Friday, May 1, 2026

G.28 - என்னாடு - கவியரங்கம் 35

G.028

இப்பாடல் 2011-இல் எழுதப்பட்டது.


2011-08-07

G.28 - என்னாடு - கவியரங்கம் 35

------------

(அறுசீர் விருத்தம் - மா மா காய் - அரையடி வாய்பாடு)


1)

எதிர்கட் சியாளர் செய்ததுதான்

.. என்ன பன்னாள் சபையினிலே

குதிர்போல் ஒன்றும் செய்யாமல்

.. குந்தி இருந்த செயலொன்றே

புதிர்தான் அவரின் புரட்சியெலாம்

.. போடும் உங்கள் ஓட்டுகளை

எதிலும் வெல்லும் எம்தலைவர்

.. இவர்க்கே என்று மொழிவாரே.


எதிர்கட்சி - வினைத்தொகை - எம் கட்சியை எதிர்க்கும் கட்சி;


2)

பின்னிப் பின்னி வார்த்தைகளைப்

.. பேசிப் பேசிப் பெரிதுவப்பார்

கன்னித் தமிழைக் காக்கின்றோம்

.. காலம் கடந்த செம்மொழியே

என்ன செய்தார் எதிர்கட்சி

.. எனவே ஓட்டை எமக்களிப்பீர்

இன்னும் செய்வோம் இதுபோல

.. என்றே மாற்றம் மொழிவாரே.


காலம் கடந்த - காலத்தைக் கடந்த; காலாவதியான;

ஓட்டை - குடவோலையை (=வாக்கு = vote); பயனற்ற (any cracked article);

என்றேமாற்றம் - என்றே மாற்றம் / என்று ஏமாற்றம்;

மாற்றம் - வார்த்தை;


3)

பேரூ ராட்சி பிடித்துவிட்டோம்

.. பிறகு கோட்டை பிடிப்போமே

ஊரூ ராகப் பிரசாரம்

.. ஒலியும் காதைப் பிளந்திடுமே

ஆரூ ரெனினும் நிலையிதுவே

.. ஆட்சிக் காக நாடெங்கும்

காரூர் பணமும் கைம்மாறும்

.. கறையில் லாத கரமென்பார்.


ஆரூர் எனினும் - ஆர் ஊர் எனினும் - எந்த ஊராக இருந்தாலும்;

கார் - கருமை;

கார் ஊர் பணம் - கறுப்புப் பணம்; (ஊர்தல் - ஏறுதல்; பரவுதல்);

கைம்மாறுதல் - கைகள் மாறும்;

கறை - மாசு; குற்றம்; கறுப்பு;


4)

என்றும் நாங்கள் மறவோமே

.. எங்கள் தலைவர் எப்போதும்

என்ற னாடே எனக்கெல்லாம்

.. என்று வாழும் எளிமையினார்

சென்ற காலத் திற்கூடச்

.. சிறுவ ராக இருந்தாலும்

ஒன்றை எண்ணும் அவருள்ளம்

.. ஓயா தென்னா டென்றென்றே.


5)

சும்மா உரைக்கும் சொல்லன்று

.. சூழ்ந்த கூட்டத் திடையெங்கோ

அம்மே என்ற ஒலிகேட்க

.. அங்கே சென்ற தவர்கவனம்

நம்மா டிங்கே என்றறிந்து

.. நாண மின்றி நவின்றாரே

அம்மாண் தலைவர் என்னாடே

.. ஆரும் தொடாதீர் அதையென்றே.


அம்மே - ஆடுகளின் ஒலிக்குறிப்பு;

அவர் கவனம் - தலைவரின் கவனம்;

மாண்-தலைவர் - பெருந்தலைவர்; (மாண்தல் - மாட்சிமைப்படுதல்);


6)

என்னா டென்னா டென்றுரைப்பார்

.. இவரே தலைவர் என்றென்றும்

இந்நாட் டைக்காத் துழைத்திடுவார்

.. என்ற எண்ணம் மாறியதே

முன்னாள் ஆடு மேய்த்திருந்த

.. முதன்மை எல்லாம் அறிந்தாலும்

என்னே செய்ய! தலைவரெலாம்

.. என்று மாடே தேடுவரே!


