Wednesday, June 10, 2026

G.32 - தமிழ்ப் புத்தாண்டு - "சார்வரி" (Śārvarī)

G.032

இப்பாடல் 2020-இல் எழுதப்பட்டது.


2020-04-13

G.32 - தமிழ்ப் புத்தாண்டு - "சார்வரி" (Śārvarī)

------------


1) --- (அறுசீர் விருத்தம் - "விளம் மா தேமா" - அரையடி வாய்பாடு) ---

சார்வரி ஆண்டு தன்னில் .. தரணியிக் கொரோனாத் துன்பம்

தீர்வுற அருள வேண்டும் .. திருமுடி மீது கங்கை

நீர்வரி அரவு திங்கள் .. நிலைபெற வைத்த தேவா

கூர்வடி வேலன் தன்னைக் .. கொடுத்தகண் ணுதலெம் மானே.


சார்வரி ஆண்டு-தன்னில் தரணி இக்-கொரோனாத் துன்பம் தீர்வுற அருள-வேண்டும் - சார்வரி வருடத்தில் உலகம் இந்தக் கொரோனா வைரஸ் (Covid-19) என்ற துன்பம் தீர்ந்து உய்ய அருள்வாயாக;

திருமுடிமீது கங்கைநீர் வரிஅரவு திங்கள் நிலைபெற வைத்த தேவா - தலைமீது கங்கைநதி, வரிகள் திகழும் பாம்பு, சந்திரன் இவற்றை அணிந்த தேவனே;

கூர்வடிவேலன்-தன்னைக் கொடுத்த கண்ணுதல் எம்மானே - கூரிய வேலை ஏந்தும் முருகனை அருளிய நெற்றிக்கண்ணை உடைய எம்பெருமானே. (வடி - கூர்மை; கூர்வடி - ஒருபொருட்பன்மொழி);


2) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---

கார்வரி, ஈட்டிய காசுவரி, வீட்டுவரி,

நீர்வரி, இருக்கின்ற நிலவரி, என்றுமிகச்

சேர்வரி கண்டிங்கியாம் திகைக்கின்றோம்; வந்தடைந்த

சார்வரி நீயேனும் தாவெமக்கு நிம்மதியே.


கார்வரி, ஈட்டிய காசுவரி, வீட்டுவரி, நீர்வரி, இருக்கின்ற நிலவரி - காருக்கு வரி, சம்பாதித்த வருமானத்துக்கு வரி, வீட்டுக்கு வரி, நீருக்கு வரி, நிலத்துக்கு வரி;

என்று மிகச் சேர்-வரி கண்டு இங்கு யாம் திகைக்கின்றோம் - என்று பற்பல வரிகளைக் கண்டு நாங்கள் தளர்கின்றோம்; (கண்டிங்கியாம் = கண்டு இங்கு யாம்; குற்றியலிகரம்);

வந்து அடைந்த சார்வரி நீயேனும் தா எமக்கு நிம்மதியே - வந்து சேர்ந்த சார்வரி வருஷமே, நீயாவது எங்களுக்கு நிம்மதியைத் தா;


வி. சுப்பிரமணியன்

------------- -------------


G.31 - தேடித் தேடி - கவியரங்கம் 31

G.031

இப்பாடல் 2010-இல் எழுதப்பட்டது.


2010-03-20

G.31 - தேடித் தேடி - கவியரங்கம் 31

------------

0-1) -- கடவுள் வாழ்த்து --

தேடித் தேடி இருவரன்று

.. திகைத்து நிற்க உயர்தீயே!

ஆடிப் பாடி அடிபோற்றும்

.. அன்பர் உள்ளே உறைவாயே!

நாடிக் கைகள் குவித்தேனே

.. நானும் உன்னைத் தமிழ்கொண்டு

பாடிப் பாதம் பணிந்தேனே

.. பார்த்த ருள்வாய் பசுபதியே!


1) -- நாலடி தரவு கொச்சகக் கலிப்பா ---

மூவாண்டு முடிவடையும் முன்னமே இவ்வாண்டு

போவானெப் பள்ளியெனப் பொழுதெல்லாம் சிந்தித்தே

ஆவாவென் றல்லாடி அங்குமிங்கும் மிகத்தேடி

ஈவாரே பெரும்பொருளும் ஏதோவோர் பள்ளிக்கே.


இவ்வாண்டு - 1) இந்த வருடம்; 2) இந்த வாண்டு;

ஆவாவென்று - ஆ ஆ என்று;


2) -- கலிவிருத்தம் - 4 தேமா ---

ஆட்டம் பாட்டம் ஆர்க்கு வேண்டும்

நாட்டம் எல்லாம் ஏட்டின் மேலே

காட்டு வாயென் கண்ணே என்று

வீட்டில் சொல்வார் வேத வாக்காய்.


