G.016
இப்பாடல் 2011-இல் எழுதப்பட்டது.
முற்குறிப்பு:
1. இந்தக் கவியரங்கத்தின் தலைப்பான - குடைவானம் கூப்பிடு தூரமே - என்ற சொற்றொடர் குறித்துக் கவியரங்கத் தலைவர் தந்த விளக்கம்: "குடைவானம்" என்றால் குடைபோல் கவிந்திருக்கும் வானம். வானம் மலைப்பாகத் தெரிந்தாலும் வினைத்திட்பம் உடையவனுக்குக் கூப்பிடு-தூரம்தான் என்பது குறிப்பு.
2. கீழே உள்ள என் பாடலில் இந்தச் சொற்றொடரை வேறு விதமாகப் பிரித்தும் பொருள் கொண்டுள்ளேன்.
2011-05-24 / 28
G.16 - குடைவானம் கூப்பிடு தூரமே - கவியரங்கம் 34
-------------------------
0-1) -- இறை வணக்கம் -- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
குடைவானங் கழல்காணக் கோவிந்தன் காணானே
அடையானம் முடிதேடும் அயனவனும் அன்போடு
விடையானம் புகலென்று வேண்டடியார் தங்கட்குக்
குடைவானங் கூப்பிடு தூரமென்று கூறுவரே!
பதம் பிரித்து:
குடைவான் அம் கழல் காணக் கோவிந்தன்; காணானே;
அடையான் அம் முடி தேடும் அயன் அவனும்; அன்போடு,
விடையான் நம் புகல் என்று வேண்டு அடியார் தங்கட்குக்
குடைவானம் கூப்பிடு தூரம் என்று கூறுவரே!
குடைவான் அம் கழல் காணக் கோவிந்தன்; காணானே - அழகிய திருவடியைக் காணத் திருமால் (நிலத்தை) அகழ்ந்தான்; ஆயினும் அவன் காணமாட்டான்; (அம் - அழகு);
அடையான் அம் முடி தேடும் அயன் அவனும் - அந்தத் திருமுடியைத் தேடிய பிரமனும் அடையமாட்டான்;
அன்போடு, விடையான் நம் புகல் என்று வேண்டு அடியார்-தங்கட்குக் குடைவானம் கூப்பிடு தூரம் என்று கூறுவரே - பக்தியோடு, "இடபவாகனனே நம் புகல்" என்று உணர்ந்து, அவனை வழிபடும் அடியவர்களுக்குக் குடை போன்று திகழும் வானம் கூப்பிடு தூரமே என்று (பெரியோர்) சொல்வார்கள்; (= பக்தர்களால் சிவலோகம் எளிதில் அடையப்படும்); (விடை - இடபம்);
0-2) -- அவை வணக்கம் -- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
முன்பாடி வழிகாட்டும் இவ்வரங்கின் முதல்வரே;
என்பாடல் என்னாமல் என்பாடல் என்பதையும்
அன்போடு கேட்பதற்கிங்(கு) அமர்ந்திருக்கும் அவையினரே;
என்பாரும் இறையவனை இறைஞ்சியுமை வணங்குகிறேன்.
என் பாடல் - 1. என்ன பாடல்? 2. என்னுடைய பாடல்;
என்பு ஆரும் இறையவன் - எலும்பை அணியும் இறைவன் - கங்காளன் - சிவன்;
2011-05-28
குடைவானம் கூப்பிடு தூரமே - கவியரங்கம் 34
-----------------------------------------
1) --- (அறுசீர் விருத்தம் - "விளம் விளம் விளம் விளம் மா தேமா" - வாய்பாடு) ---
காணலும் அரிதெனக் கரந்துறை அப்பொருள்
.. கரப்பொன் றின்றிச்
சூணலம் தருமுகில் இடியொலி செய்யவும்
.. துடித்தெ ழுந்து
தூணணை விட்டுடன் நம்கரம் அடைவதால்
.. சொல்வர் பூமி
வாணரம் மைந்நிறக் குடையும்வான் கூப்பிடு
.. தூரம் என்றே!