என்னாடு - என் நாடு / என் ஆடு;

என்றுமாடே தேடுவர் - என்றும் ஆடே தேடுவர்; என்றும் மாடே தேடுவர்;

மாடு - செல்வம்;


வி. சுப்பிரமணியன்

------------- -------------


Saturday, January 17, 2026

G.27 - இலக்கணம் படுத்தும் பாடு (குறும்பா - Limerick)

G.027

வை 2019-இல் எழுதப்பெற்ற பாடல்கள்.


2019-02-10

G.27 - இலக்கணம் படுத்தும் பாடு (குறும்பா - Limerick)

=============

(Limerick)

(குறும்பா அமைப்பு.

அடிகள் 1, 2, 5 - காய் காய் மா - அடியுள் வெண்டளை. ஓர் எதுகை. அடி ஈற்றில் இயைபு.

அடிகள் 3, 4 - காய் காய் - அடியுள் வெண்டளை. ஓர் எதுகை. அடி ஈற்றில் இயைபு.)


1)

இலக்கணமென் றால்நடுங்கார் ஆரே

கலக்கமது தீர்வழிகா ணாரே

.. புத்தகங்கள் வாசித்தும்

.. நித்தமிக யோசித்தும்

இலக்குதனை என்றுமடை யாரே.


பதம் பிரித்து:

இலக்கணம் என்றால் நடுங்கார் ஆரே?

கலக்கமது தீர்-வழி காணாரே;

.. புத்தகங்கள் வாசித்தும்,

.. நித்த(ம்)மிக யோசித்தும்,

இலக்குதனை என்றும் அடையாரே!


2)

எட்டியுமி லக்கணமும் ஒக்கும்

விட்டுவிட நெஞ்சமும்து டிக்கும்

.. .. புணர்ச்சியெனில் அச்சமென்றோர்

.. .. உணர்ச்சியெழும் இல்லைவென்றோர்

நட்டலும்க னாவினில்ந டக்கும்.


எட்டியும் இலக்கணமும் ஒக்கும் - இலக்கணம் எட்டிக்காய் போல் கசப்பது;

புணர்ச்சி எனில் அச்சம் என்று ஓர் உணர்ச்சி எழும் - புணர்ச்சி விதிகள் என்றால் பயமே தோன்றும்;

இல்லை வென்றோர் - (அதனை) வென்றவர்கள் இல்லை;

நட்டலும் கனாவினில் நடக்கும் - இலக்கணத்தை விரும்புவது கனவில்தான் நிகழும்!


3)

அல்வழிப்பு ணர்ச்சியென்ற போதே

நல்விழிப்பு ணர்ச்சியும்தங் காதே

.. .. தலைகீழாய் நின்றாலும்

.. .. இலையாவும் தின்றாலும்

வெல்வழியைக் காணுதலா காதே.


அல்வழிப்புணர்ச்சி என்ற போதே - "அல்வழிப் புணர்ச்சி" என்ற சொல்லைக் கேட்டதுமே;

நல் விழிப்பு உணர்ச்சியும் தங்காதே - உறக்கம் வந்துவிடும்;

தலைகீழாய் நின்றாலும் - பெருமுயற்சி செய்தாலும்;

இலை யாவும் தின்றாலும் - நினைவாற்றலுக்காகப் பல பச்சிலைகளை உண்டாலும்;

வெல்-வழியைக் காணுதல் ஆகாதே - இலக்கணத்தை வெல்லும் வழியைக் காண முடியாதே.


4)

வினைத்தொகைக்குக் காட்டூறு காயே

அனைத்துலக நூல்களில்பார்ப் பாயே

.. .. தயிர்ச்சோற்றின் நற்றுணையே

.. .. பயில்வோர்க்கும் பொற்றுணையே

மனத்திலிடும் மந்திரமாய் வாயே.


வினைத்தொகைக்குக் காட்டு ஊறுகாயே - வினைத்தொகைக்கு உதாரணம் ஊறுகாய்;

அனைத்து உலக நூல்களில் பார்ப்பாயே - எல்லா இலக்கண நூல்களிலும் இதே உதாரணத்தைக் காணலாம்;

தயிர்ச்சோற்றின் நற்றுணையே - தயிர்ச்சோற்றுக்கு ஏற்றது ஊறுகாய்;

பயில்வோர்க்கும் பொற்றுணையே - கற்போர்க்கும் இது பொன் போன்றது;

மனத்திலிடும் மந்திரம் ஆய்வாயே - இதுவே (தேர்வுகளில்) காக்கும் மந்திரம் என்று உணர்வாயாக!


