் வெவ்வினையும்

கருக! விதை ஒன்று இன்றி விளைவிக்க வல்ல எந்தை,

நல்-அன்பர்தம் அன்பன், சங்கரன் இதைத் தருக.


b)

("தருகவிதை = தரு+கவிதை" - என்று வினைத்தொகையாகக் கொண்டும் பொருள்கொள்ளலாம். அப்படிக் கொண்டால்:

விதை ஒன்று இன்றி விளைவிக்க வல்ல எந்தை, நல்-அன்பர்தம் அன்பன் சங்கரன் தரு-கவிதை ஒரு கவிதை என்றாலும், ஓதுபவர் உள்ளங்கள் உருக! விதை ஆகிப் பல் பிறப்பு அளிக்கும் வெவ்வினையும் கருக! )


உருக, கருக, தருக - வியங்கோள் வினைமுற்று; (உருக - உருகட்டும்; கருக - கருகட்டும்; தருக – தரட்டும்);

தருகவிதை - இதைத் தருக;

(அப்பர் தேவாரம் - 4.4.2 - "நரியைக் குதிரைசெய் வானும் ..... விச்சின்றி நாறு செய்வானும்..." - விதை இன்றியே பயிரை உண்டாக்க வல்லவனும்);


(கந்தர் அலங்காரம் - 100 -

கிழியும் படிஅடற் குன்றெறிந் தோன்கவி கேட்டுருகி

இழியும் கவிகற் றிடாதிருப் பீர்எரி வாய்நரகக்

குழியும் துயரும் விடாய்ப்படக் கூற்றுவனுார்க் குச்செல்லும்

வழியும் துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே.)


வி. சுப்பிரமணியன்

------------- -------------


Wednesday, June 10, 2026

G.32 - தமிழ்ப் புத்தாண்டு - "சார்வரி" (Śārvarī)

G.032

இப்பாடல் 2020-இல் எழுதப்பட்டது.


2020-04-13

G.32 - தமிழ்ப் புத்தாண்டு - "சார்வரி" (Śārvarī)

------------


1) --- (அறுசீர் விருத்தம் - "விளம் மா தேமா" - அரையடி வாய்பாடு) ---

சார்வரி ஆண்டு தன்னில் .. தரணியிக் கொரோனாத் துன்பம்

தீர்வுற அருள வேண்டும் .. திருமுடி மீது கங்கை

நீர்வரி அரவு திங்கள் .. நிலைபெற வைத்த தேவா

கூர்வடி வேலன் தன்னைக் .. கொடுத்தகண் ணுதலெம் மானே.


சார்வரி ஆண்டு-தன்னில் தரணி இக்-கொரோனாத் துன்பம் தீர்வுற அருள-வேண்டும் - சார்வரி வருடத்தில் உலகம் இந்தக் கொரோனா வைரஸ் (Covid-19) என்ற துன்பம் தீர்ந்து உய்ய அருள்வாயாக;

திருமுடிமீது கங்கைநீர் வரிஅரவு திங்கள் நிலைபெற வைத்த தேவா - தலைமீது கங்கைநதி, வரிகள் திகழும் பாம்பு, சந்திரன் இவற்றை அணிந்த தேவனே;

கூர்வடிவேலன்-தன்னைக் கொடுத்த கண்ணுதல் எம்மானே - கூரிய வேலை ஏந்தும் முருகனை அருளிய நெற்றிக்கண்ணை உடைய எம்பெருமானே. (வடி - கூர்மை; கூர்வடி - ஒருபொருட்பன்மொழி);


2) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---

கார்வரி, ஈட்டிய காசுவரி, வீட்டுவரி,

நீர்வரி, இருக்கின்ற நிலவரி, என்றுமிகச்

சேர்வரி கண்டிங்கியாம் திகைக்கின்றோம்; வந்தடைந்த

சார்வரி நீயேனும் தாவெமக்கு நிம்மதியே.


கார்வரி, ஈட்டிய காசுவரி, வீட்டுவரி, நீர்வரி, இருக்கின்ற நிலவரி - காருக்கு வரி, சம்பாதித்த வருமானத்துக்கு வரி, வீட்டுக்கு வரி, நீருக்கு வரி, நிலத்துக்கு வரி;

என்று மிகச் சேர்-வரி கண்டு இங்கு யாம் திகைக்கின்றோம் - என்று பற்பல வரிகளைக் கண்டு நாங்கள் தளர்கின்றோம்; (கண்டிங்கியாம் = கண்டு இங்கு யாம்; குற்றியலிகரம்);

வந்து அடைந்த சார்வரி நீயேனும் தா எமக்கு நிம்மதியே - வந்து சேர்ந்த சார்வரி வருஷமே, நீயாவது எங்களுக்கு நிம்மதியைத் தா;


வி. சுப்பிரமணியன்

------------- -------------


G.31 - தேடித் தேடி - கவியரங்கம் 31

G.031

இப்பாடல் 2010-இல் எழுதப்பட்டது.