3) -- எண்சீர் விருத்தம் - 8 மா ---

'மண்டே' என்பார் திங்கள் என்னார்

.. வாழ வேற்று மொழியே தேவை

மண்டே என்பார் தமிழும் கற்றால்

.. மக்கட் காகக் காசைத் தந்தும்

கண்டார் காலில் விழுந்தும் ஏதோ

.. கல்லூ ரியிலே இடத்தை வாங்கிக்

கொண்டு வந்தி ருப்பார் இந்நாட்

.. கோலம் ஆவ(து) இஃதே அன்றோ.


மண்டு - மூடன்; (மண்டே - Monday);

இந்நாள் கோலம் - இக்கால நிலை;


4) --- அறுசீர் விருத்தம் - 6 மா ---

ஆசை விண்ணை எட்டும்

.. அதுவே ஆளை ஆட்டும்

காசைத் தருவ தொன்றே

.. கல்வி என்பார் இன்று

மாசை நீக்க எண்ணார்

.. வழியை என்றும் நண்ணார்

ஓசை ஒன்றே செய்வார்

.. உலகில் உழன்று தொய்வார்.


வழியை என்றும் நண்ணார் - நல்ல வழியை என்றும் சேரமாட்டார்கள்;

ஓசை ஒன்றே செய்வார் - பொருளற்ற பேச்சே பேசுவார்; அலம்பல் செய்வார்;


5) -- நாலடி தரவு கொச்சகக் கலிப்பா ---

வளர்கிறநாள் விளையாட்டே மனம்கருதும்; வலிமைமிகு

இளமையிலே இளமயிலே என்றென்றும் எண்ணத்தில்;

தளர்வடையும் முதுமையிலோ தாங்கொண்ணாத் தனுவலிதான்

உளம்நினையும்; உலகினிலே உளநாள்கள் இப்படியே;


இளமயில் - இளம் பெண்;

தனு - உடல்;


6) -- கலித்துறை? ---

படித்து முடித்து வேலை தேடிக் - காலைப்

பிடித்துப் பிடித்துப் பதவி தேடி - நாளும்

நடித்து நடித்துக் காசைத் தேடில் - வாழ்வை

முடிக்கத் துடிக்கும் நமனும் தேடு வானே.


7) -- அறுசீர் விருத்தம் - மா மா காய் ---

தேடி வந்த கூற்றுவனைச்

.. சீறி உதைத்த சேவடியைப்

பாடிப் பணிந்து மகிழ்கின்ற

.. பத்தர் குழாத்தை எந்நாளும்

கூடிக் களிக்க எண்ணாமல்

.. குவல யத்தில் வீணாக

ஓடிப் பேய்த்தேர் முகக்கின்றார்

.. உயிரை வளர்க்க அறியாரே.


பத்தர்குழாம் - அடியார்கூட்டம்;

குவலயம் - பூமி;

பேய்த்தேர் - கானல் நீர்;

முகத்தல் - மொள்தல்;


8) -- இன்னிசை வெண்பா ---

தேடுவது நம்மியல்பு; தேடற்குத் தக்கதை

நாடுவது நல்லறிவு; நாளெல்லாம் காசுக்கே

ஓடுவது புல்லறி(வு); உள்ளமொன்றி முக்கணனைப்

பாடுவதே உய்வுதரும் பார்.


புல்லறிவு - அறியாமை;


வி. சுப்பிரமணியன்

------------- -------------


Tuesday, June 9, 2026

G.30 - முருகன் - மரம் - சிலேடை

G.030

து 2010-இல் எழுதப்பட்டது.


2010-01-29

G.30 - முருகன் - மரம் - சிலேடை

------------

வள்ளி அணைத்தலால் வான்வந் தடைவதால்

புள்ளமர் பொற்பினால் போற்றுவார்க் - கள்ளிக்

கொடுப்பதால் தன்னடிக்கண் கூடினார் துன்பம்

தடுப்பதால் கந்தன் தரு.


சொற்பொருள்:

வள்ளி - 1. கொடி; / 2. குறவர் மகளான வள்ளி;

அணைத்தல் - தழுவுதல்;

வான் - 1. மேகம்; / 2. தேவர்கள்;

அடைதல் - 1. சேர்தல்; / 2. சரண்புகுதல்;

புள் - 1. பறவை; / 2. மயில்;

அமர்தல் - 1. உட்கார்தல்; 2. விரும்புதல்;

பொற்பு - 1. தன்மை; / 2. அழகு;

போற்றுதல் - 1. பாதுகாத்தல்; வளர்த்தல் / 2. துதித்தல்; வணங்குதல்;

அடி - 1. கீழ்; / 2. திருவடி;

தரு - மரம்;


மரம்:

வள்ளி அணைத்தலால் - கொடிகள் தழுவிப் படர்வதால்;

வான் வந்து அடைவதால் - மேகம் வந்து பொருந்துமாறு ஓங்கி வளர்வதால்;

புள் அமர் பொற்பினால் - பறவைகள் (கிளைகளில்) உட்காரும் தன்மையால்;

போற்றுவார்க்கு அள்ளிக் கொடுப்பதால் - பராமரிப்பவர்களுக்குப் பெரும்பயனைத் தருவதால்;