வி. சுப்பிரமணியன்

------------- -------------


Thursday, October 16, 2025

G.26 - அடியும் முடியும் - (வேறு பாடல்கள்)

G.026

வை 2009-இல் எழுதப்பெற்ற பாடல்கள்.


2009-01-01 to 2009-07-01

G.26 - அடியும் முடியும் - (வேறு பாடல்கள்)

=============

(குறள்வெண்பாவில் முதலிலும் முடிவிலும் ஒரே சொல் வேறு பொருள்பட வருமாறு மடக்கு அமைந்தது)


முற்குறிப்பு: மதிசூடி துதிபாடி தொகுதி-3 நூலில் தொகுப்பில் இடம்பெறாத சில பாடல்கள் இவை. இச்சொற்களால் அமைந்த வேறு பாடல்கள் அத்தொகுப்பில் உள்ளன.


25-1) மதி

-----------

மதியில் தசமுகனை ஓர்விர லாலே

மிதித்தான் அணிவான் மதி.


மதி - 1. அறிவு; 2. சந்திரன்;


36-1) அசை

-----------------

அசைத்தஅர(வு) ஐயன் அரையிருக்கச் சென்னி

மிசையாடும் ஓர்பாம்(பு) அசைந்து.


அசைத்தல் - கட்டுதல்;

அசைதல் - இயங்குதல் (To move, stir);


60-1) குடி

-----------

குடிவிடம்சேர் கண்டனுக்குக் குற்றேவல் செய்யும்

அடியார் மனமே குடி.


குடிவிடம் - வினைத்தொகை - பருகிய நஞ்சு; (விடம் குடித்தல் என்பது இங்கே நஞ்சு உண்டலைச் சுட்டியது);

குடி - உறைவிடம்;


63-1) படை

--------------

படையெனத் தாக்கும் பழவினைதீர் ஈசன்

உடையானோர் சூலப் படை.


படை - 1. சேனை; 2. ஆயுதம்;

******


2009-01-01 to 2009-07-01

அடியும் முடியும் - (பொதுப்-பாடல்கள்)

=============

(குறள்வெண்பாவில் முதலிலும் முடிவிலும் ஒரே சொல் வேறு பொருள்பட வருமாறு மடக்கு அமைந்தது)


முற்குறிப்பு: இவை சிவபரமாக அமையாத பொதுப்பாடல்கள்.


1-b) முடி

--------------

முடிமுடி என்று முறைத்தார்; சமைத்து

முடித்தபின் பார்த்தேன் முடி!


முடி - 1. உச்சி; 2. கூந்தலை முடிதல்; 3. செய்து முடித்தல்; 4. இக்காலத் தமிழில் மயிர் என்ற பொருள்;


3-b) கொல்

--------

கொல்வெட்(டு) எனச்சிலர் கற்றுக் கொடுக்கிறார்

நல்வழி யென்(று)இஃதென் கொல்.


கொல் - 1. கொல்லுதல்; 2. ஓர் அசைச்சொல்;


4-b) கல்

------------

கல்லென்றும் கல்லார் சிலர்அவர் வாழ்வினில்

செல்லும் வழியெங்கும் கல்.


கல் - 1. கல்விகற்றல்; 2. கற்கள்;


5-b) பால்

----------

பால்வேண்டும்! பாலையில்காப் பிக்(கு)என்செய் வீர்!ஒரு

கால்பசு உண்டோஉம் பால்?


ஒருகால் - ஒருவேளை (perhaps);

உம்பால் - உம்மிடம்;


6-b) படு

--------

படுபடு என்றார். கொசுவலை இன்றி

நடுநடுத்தேன். சொன்னார் படு!


படுத்தல் - கிடத்தல்; படுத்துக்கொள்ளுதல்;

நடுநடுத்தல் - நடுங்குதல்;

படுதல் - துன்பமடைதல்;


7-b) நாட்டு

---------

நாட்டு நடப்பு நனிசிறக்க, வேற்றுமையை

ஓட்டு; மனத்திலன்பை நாட்டு.


நனி - மிக;

நாட்டுதல் - நிலைபெறச்செய்தல்;


8-b) காட்டு

---------

காட்டுவிலங் கின்கடையோர் கையில் விலங்கிட்டுப்

பூட்டு; திருந்தவழி காட்டு.