2010-03-20

G.31 - தேடித் தேடி - கவியரங்கம் 31

------------

0-1) -- கடவுள் வாழ்த்து --

தேடித் தேடி இருவரன்று

.. திகைத்து நிற்க உயர்தீயே!

ஆடிப் பாடி அடிபோற்றும்

.. அன்பர் உள்ளே உறைவாயே!

நாடிக் கைகள் குவித்தேனே

.. நானும் உன்னைத் தமிழ்கொண்டு

பாடிப் பாதம் பணிந்தேனே

.. பார்த்த ருள்வாய் பசுபதியே!


1) -- நாலடி தரவு கொச்சகக் கலிப்பா ---

மூவாண்டு முடிவடையும் முன்னமே இவ்வாண்டு

போவானெப் பள்ளியெனப் பொழுதெல்லாம் சிந்தித்தே

ஆவாவென் றல்லாடி அங்குமிங்கும் மிகத்தேடி

ஈவாரே பெரும்பொருளும் ஏதோவோர் பள்ளிக்கே.


இவ்வாண்டு - 1) இந்த வருடம்; 2) இந்த வாண்டு;

ஆவாவென்று - ஆ ஆ என்று;


2) -- கலிவிருத்தம் - 4 தேமா ---

ஆட்டம் பாட்டம் ஆர்க்கு வேண்டும்

நாட்டம் எல்லாம் ஏட்டின் மேலே

காட்டு வாயென் கண்ணே என்று

வீட்டில் சொல்வார் வேத வாக்காய்.


3) -- எண்சீர் விருத்தம் - 8 மா ---

'மண்டே' என்பார் திங்கள் என்னார்

.. வாழ வேற்று மொழியே தேவை

மண்டே என்பார் தமிழும் கற்றால்

.. மக்கட் காகக் காசைத் தந்தும்

கண்டார் காலில் விழுந்தும் ஏதோ

.. கல்லூ ரியிலே இடத்தை வாங்கிக்

கொண்டு வந்தி ருப்பார் இந்நாட்

.. கோலம் ஆவ(து) இஃதே அன்றோ.


மண்டு - மூடன்; (மண்டே - Monday);

இந்நாள் கோலம் - இக்கால நிலை;


4) --- அறுசீர் விருத்தம் - 6 மா ---

ஆசை விண்ணை எட்டும்

.. அதுவே ஆளை ஆட்டும்

காசைத் தருவ தொன்றே

.. கல்வி என்பார் இன்று

மாசை நீக்க எண்ணார்

.. வழியை என்றும் நண்ணார்

ஓசை ஒன்றே செய்வார்

.. உலகில் உழன்று தொய்வார்.


வழியை என்றும் நண்ணார் - நல்ல வழியை என்றும் சேரமாட்டார்கள்;

ஓசை ஒன்றே செய்வார் - பொருளற்ற பேச்சே பேசுவார்; அலம்பல் செய்வார்;


5) -- நாலடி தரவு கொச்சகக் கலிப்பா ---

வளர்கிறநாள் விளையாட்டே மனம்கருதும்; வலிமைமிகு

இளமையிலே இளமயிலே என்றென்றும் எண்ணத்தில்;

தளர்வடையும் முதுமையிலோ தாங்கொண்ணாத் தனுவலிதான்

உளம்நினையும்; உலகினிலே உளநாள்கள் இப்படியே;


இளமயில் - இளம் பெண்;

தனு - உடல்;


6) -- கலித்துறை? ---

படித்து முடித்து வேலை தேடிக் - காலைப்

பிடித்துப் பிடித்துப் பதவி தேடி - நாளும்

நடித்து நடித்துக் காசைத் தேடில் - வாழ்வை

முடிக்கத் துடிக்கும் நமனும் தேடு வானே.


7) -- அறுசீர் விருத்தம் - மா மா காய் ---

தேடி வந்த கூற்றுவனைச்

.. சீறி உதைத்த சேவடியைப்

பாடிப் பணிந்து மகிழ்கின்ற

.. பத்தர் குழாத்தை எந்நாளும்

கூடிக் களிக்க எண்ணாமல்

.. குவல யத்தில் வீணாக

ஓடிப் பேய்த்தேர் முகக்கின்றார்

.. உயிரை வளர்க்க அறியாரே.


பத்தர்குழாம் - அடியார்கூட்டம்;

குவலயம் - பூமி;

பேய்த்தேர் - கானல் நீர்;

முகத்தல் - மொள்தல்;


8) -- இன்னிசை வெண்பா ---

தேடுவது நம்மியல்பு; தேடற்குத் தக்கதை

நாடுவது நல்லறிவு; நாளெல்லாம் காசுக்கே

ஓடுவது புல்லறி(வு); உள்ளமொன்றி முக்கணனைப்

பாடுவதே உய்வுதரும் பார்.


