G.038
இது 2008-இல் எழுதப்பட்டது.
2008-07-10
G.38 - கொசு - குளிர்பானம் (carbonated soft drinks) - சிலேடை
------------
காணுமிடம் எல்லாம் களிப்பாய்க் குழாய்கொண்டு
பேணும் மகளிரு டன்மிக வேவருந்தும்
பாணிசைக்கும் பன்னோய் பரப்பும் கொசுபல்பேர்
பூணும் குளிர்பானம் போல்!
சொற்பொருள்:
குழாய் - 1. drinking straw; / 2. கொசுவின் உறுப்பான ரத்தம் உறிஞ்சு குழாய்;
பேணுதல் - 1. விரும்புதல்; / 2. உட்கொள்ளுதல்;
பாண் - பாட்டு - 1. fizz; / 2. கொசுவின் ரீங்காரம்;
பன்னோய் - 1. பல் நோய் - பல்லில் ஏற்படும் நோய்; / 2. பல நோய்கள்;
போல் - அசைச்சொல்;
குளிர்பானம் (carbonated soft drinks):
காணும் இடம் எல்லாம் களிப்பாய்க் குழாய்கொண்டு
பேணும் மகளிருடன் மிகவே அருந்தும்,
பாண் இசைக்கும், பல்-நோய் பரப்பும், கொசு பல்பேர்
பூணும் குளிர்பானம் போல்!
காணும் இடம் எல்லாம் களிப்பாய்க் குழாய்கொண்டு, பேணும் மகளிருடன் மிகவே அருந்தும் - பார்க்கும் இடத்திலெல்லாம், நேசிக்கும் பெண்களோடு, ஸ்ட்ராவைக் கொண்டு உறிஞ்சி மிகவும் குடிக்கின்ற;
பாண் இசைக்கும் - சன்னமாக முரமுர என்று நுரைத்து ஒலி எழுப்புகின்ற (fizzing sound; effervescence);
பல்-நோய் பரப்பும் - பல்லுக்கு கேடு விளைவிக்கின்ற;
பல்பேர் பூணும் குளிர்பானம் - பல பெயர்கள் (brand name, flavors) தாங்கி வருகின்ற குளிர்பானம்;
கொசு:
காணும் இடம் எல்லாம் களிப்பாய்க் குழாய்கொண்டு
பேணும், மகளிர் உடல் மிகவே வருந்தும்,
பாண் இசைக்கும், பல்நோய் பரப்பும், கொசு பல்பேர்
பூணும் குளிர்பானம் போல்!
காணும் இடம் எல்லாம் களிப்பாய்க் குழாய்கொண்டு பேணும் - கண்ட இடத்திலெல்லாம் இஷ்டம்போலத் தன் குழாயால் குத்திக் குருதியைக் குடிக்கும்;
மகளிர் உடல் மிகவே வருந்தும் - (மென்மையான தோல் உடையவர்களாதலால், கொசுக்கடியால்) பெண்கள் உடல் மிகவும் வருந்தும்.
பாண் இசைக்கும் - ரீங்காரம் செய்யும்;
பல்-நோய் பரப்பும் கொசு - பலவகை வியாதிகளைப் பரப்புகின்ற கொசு.
* புணர்ச்சியிலக்கணக் குறிப்புகள்:
1. ஏகாரத்தில் முடியும் சொல்லை அடுத்து உயிர்எழுத்து வந்தால், உடம்படுமெய்யாக வ் / ய் இரண்டுமே தோன்றலாம். (உதாரணம் - சே + அடி = சேவடி);
2. ல்+ம = ன்ம. (முதற்சொல்லின் ஈற்றில் ல் வந்து, அடுத்த சொல் 'ம' வர்க்கத்தில் தொடங்கினால், அந்த ல் ஒற்று ன் ஆகத் திரியும்);
வி. சுப்பிரமணியன்
------------- -------------
No comments:
Post a Comment