17-b) அறை

--------------

அறைவண்டு தேனுண் டுறங்கிவிட்டால் பூவே

நறைஆர் படுக்கை அறை.


அறைதல் - ஒலித்தல்; (ரீங்காரம் செய்தல்);

நறை - தேன்; வாசனை;

ஆர்தல் - மிகுதல்; பொருந்துதல்;


18-b) சிறை

-------------

சிறைஆர் கிளிக்குச் சிலமக்கள் வைத்தார்

அறையிலே கூண்டுச் சிறை.


சிறை- 1. சிறகு; 2. அடைக்கும் இடம்;


36-b) அசை

------------

அசைவிளக்கும் ஆசிரியர் அங்(கு)ஓர் குறட்டை

இசைகேட்டுச் சொன்னார், "அசை"!


அசை - 1. தமிழ்ச்செய்யுளின் உறுப்பு; 2. ஒருவரை 'அசை' என்று அசைக்கும்படி ஏவுவது; (அசைத்தல் - ஆட்டுதல்);


45-b) ஈறு

------------

(று)இன்றி என்றுமினிப்(பு) உண்டிருந்தால் உண்டாமே

பே(று)இவர்க்குப் பல்லின்றி ஈறு.


ஈறு - 1. முடிவு; அளவு; 2. பல்லுக்கு ஆதாரமாக உள்ள தசை;


52-b) தொக்கு

-----------------

தொக்கிருந்த(து) அத்தயிர்ச் சோற்றின் நடுவினில்

மிக்கிருந்த(து) ஆமலகத் தொக்கு.


தொக்கு - 1. சேர்ந்து; மறைந்து; 2. ஊறுகாய் வகை;

தொகுதல் - கூடுதல் (collect, accumulate); ஒன்றாதல் (to aggregate); மறைதல் (To be elided, as a particle in the combination of words);

ஆமலகம் - நெல்லி;


68-b) நகர்

------------

நகர வொணாவண்ணம் நல்ல நெரிசல்;

பகர்வார் பெயர்தான் நகர்!


x-1) சொல்வதை

---------------

சொல்வதை நற்றமிழில் சொல்ல அறிகிலர்;

செல்லிடம்எல் லாம்சொல் வதை.


சொல் வதை - தமிழ்க்கொலை;


x-2) கடன்

--------

கடன்என்று வாங்கியதைக் காலம் தவறா(து)

அடைத்தல் ஒருவர் கடன்.


கடன் - 1. இருணம் (debt; loan); 2. கடமை (duty, obligation);

அடைத்தல் - கடனடைத்தல்;


வி. சுப்பிரமணியன்

------------- -------------


Saturday, October 4, 2025

G.25 - எங்கே செல்கின்றேன்? - கவியரங்கம் 41

G.025

இப்பாடல் 2014-இல் எழுதப்பட்டது.


2014-10-17

G.25 - எங்கே செல்கின்றேன்? - கவியரங்கம் 41

-------------------

(அறுசீர் விருத்தம் - மா மா காய் - அரையடி வாய்பாடு)


1)

பாட்டுப் பாடி அன்னையவள்

.. பரிவோ டணைக்க மகிழ்வோடு

கேட்டுத் துயின்ற தொருகாலம்

.. கீதத் தோடு போதனைகள்

ஊட்டும் காலம் அதுவன்றோ

.. ஒன்று கூட உணராமல்

ஓட்டி விட்ட பருவத்தை

.. ஓரேன் எங்கே செல்கின்றேன்?


ஓரேன் - எண்ணமாட்டேன்; எண்ணிப் பாராத நான்;


2)

ஏட்டில் உள்ள பாடத்தை

.. இருந்து படிக்கும் பள்ளியிலும்

காட்டில் திரியும் வானரம்போல்

.. கத்தி ஓடி விளையாடி

வீட்டில் உள்ள பெரியோரின்

.. விருப்பப் படியும் நடவாமல்

ஓட்டி விட்ட பருவத்தை

.. ஓரேன் எங்கே செல்கின்றேன்?


3)

தீட்டும் மைசேர் கண்ணுடைய

.. தெரிவை மார்கள் மையலெனும்

வாட்டும் தீயின் வசப்பட்டு

.. மற்ற தெல்லாம் மறந்துவிட்டுக்

காட்டும் கடைக்கண் பார்வைக்கே

.. காத்துக் காத்து மனங்கலங்கி

ஓட்டி விட்ட பருவத்தை

.. ஓரேன் எங்கே செல்கின்றேன்?