புல்லறிவு - அறியாமை;


வி. சுப்பிரமணியன்

------------- -------------


Friday, May 1, 2026

G.28 - என்னாடு - கவியரங்கம் 35

G.028

இப்பாடல் 2011-இல் எழுதப்பட்டது.


2011-08-07

G.28 - என்னாடு - கவியரங்கம் 35

------------

(அறுசீர் விருத்தம் - மா மா காய் - அரையடி வாய்பாடு)


1)

எதிர்கட் சியாளர் செய்ததுதான்

.. என்ன பன்னாள் சபையினிலே

குதிர்போல் ஒன்றும் செய்யாமல்

.. குந்தி இருந்த செயலொன்றே

புதிர்தான் அவரின் புரட்சியெலாம்

.. போடும் உங்கள் ஓட்டுகளை

எதிலும் வெல்லும் எம்தலைவர்

.. இவர்க்கே என்று மொழிவாரே.


எதிர்கட்சி - வினைத்தொகை - எம் கட்சியை எதிர்க்கும் கட்சி;


2)

பின்னிப் பின்னி வார்த்தைகளைப்

.. பேசிப் பேசிப் பெரிதுவப்பார்

கன்னித் தமிழைக் காக்கின்றோம்

.. காலம் கடந்த செம்மொழியே

என்ன செய்தார் எதிர்கட்சி

.. எனவே ஓட்டை எமக்களிப்பீர்

இன்னும் செய்வோம் இதுபோல

.. என்றே மாற்றம் மொழிவாரே.


காலம் கடந்த - காலத்தைக் கடந்த; காலாவதியான;

ஓட்டை - குடவோலையை (=வாக்கு = vote); பயனற்ற (any cracked article);

என்றேமாற்றம் - என்றே மாற்றம் / என்று ஏமாற்றம்;

மாற்றம் - வார்த்தை;


3)

பேரூ ராட்சி பிடித்துவிட்டோம்

.. பிறகு கோட்டை பிடிப்போமே

ஊரூ ராகப் பிரசாரம்

.. ஒலியும் காதைப் பிளந்திடுமே

ஆரூ ரெனினும் நிலையிதுவே

.. ஆட்சிக் காக நாடெங்கும்

காரூர் பணமும் கைம்மாறும்

.. கறையில் லாத கரமென்பார்.


ஆரூர் எனினும் - ஆர் ஊர் எனினும் - எந்த ஊராக இருந்தாலும்;

கார் - கருமை;

கார் ஊர் பணம் - கறுப்புப் பணம்; (ஊர்தல் - ஏறுதல்; பரவுதல்);

கைம்மாறுதல் - கைகள் மாறும்;

கறை - மாசு; குற்றம்; கறுப்பு;


4)

என்றும் நாங்கள் மறவோமே

.. எங்கள் தலைவர் எப்போதும்

என்ற னாடே எனக்கெல்லாம்

.. என்று வாழும் எளிமையினார்

சென்ற காலத் திற்கூடச்

.. சிறுவ ராக இருந்தாலும்

ஒன்றை எண்ணும் அவருள்ளம்

.. ஓயா தென்னா டென்றென்றே.


5)

சும்மா உரைக்கும் சொல்லன்று

.. சூழ்ந்த கூட்டத் திடையெங்கோ

அம்மே என்ற ஒலிகேட்க

.. அங்கே சென்ற தவர்கவனம்

நம்மா டிங்கே என்றறிந்து

.. நாண மின்றி நவின்றாரே

அம்மாண் தலைவர் என்னாடே

.. ஆரும் தொடாதீர் அதையென்றே.


அம்மே - ஆடுகளின் ஒலிக்குறிப்பு;

அவர் கவனம் - தலைவரின் கவனம்;

மாண்-தலைவர் - பெருந்தலைவர்; (மாண்தல் - மாட்சிமைப்படுதல்);


6)

என்னா டென்னா டென்றுரைப்பார்

.. இவரே தலைவர் என்றென்றும்

இந்நாட் டைக்காத் துழைத்திடுவார்

.. என்ற எண்ணம் மாறியதே

முன்னாள் ஆடு மேய்த்திருந்த

.. முதன்மை எல்லாம் அறிந்தாலும்

என்னே செய்ய! தலைவரெலாம்

.. என்று மாடே தேடுவரே!


என்னாடு - என் நாடு / என் ஆடு;

என்றுமாடே தேடுவர் - என்றும் ஆடே தேடுவர்; என்றும் மாடே தேடுவர்;

மாடு - செல்வம்;


வி. சுப்பிரமணியன்

------------- -------------


G.42 - உயர உயர - கவியரங்கம் 30

G.042 இ து 2009- இல் எழுதப்பட்டது . 2009-06-28 G . 4 2 - உயர உயர - கவியரங்கம் 30 ------------ 0-1) --- இறைவணக்கம் --- ( வஞ்சி ...