காணலும் அரிது எனக் கரந்து உறை அப்பொருள் - கண்காணாதபடி எங்கோ ஒரு மூலையில் இருக்கும் அந்த வஸ்து; (கரத்தல் - மறைத்தல்; ஒளித்தல்);
கரப்பு ஒன்று இன்றிச் சூழ்-நலம் தரு-முகில் இடி-ஒலி செய்யவும் - வஞ்சமில்லாமல் எங்கும் நன்மையை தரும் மேகம் இடிக்கின்ற ஒலியைச் செய்தவுடன்; (கரப்பு - வஞ்சம்); (சூணலம் - சூழ் நலம்);
துடித்து எழுந்து தூண்-அணை விட்டு உடன் நம் கரம் அடைவதால் சொல்வர் பூமி-வாணர் - ஒரு துடிப்போடு எழுந்து, தான் அதுவரை சாய்ந்திருத்த தூண் என்ற சாய்மானத்தை நீங்கி உடனே நம் கையை வந்தடைவதால் மக்கள் சொல்வார்கள்; (அணை - முட்டு - Support, prop, buttress); (வாணர் - வாழ்நர் - வாழ்பவர்);
அம் மைந்-நிறக் குடையும் வான் கூப்பிடு தூரம் என்றே - அழகிய கரிய நிறக் குடையும் வானம் (மேகம்) கூப்பிடுகின்ற தூரத்தில்தான் உள்ளது என்று; (வான் - மேகம்);
இலக்கணக் குறிப்பு: ழ்+ந = ண என்று திரியும். (சம்பந்தர் தேவாரம் - 3.2.6 - "போணிலா நுழையும் பொழிற் பூந்தராய்" - போணிலா - போழ் நிலா - பிறை; போழ் - துண்டம்);
2) --- (அறுசீர் விருத்தம் - "மா மா காய்" - அரையடி வாய்பாடு) ---
நாளும் நாம்காண் காட்சியிது
.. நைய வைக்கும் நச்சரிப்பைத்
தாள மாட்டா(து) அப்பொருளைத்
.. தந்தை வாங்கி மகற்களிப்பார்
ஆள வழியை மகன்கண்டான்
.. அடைய வேண்டிற் குடைந்திடுவீர்
வாளை விடவும் வலியததே
.. வானம் கூட வாய்த்திடுமே.
நாளும் நாம் காண் காட்சியிது - ;
நைய வைக்கும் நச்சரிப்பைத் தாள மாட்டா(து) அப்பொருளைத் தந்தை வாங்கி மகற்கு அளிப்பார் - ; (மகற்கு - மகனுக்கு);
ஆள வழியை மகன் கண்டான் - ;
அடைய வேண்டில் குடைந்திடுவீர் - ; (குடைதல் - மிகவருத்துதல்);
வாளை விடவும் வலியது அதே - ;
வானம் கூட வாய்த்திடுமே - ; (வானம் - இங்கே பெறற்கு அரிய விஷயம் என்ற பொருளில்);
3)
இல்லை இல்லை எனத்துளைப்பாள்
.. இல்லை ஆளும் இல்லாளே
தொல்லை பொறுக்க மாட்டாமல்
.. துணைவன் வைரத் தோட்டினையும்
ஒல்லை வாங்கித் தந்துய்வான்
.. உலகின் நியதி இதுதானே
வல்ல வாறு குடைவார்க்கு
.. வானம் கூட வாய்த்திடுமே.
இல்லை இல்லை எனத் துளைப்பாள் இல்லை ஆளும் இல்லாளே - ; (இல்லை - 1. உண்டு என்பதன் எதிர்மறை; 2. வீட்டை);
தொல்லை பொறுக்க மாட்டாமல் துணைவன் வைரத்-தோட்டினையும் ஒல்லை வாங்கித் தந்து உய்வான் - ; (ஒல்லை - சீக்கிரம்); (உய்தல் - தப்புதல்);
உலகின் நியதி இதுதானே -
வல்லவாறு குடைவார்க்கு வானம் கூட வாய்த்திடுமே - ;
4)
நச்சு கின்ற நசிகேதா
.. நமனுக் களித்தேன் உனையென்றே
அச்சன் சொல்ல அச்சமின்றி
.. அங்குச் சென்று வரமாக
மிச்சம் இன்றி மெய்ஞ்ஞானம்
.. வேண்டிப் பெற்ற தறிவோம்நாம்
மச்சைப் போன்றே குடைவார்க்கு
.. வானம் கூட எளிதாமே.
* இந்தக் கதையைக் கடோபநிஷத்தில் காண்க. (https://en.wikipedia.org/wiki/Nachiketa )
"நச்சுகின்ற நசிகேதா, நமனுக்கு அளித்தேன் உனை" என்றே அச்சன் சொல்ல - ; (நச்சுதல் - 1. தொந்தரை செய்தல்; 2. விரும்புதல்); (நமன் - எமன்); (அச்சன் - தந்தை);
அச்சமின்றி அங்குச் சென்று வரமாக மிச்சம் இன்றி மெய்ஞ்ஞானம் வேண்டிப் பெற்றது அறிவோம் நாம் - ; (மிச்சம் - 1. மீதி; 2. பொய் (மித்தியம்/மித்யை) );
மச்சைப் போன்றே குடைவார்க்கு வானம் கூட எளிதாமே - ; (மச்சு - மாடி; மேல்மாடம்);
5)
அஞ்செ ழுத்தை அனுதினமும்
.. அன்போ டோதி அழைப்பவர்க்குத்
தஞ்ச மளித்துச் சங்கரனார்
.. தாமும் காட்சி தந்தருள்வார்
செஞ்சொல் மன்னர் அப்பரவர்
.. தேவா ரத்திற் செப்பினரே
வஞ்ச மின்றிக் குடைவார்க்கு
.. வானம் வந்து வாய்த்திடுமே.