தெரிவைமார்கள் - பெண்கள்;


4)

நாட்டம் எல்லாம் நானிலத்தில்

.. நாலு காசு சேர்ப்பதென

ஈட்டும் பொருளுக் கெனநாளும்

.. எங்கும் எதற்கும் எவரிடமும்

நீட்டும் கையை உடையேனாய்

.. நின்று வினைகள் பலகூட்டி

ஓட்டி விட்ட பருவத்தை

.. ஓரேன் எங்கே செல்கின்றேன்?


நாட்டம் - விருப்பம்; நோக்கம்;


5)

கூட்டிச் செல்லப் பாசத்தைக்

.. கொண்டு தூதர் வந்தவுடன்

வீட்டில் உள்ள உற்றார்கள்

.. விரைந்தெ டுங்கள் எனச்சொல்லிக்

கூட்டைக் காவிக் காட்டிலிட்டுக்

.. கொளுத்தி மூழ்கி என்நினைப்பை

ஓட்டி விடுவர் என்பதையும்

.. ஓரேன் எங்கே செல்கின்றேன்?


கூடு - உடல்;

காவுதல் - சுமத்தல்; தோளில் தண்டுகொண்டு சுமத்தல் (To carry on the shoulder);

காடு - சுடுகாடு;


(திருமந்திரம் - முதல் தந்திரம் - 5. யாக்கை நிலையாமை - #3

ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்

பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்

சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு

நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே. )


6)

பாட்டைப் பாடி நாவரசர்

.. பணிய இரங்கி மறைக்காட்டில்

பூட்டைத் திறந்த புண்ணியனே

.. பொருப்பு வில்லில் கணைகோத்துக்

கோட்டை மூன்றை எரித்தவனே

.. கொஞ்சம் கூட நில்லாமல்

சேட்டை செய்யும் என்மனத்தைச்

.. சிறிது நின்பால் திருப்பாயே.


(* வேதாரண்யத்தில் திருக்கோயில் கதவம் திருக்காப்புத் திறக்க வேண்டித் திருநாவுக்கரசர் பதிகம் பாடியதைப் பெரியபுராணத்தில் காண்க.

அப்பர் தேவாரம் - 5..10.1 - "பண்ணின் நேர்மொழியாள் உமைபங்கரோ" என்று தொடங்கும் பதிகத்தின் வரலாற்றில் காண்க);


பொருப்பு - மலை;


7)

நாட்டம் சேரும் நெற்றியினாய்

.. நரிகள் திரியும் சுடுகாட்டில்

ஆட்டம் பயிலும் பெற்றியினாய்

.. அங்கை கூப்பிப் பலதேவர்

கூட்டம் போற்றும் பெருமானே

.. கோலப் பிறையாய் ஒருகாலும்

கோட்டம் இல்லாய் நின்புகழே

.. கூறும் நாவை அருளாயே.


நாட்டம் சேரும் நெற்றியினாய் - நெற்றிக்கண்ணனே; (நாட்டம் - கண்);

நரிகள் திரியும் சுடுகாட்டில் ஆட்டம் பயிலும் பெற்றியினாய் - நரிகள் திரியும் சுடுகாட்டில் கூத்து ஆடுபவனே; (பயில்தல் - செய்தல்); (பெற்றி - பெருமை; தன்மை); (சம்பந்தர் தேவாரம் - 1.65.10 - "நடம்பயில்வார்");

அங்கை கூப்பிப் பலதேவர்-கூட்டம் போற்றும் பெருமானே - கைகூப்பிப் பல தேவர்கூட்டங்கள் போற்றும் பெருமானே;

கோலப் பிறையாய் - அழகிய பிறையைச் சூடியவனே;

ஒருகாலும் கோட்டம் இல்லாய் - எந்நாளும் நடுநிலை பிறழாதவனே; (ஒருகாலும் - எந்தக் காலத்திலும்); (கோட்டம் - வளைதல்; நடுநிலை பிறழ்தல்); (அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன்" - மனக்கோட்டம் இல்லாது எல்லார்க்கும் நன்மையைச் செய்யும் சிவபெருமான்);

நின் புகழே கூறும் நாவை அருளாயே - உன் புகழையே பாடும் நாக்கை எனக்கு அருள்வாயாக.