தன் அடிக்கண் கூடினார் துன்பம் தடுப்பதால் - தன் அடியில் சேர்பவர்களுக்கு வெயிலின் துன்பத்தைத் தடுத்துக் குளுமை தருவதால்;

தரு - ஒரு மரம்;


முருகன்:

வள்ளி அணைத்தலால் - குறமகள் வள்ளி தழுவுவதால்;

வான் வந்து அடைவதால் - தேவர்கள் வந்து சரண்புகுவதால்;

புள் அமர் பொற்பினால் - மயிலை வாகனமாக விரும்பி ஏறுவதால்;

போற்றுவார்க்கு அள்ளிக் கொடுப்பதால் - வணங்குபவர்களுக்கு வரங்களை அள்ளித் தருவதால்;

தன் அடிக்கண் கூடினார் துன்பம் தடுப்பதால் - தன் திருவடியில் சேர்பவர்களுக்கு (வினை, நோய், முதலிய) துன்பங்களைத் தீர்த்து அருள்வதால்;

கந்தன் - முருகன்;


வி. சுப்பிரமணியன்

------------- -------------


G.29 - பாவை விளக்குமாறு - (வக்கிரோக்தி)

G.029

து 2010-இல் எழுதப்பட்டது.


2010-01-17

G.29 - பாவை விளக்குமாறு - (வக்கிரோக்தி)

------------

(பதின்சீர் விருத்தம் - மா மா மா மா தேமா - அரையடி வாய்பாடு)


பாவை விளக்கு மாறு வேண்டி நின்றேன்

.. பார்த்தார் புலவர் ஏனோ உடனே ஏற்றும்

பாவை விளக்கு மாறு தந்து விட்டார்

.. பாரீர் இஃதென் என்றேன் அருகி ருந்த

பாவை தன்னை விளக்கல் ஏனோ என்றார்

.. பரிதா பங்கொண்(டு) அளித்தாள் அன்னார் பெற்ற

பாவை விளக்கு மாறும் பதுமை யுந்தான்

.. பாரீர் பாட்டை எண்ணிக் கலங்கி னேனே.


சொற்பொருள்:

பாவை - 1. செய்யுளை; (பா - பாட்டு); 2. பொம்மை; பிரதிமை; 3. அழகிய பெண்;

விளக்குதல் - 1. தெளிவாக்குதல் (To make clear; to explain, elucidate); 2. துலக்குதல் (To clean, brighten, polish);

விளக்குமாறு - 1. விளக்கும்படி; 2. துடைப்பம்; 3. ஆறு விளக்குகள்;

பாவைவிளக்கு - பிரதிமை விளக்கு (Lamp with a damsel-shaped stand);

பாரீர் - 1. பாருங்கள்; 2. உலகோரே;

பாட்டை - 1. பாடலை; 2. நிலைமையை; துன்பத்தை;


பாவை விளக்குமாறு வேண்டி நின்றேன் - "பாவை விளக்குமாறு வேண்டுகிறேன்" என்றேன் - பாடலைத் தெளிவாக விளக்கும்படிக் கேட்டேன்.

பார்த்தார் புலவர்; ஏனோ உடனே ஏற்றும் பாவை-விளக்கும் ஆறு தந்துவிட்டார் - என்னைப் பார்த்த புலவர் என்ன காரணத்தாலோ உடனே தீபம் ஏற்றும் ஆறு பிரதிமை-விளக்குகள் தந்தார். (--அல்லது-- என் வேண்டுகோளை ஏற்றாலும், என்ன காரணத்தாலோ ஆறு பிரதிமைவிளக்குகள் தந்தார்).

பாரீர் இஃது என் என்றேன் - "பாருங்கள்! இது என்ன?" என்றேன். ("நான் சொன்னது ஒன்று; நீங்கள் செய்தது வேறொன்றாக இருக்கிறதே" என்ற பொருளில்);

அருகு இருந்த பாவை-தன்னை விளக்கல் ஏனோ என்றார் - பக்கத்தில் இருக்கும் இந்தப் பிரதிமையைப் பற்றி விளக்கமும் தேவையோ என்றார். (--அல்லது-- இப்பிரதிமையை ஏன் துலக்கவேண்டும் என்றார்).

பரிதாபங்கொண்டு அளித்தாள் அன்னார் பெற்ற பாவை விளக்குமாறும் பதுமையுந்தான் - என்மேல் இரங்கி அவர் மகள் எனக்குத் துடைப்பமும் பொம்மையும் தந்தாள்.

பாரீர் பாட்டை எண்ணிக் கலங்கினேனே - உலகோரே! என் நிலைமையை எண்ணிக் கலங்கினேன். (--அல்லது-- பாடலின் பொருள் உணராமையை எண்ணிக் கலங்கினேன்).


வி. சுப்பிரமணியன்

------------- -------------


G.32 - தமிழ்ப் புத்தாண்டு - "சார்வரி" (Śārvarī)

G.032 இப்பாடல் 2020- இல் எழுதப்பட்டது . 2020-04-13 G.32 - தமிழ்ப் புத்தாண்டு - " சார்வரி " (Śārvarī ) ------------ 1...