அஞ்செழுத்தை அனுதினமும் அன்போடு ஓதி அழைப்பவர்க்குத் தஞ்சம் அளித்துச் சங்கரனார் தாமும் காட்சி தந்து அருள்வார் - ;
செஞ்சொல் மன்னர் அப்பர்-அவர் தேவாரத்தில் செப்பினரே - ;
வஞ்சமின்றிக் குடைவார்க்கு வானம் வந்து வாய்த்திடுமே - ;
(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.112.9 -
சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி-எம்மான்
அவன் எனை ஆட்கொண்டு அளித்திடுமாகில் அவன்தனை யான்
பவன் எனும் நாமம் பிடித்துத் திரிந்து பன்னாள் அழைத்தால்,
இவன் எனைப் பன்னாள் அழைப்பு-ஒழியான் என்று எதிர்ப்படுமே.
சிவன் என்ற பெயரைத் தனக்கே உரிய பெயராகக் கொண்ட செம்மேனிப் பெருமான் அடியேனை அடிமையாகக் கொண்டு கருணை செய்திடுவானாகில் அவனை அடியேன் "பவன்" என்னும் திருப்பெயர் முதலியவற்றை உள்ளத்திலும் சொல்லிலும் பற்றி அவன் அடியேனை இயக்கும் இடம் தொறும் திரிந்து பலநாளும் அழைத்தால், இவன் என்னைப் பலநாளாக அழைத்தலைத் தவறாது செய்கிறான் என்று திருவுள்ளம் பற்றி அடியேற்குக் காட்சி வழங்குவான்.
திருநாவுக்கரசர் தேவாரம் - 5.31.5 -
வஞ்சம் இன்றி வணங்குமின் வைகலும்
வெஞ்சொல் இன்றி விலகுமின் வீடுற
நைஞ்சு நைஞ்சுநின்று உள்-குளிர்வார்க்கெலாம்
அஞ்சல் என்றிடும் ஆனைக்கா அண்ணலே.
ஆனைக்காவின் அண்ணலை வஞ்சமின்றி நாள்தோறும் வழிபடுவீர்களாக; வெவ்விய சொற்களினின்றும் விலகுவீர்களாக; வீட்டின்பம் பெறும் பொருட்டு நைந்து நைந்து நின்று உள்ளம் குளிர்வார்க்கெல்லாம் "அஞ்சேல்" என்று அருள்பவன் அப்-பெருமானே ஆவன். )
6)
நடுவில் லாமல் நானிலத்தில்
.. நாளும் திரிவார் அடையாரே
எடுவில் லாக மலையொன்றை
.. ஏந்திப் புரங்கள் எரித்தவனைக்
கொடுவல் லரக்கன் தனையடர்த்த
.. கோனைப் பாடிப் பக்தியெனும்
மடுவிற் குடையும் மாந்தர்க்கு
.. வானம் கூடல் எளிதாமே.
நடு-இல்லாமல் நானிலத்தில் நாளும் திரிவார் அடையாரே - ; (நடு - நடுநிலை; நீதி; நேர்மை); (நானிலம் - பூமி);
எடு-வில்லாக மலை-ஒன்றை ஏந்திப் புரங்கள் எரித்தவனைக் - ; (எடு-வில் - வினைத்தொகை - எடுக்கும் வில்லாக);
கொடு-வல்லரக்கன்-தனை அடர்த்த கோனைப் - கொடிய வலிய இராவணனை நசுக்கிய தலைவனை; (அடர்த்தல் - நசுக்குதல்);
பாடிப் பக்தி எனும் மடுவில் குடையும் மாந்தர்க்கு வானம் கூடல் எளிதாமே - போற்றிப் பாடிப் பக்தி என்ற பொய்கையில் நீராடும் அடியார்களுக்குச் சிவலோகம் கைகூடுதல் எளிது (/ சிவலோகத்தைச் சென்றடைதல் எளிது); (குடைதல் - நீரில் மூழ்குதல்; நீராடுதல்); (வானம் - சிவலோகம்); (கூடல் - 1. அடைதல் (To reach, arrive at); 2. கைகூடுதல் (To be achieved) );
வி. சுப்பிரமணியன்
------------- -------------