வி. சுப்பிரமணியன்

------------- -------------


Friday, October 3, 2025

G.24 - திரிகாலம்

G.024

இப்பாடல் 2014-இல் எழுதப்பட்டது.


2014-08-31

G.24 - திரிகாலம்*

-------------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)


* திரிகாலம் - 1. முக்காலம்; 2. திரி+காலம் - என்று வினைத்தொகையாகவும் கொள்ளலாம். (திரிதல் - அலைதல், மாறுதல், நிலைகெடுதல்);


நேற்று:

1)

கொஞ்சம் இருந்தாலும் குறைகளின்றி வாழ்ந்தார்கள்

வஞ்சம் மனத்திலின்றி வரவுக்குள் வாழ்ந்தார்கள்

செஞ்சொல் தமிழ்பாடித் தெய்வத்தைத் தொழுதார்கள்

நஞ்சம் கலவாத நல்வாழ்க்கை வாழ்ந்தார்கள்.


கலவாத - கலத்தல் இல்லாத;


2)

சுற்றம் தனைப்பேணிச் சுகமாக வாழ்ந்தார்கள்

குற்றம் புரிந்தாரைக் கொற்றவனும் தண்டித்து

மற்றக் குடிமக்கள் மனக்கலக்கம் தீர்த்திருந்தான்

மற்றும் வனத்துள்ள மாக்களும்தான் தழைத்தனவே.


மற்றக் குடிமக்கள் - பிறர்; (மற்ற என்ற சொல்லின்பின் வல்லொற்று மிகும்).

மற்றும் - மேலும்;

மா - விலங்கு;

* குற்றம் புரிந்தவர்களும் அந்நாட்டுக் குடிகளே. அவர்களுக்குத் தண்டனை பெறும் மனக்கலக்கம் உண்டு. அத்தகையோரால் பிறருக்கு ஏற்படக்கூடிய மனக்கலக்கத்தை மன்னன் தீர்த்தான்.


3)

நச்சரவம் எதுவென்று நாட்டுமக்கள் அறிந்திருந்தார்

தச்சர்முதல் தலைவர்வரை தம்பணிகள் செய்திருந்தார்

இச்சைகளை வரம்பிற்குள் இருத்திமனம் மகிழ்ந்திருந்தார்

உச்சிவெயில் தனில்மரங்கள் ஒதுங்கநிழல் தந்தனவே.


நச்சரவம் - விஷப்பாம்பு;


இன்று:

4)

கொஞ்சம் இருந்தாலும் கொடுஎன்று பிடுங்குகின்றார்

நெஞ்சில் பலவிருப்பம் நித்தமெழக் கடன்வாங்கித்

துஞ்சும் வரைஅடைத்துத் துன்பத்தில் உழல்கின்றார்

வெஞ்சொல் உரையாநாள் வீணென்றே எண்ணுகின்றார்


நித்தம் - தினந்தோறும்; எப்பொழுதும்;

துஞ்சும்வரை - இறக்கும்வரை;

வெஞ்சொல் உரையாநாள் - கொடும்சொற்களைப் பேசாத நாள்;


5)

குற்றம் பலபேசிக் குடும்பத்தைப் பிரிக்கின்றார்

கற்றுத் தரத்தொலைக் காட்சிகளில் தொடர்களுண்டே

வெற்றுக் கதைபேசிக் காலத்தை வீணாக்கிக்

கற்றைப் பணமொன்றே கருத்தாகி அலைகின்றார்.


6)

காற்றினையும் மாசாக்கிக் காட்டினையும் கரியாக்கி

ஆற்றுமணல் காசாக்கி அடுத்ததலை முறைக்கிடரே

ஏற்றுவதை எண்ணாமல் இயங்குகிற காலமிது

மாற்றமிது மறுப்பில்லை முன்னேற்றம் இதுதானோ?


நாளை:

7)

மாற்றம் வரவேண்டும் தடுமாற்றம் அறவேண்டும்

ஆற்றும் செயல்களினால் அனைத்துயிர்க்கும் நலம்வேண்டும்

காற்றும் நதிநீரும் கனைகடலும் கறைதீரப்

போற்றும் மனம்பெற்றால் பொற்காலம் அதுதானே.


கனைகடலும் - ஒலிக்கின்ற கடலும்;


வி. சுப்பிரமணியன்

------------- -------------


Thursday, September 25, 2025

G.23 - மனித தெய்வம் யார்? - கவியரங்கம் 49

G.023

இப்பாடல் 2019-இல் எழுதப்பட்டது.


