Saturday, October 4, 2025

G.25 - எங்கே செல்கின்றேன்? - கவியரங்கம் 41

G.025

இப்பாடல் 2014-இல் எழுதப்பட்டது.


2014-10-17

G.25 - எங்கே செல்கின்றேன்? - கவியரங்கம் 41

-------------------

(அறுசீர் விருத்தம் - மா மா காய் - அரையடி வாய்பாடு)


1)

பாட்டுப் பாடி அன்னையவள்

.. பரிவோ டணைக்க மகிழ்வோடு

கேட்டுத் துயின்ற தொருகாலம்

.. கீதத் தோடு போதனைகள்

ஊட்டும் காலம் அதுவன்றோ

.. ஒன்று கூட உணராமல்

ஓட்டி விட்ட பருவத்தை

.. ஓரேன் எங்கே செல்கின்றேன்?


ஓரேன் - எண்ணமாட்டேன்; எண்ணிப் பாராத நான்;


2)

ஏட்டில் உள்ள பாடத்தை

.. இருந்து படிக்கும் பள்ளியிலும்

காட்டில் திரியும் வானரம்போல்

.. கத்தி ஓடி விளையாடி

வீட்டில் உள்ள பெரியோரின்

.. விருப்பப் படியும் நடவாமல்

ஓட்டி விட்ட பருவத்தை

.. ஓரேன் எங்கே செல்கின்றேன்?


3)

தீட்டும் மைசேர் கண்ணுடைய

.. தெரிவை மார்கள் மையலெனும்

வாட்டும் தீயின் வசப்பட்டு

.. மற்ற தெல்லாம் மறந்துவிட்டுக்

காட்டும் கடைக்கண் பார்வைக்கே

.. காத்துக் காத்து மனங்கலங்கி

ஓட்டி விட்ட பருவத்தை

.. ஓரேன் எங்கே செல்கின்றேன்?


தெரிவைமார்கள் - பெண்கள்;


4)

நாட்டம் எல்லாம் நானிலத்தில்

.. நாலு காசு சேர்ப்பதென

ஈட்டும் பொருளுக் கெனநாளும்

.. எங்கும் எதற்கும் எவரிடமும்

நீட்டும் கையை உடையேனாய்

.. நின்று வினைகள் பலகூட்டி

ஓட்டி விட்ட பருவத்தை

.. ஓரேன் எங்கே செல்கின்றேன்?


நாட்டம் - விருப்பம்; நோக்கம்;


5)

கூட்டிச் செல்லப் பாசத்தைக்

.. கொண்டு தூதர் வந்தவுடன்

வீட்டில் உள்ள உற்றார்கள்

.. விரைந்தெ டுங்கள் எனச்சொல்லிக்

கூட்டைக் காவிக் காட்டிலிட்டுக்

.. கொளுத்தி மூழ்கி என்நினைப்பை

ஓட்டி விடுவர் என்பதையும்

.. ஓரேன் எங்கே செல்கின்றேன்?


கூடு - உடல்;

காவுதல் - சுமத்தல்; தோளில் தண்டுகொண்டு சுமத்தல் (To carry on the shoulder);

காடு - சுடுகாடு;


(திருமந்திரம் - முதல் தந்திரம் - 5. யாக்கை நிலையாமை - #3

ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்

பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்

சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு

நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே. )


6)

பாட்டைப் பாடி நாவரசர்

.. பணிய இரங்கி மறைக்காட்டில்

பூட்டைத் திறந்த புண்ணியனே

.. பொருப்பு வில்லில் கணைகோத்துக்

கோட்டை மூன்றை எரித்தவனே

.. கொஞ்சம் கூட நில்லாமல்

சேட்டை செய்யும் என்மனத்தைச்

.. சிறிது நின்பால் திருப்பாயே.


(* வேதாரண்யத்தில் திருக்கோயில் கதவம் திருக்காப்புத் திறக்க வேண்டித் திருநாவுக்கரசர் பதிகம் பாடியதைப் பெரியபுராணத்தில் காண்க.

அப்பர் தேவாரம் - 5..10.1 - "பண்ணின் நேர்மொழியாள் உமைபங்கரோ" என்று தொடங்கும் பதிகத்தின் வரலாற்றில் காண்க);


பொருப்பு - மலை;


7)

நாட்டம் சேரும் நெற்றியினாய்

.. நரிகள் திரியும் சுடுகாட்டில்

ஆட்டம் பயிலும் பெற்றியினாய்

.. அங்கை கூப்பிப் பலதேவர்

கூட்டம் போற்றும் பெருமானே

.. கோலப் பிறையாய் ஒருகாலும்

கோட்டம் இல்லாய் நின்புகழே

.. கூறும் நாவை அருளாயே.


நாட்டம் சேரும் நெற்றியினாய் - நெற்றிக்கண்ணனே; (நாட்டம் - கண்);

நரிகள் திரியும் சுடுகாட்டில் ஆட்டம் பயிலும் பெற்றியினாய் - நரிகள் திரியும் சுடுகாட்டில் கூத்து ஆடுபவனே; (பயில்தல் - செய்தல்); (பெற்றி - பெருமை; தன்மை); (சம்பந்தர் தேவாரம் - 1.65.10 - "நடம்பயில்வார்");

அங்கை கூப்பிப் பலதேவர்-கூட்டம் போற்றும் பெருமானே - கைகூப்பிப் பல தேவர்கூட்டங்கள் போற்றும் பெருமானே;

கோலப் பிறையாய் - அழகிய பிறையைச் சூடியவனே;

ஒருகாலும் கோட்டம் இல்லாய் - எந்நாளும் நடுநிலை பிறழாதவனே; (ஒருகாலும் - எந்தக் காலத்திலும்); (கோட்டம் - வளைதல்; நடுநிலை பிறழ்தல்); (அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன்" - மனக்கோட்டம் இல்லாது எல்லார்க்கும் நன்மையைச் செய்யும் சிவபெருமான்);

நின் புகழே கூறும் நாவை அருளாயே - உன் புகழையே பாடும் நாக்கை எனக்கு அருள்வாயாக.


வி. சுப்பிரமணியன்

------------- -------------


No comments:

Post a Comment

G.26 - அடியும் முடியும் - (வேறு பாடல்கள்)

G.026 இ வை 2009- இல் எழுதப் பெற்ற பாடல் கள் . 2009-01-01 to 2009-07-01 G.26 - அடியும் முடியும் - ( வேறு பாடல்கள் ) ============= ( ...