G.040
இது 2008-இல் எழுதப்பட்டது.
2008-04-19
G.40 - கற்றவன் - சிலந்தி - சிலேடை
------------
தன்னூலே தன்வேலை என்றிருக்கக் காண்பதால்
இன்னூலே தாங்கி இருப்பதால் - நன்னூல்வாய்
என்றும் ஒழுகுவதால் ஏற்றம் பெறுசிலந்தி
மன்று புகழ்கற்ற வன்.
சொற்பொருள்:
நூல் - 1. நூல் (yarn, cotton thread, string) / 2. புத்தகம்; சாஸ்திரம்; ஆகமம்;
இன்னூல் - 1. இல்-நூல்; / 2. இன்-நூல்;
இல் - வீடு;
இன் - இனிய;
வாய் = 1. mouth; / 2. வழி (way, path);
ஒழுகுதல் = 1. நீர் பாய்தல்; நீர்ப்பண்டம் சொட்டுதல்; / 2. முறைப்படி நடத்தல்;
நன்னூல் - 1. நல்-நூல்; 2. நன்னூல் என்ற தமிழ்இலக்கணநூல்;
ஏற்றம் = 1. மேல் ஏறுகை; 2. புகழ்; மேன்மை;
மன்று - சபை;
சிலந்தி:
தன் நூலே தன் வேலை என்று இருக்கக் காண்பதால் - தன் நூலால் வலை பின்னுவதே தொழிலாக இருப்பதால்;
இல்-நூலே தாங்கி இருப்பதால் - (அதனுடைய) வீடாக அந்த நூலே அதனைத் தாங்கி இருப்பதால்;
நல்-நூல் வாய் என்றும் ஒழுகுவதால் - நல்ல சக்தியுடைய நூல் அதன் வாயிலிருந்து எப்பொழுதும் வழிவதால்;
ஏற்றம் பெறு சிலந்தி - புகழ் பெறும் சிலந்தி;
கற்றவன்:
தன் நூலே தன் வேலை என்றிருக்கக் காண்பதால் - (அடுத்தவர் வம்பிற்குப் போகாமல்) தன்னிடம் உள்ள புத்தகத்தைப் படிப்பதே (/ தன் நூல்களை இயற்றுவதே) தன் கருமமாக இருப்பதால்;
இன்-நூலே தாங்கி இருப்பதால் - இனிய புத்தகங்களைக் கையில் ஏந்தி இருப்பதால்;
நல்-நூல்வாய் என்றும் ஒழுகுவதால் ஏற்றம் பெறு - நன்மை அளிக்கும் அறநூல்களின் வழியே (தர்மத்தின்படி) என்றும் செயல்படுவதால் மேன்மை அடைகின்ற; (நன்னூல் = இலக்கணநூல் என்றும் பொருள்கொள்ளலாம்);
மன்று புகழ் கற்றவன் - அறிஞர்-சபை புகழ்கின்ற கற்றவன்;
வி. சுப்பிரமணியன்
------------- -------------