2019-01-19

G.23 - மனித தெய்வம் யார்? - கவியரங்கம் 49

-------------------------

(கட்டளைக் கலிப்பா)

(அப்பர் தேவாரம் - 5.1.1 - "அன்னம் பாலிக்கும்");

(சம்பந்தர் தேவாரம் - 3.114.1 - "பாயு மால்விடை")


1)

தெய்வம் என்றவோர் சொல்லினைக் கேட்டதும்

.. திரைம லிந்த கடலது சூழ்தரும்

வையம் தன்னிலே வாழ்பவர் சிந்தையில்

.. வந்து நிற்பது என்னவென் றெண்ணினால்

கையில் உள்ள விரல்களைக் கொண்டுநாம்

.. கணக்கி டற்கரி தாவதைக் காண்பதில்

ஐயம் சற்றும் இலைஇதன் காரணம்

.. ஆய்ந்து சொன்னவர் சொல்லறி யாமையே.


எண்ணினால் - 1. சிந்தித்தால்; 2. கணக்கு எடுத்தோம் என்றால்;

கையில் உள்ள விரல்களைக் கொண்டு நாம் கணக்கிடற்கு அரிது ஆவதைக் காண்பதில் ஐயம் சற்றும் இலை - இருகை-விரல்களால் எண்ண முடியாது என்பதில் சந்தேகம் இல்லை; = மிகப் பல;

ஆய்ந்து சொன்னவர் சொல் அறியாமையே - 1. ஞானியர் சொல்லை மக்கள் அறியாது இருப்பதே; 2. ஞானியர் சொல்கின்ற அறியாமை என்ற விஷயம்;


2)

கடவுள் உள்ளான் எனில்அவன் தோற்றத்தைக்

.. காட்டு வீர்என் றொருகுழுச் சொல்லிடும்

மடமை நீங்கியெம் கூட்டத்தில் சேர்ந்திட

.. வாரும் என்றொரு பக்கம் அலறிடும்

அடஅ வன்பேர் அதுவன் றிதுவெனும்

.. அங்கு மற்றொரு கூட்டம் உலகினில்

தொடரும் இந்தச்சொற் போர்களைச் செய்பவர்

.. தூய அன்பினைச் சற்றும் அறிகிலார்.


தோற்றம் - உருவம்; வடிவம்; காட்சி;

அட அவன் பேர் அது அன்று இது எனும் - "அட, இறைவன் பெயர் அஃது அன்று, இறைவன் பெயர் இஃது என்று சொல்லும்"; (அட – அடா - இகழ்வு, வியப்பு முதலியவற்றை வெளிப்படுத்தும் ஒலிக்குறிப்பு);

அறிகிலார் - அறியமாட்டார்;


3)

அன்னை யைத்தெய்வம் என்று கருதுநீ

.. அப்ப னைத்தெய்வம் என்று கருதுநீ

உன்னை நல்வழி யிற்செலுத் தும்குரு

.. உனக்குத் தெய்வம் எனநீ கருதிடு

பின்னும் வந்த விருந்துமோர் தெய்வமாப்

.. பேணு வாயென் றதுதைத் திரீயம்தான்

மன்னும் நான்மறை சொன்னதை நானில

.. மாந்தர் கேட்டிலர் போல்தெரி கின்றதே.


பின்னும் - மேலும்;

விருந்து - அதிதி;

தைத்திரீயம் - தைத்திரீய உபநிஷத்;


मातृ देवो भव। पितृ देवो भव। आचार्य देवो भव। अतिथि देवो भव॥

The mantras are from the Taittiriya Upanishad, Shikshavalli I.11.2 that says: matru devo bhava, pitru devo bhava, acharya devo bhava, atithi devo bhava. = "be one for whom the Mother is God, be one for whom the Father is God, be one for whom the Teacher is God, be one for whom the guest is God."

(https://en.wikipedia.org/wiki/Taittiriya_Upanishad )


4)


ஈசன் எங்குளன் என்று வினவிடும்

.. எவர்க்கும் நாவுக் கரசர் இயம்பினார்

வாசல் வந்தடை பத்தர்கள் யாவரும்

.. மழுவை ஏந்திய முக்கணன் ஆகவே

நேச மாகி உபசரித் தின்புறும்

.. நீர்மை கொண்டவர் நெஞ்சே இறையவன்

வாசம் செய்திடும் கோயில் அறியுங்கள்

.. மற்றெங் கும்சென்று தேடவேண் டாவென்றே.


நீர்மை - சிறந்த குணம்;


(அப்பர் தேவாரம் - 6.61.3 - "எவரேனுந் தாமாக இலாடத்து இட்ட திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி.. .. ஈசன் திறமே பேணிக் கவராதே தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே" - இறைவனிடத்துச் செய்யும் செயல்களையே அடியவரிடத்தும் விரும்பிச் செய்து, அங்ஙனம் செய்யும்பொழுது இறைவனையும் அடியவரையும் ஒரே நிலையில் மனத்துக்கொண்டு தொழும், அடியவர் உள்ளத்தில் கன்றாப்பூர் நடுதறியப்பனான சிவபெருமானைக் காணலாம்);

(அப்பர் தேவாரம் - 5.1.10 - "நாடி நாரணன் நான்முகன் என்றிவர் தேடியும் திரிந்தும் காண வல்லரோ மாடமாளிகை சூழ் தில்லை-அம்பலத்து ஆடி பாதம் என் நெஞ்சுள் இருக்கவே.");


5)

மீண்டும் மாந்தருள் தெய்வம் எவரென்ற

.. வினாவ கத்தினில் வந்திடின்? சூலைதீர்த்

தாண்டு கொள்ளப்பெற் றார்தெளி விக்கின்றார்;

.. அளவி லாநிதி நாடிவை தந்தாலும்

தீண்டோம் மாதே வனுக்கன் பிலாரெனின்;

.. தேகம் தேய்ந்த தொழுநோயர் என்றாலும்

நீண்ட வேணியற் கன்பரே என்றால்நாம்

.. நினைந்து போற்றி வணங்கும் கடவுளே.


பதம் பிரித்து:

மீண்டும் மாந்தருள் தெய்வம் எவர் என்ற

.. வினா அகத்தினில் வந்திடின்? சூலைதீர்த்து

ஆண்டுகொள்ளப் பெற்றார் தெளிவிக்கின்றார்;

.. "அளவு இலா நிதி நாடு இவை தந்தாலும்

தீண்டோம் மாதேவனுக்கு அன்பு இலார் எனின்;

.. தேகம் தேய்ந்த தொழுநோயர் என்றாலும்

நீண்ட வேணியற்கு அன்பரே என்றால் நாம்

.. நினைந்து போற்றி வணங்கும் கடவுளே".


சூலை தீர்த்து ஆண்டுகொள்ளப்பெற்றார் தெளிவிக்கின்றார் - சிவபெருமானால் சூலைநோயைத் தீர்த்து ஆட்கொள்ளப்பெற்றவரான திருநாவுக்கரசர் தெளிவுபடுத்துகின்றார்;

(அப்பர் தேவாரம் - 6.93.3 - "முடிகொண்டார் .. .. துடிகொண்டார் கங்காளம் தோள்மேல் கொண்டார் சூலைதீர்த்து அடியேனை ஆட்கொண்டாரே");


(அப்பர் தேவாரம் - 6.95.10 -

சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து,

.. தரணியொடு வானாளத் தருவ ரேனும்,

மங்குவார் அவர்செல்வம் மதிப்போம் அல்லோம்,

.. மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லாராகில்;

அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயராய்

.. ஆ உரித்துத் தின்றுழலும் புலையரேனும்

கங்கை வார்சடைக் கரந்தார்க்கு அன்பராகில்

.. அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே.)


பிற்குறிப்பு: யாப்புக்குறிப்பு:

கட்டளைக் கலிப்பா - திருக்குறுந்தொகை அமைப்பின் இரட்டித்த வடிவம். (அடிதோறும் 8 சீர்கள்).

அரையடியில் 4 சீர்கள். அரையடிகளின் அமைப்புத் திருக்குறுந்தொகைப் பாடல்களின் அடி அமைப்பில் இருக்கும்.


வி. சுப்பிரமணியன்

------------- -------------


G.28 - என்னாடு - கவியரங்கம் 35

G.028 இப்பாடல் 2011- இல் எழுதப்பட்டது . 2011-08-07 G.28 - என்னாடு - கவியரங்கம் 35 ------------ ( அறுசீர் விருத்தம் - மா மா காய் ...