Friday, September 11, 2026

G.39 - செய்யுள் - எருது - சிலேடை

G.039

இது 2008-இல் எழுதப்பட்டது.


2008-08-20

G.39 - செய்யுள் - எருது - சிலேடை

------------

அசையு மணியு மதுகாட்டும் ஏர்கொண்(டு)

அசையும் அடிநான்கும் ஆகும் - விசைகொண்டும்

செல்லுமாங் காங்கே திரிதலும் காணலாம்

புல்லுண் எருதுசெய்யுள் போல்.


சொற்பொருள்:

அசையுமணியும் - 1. அசையும் அணியும்; / 2. அசையும் மணியும்;

அசை - செய்யுளின் ஓர் உறுப்பு;

அசைதல் - 1. இயங்குதல்; / 2. ஆடுதல்; மெல்லச்செல்லுதல்;

அடி - 1. செய்யுளின் அடி; / 2. பாதம் (கால்);

விசைகொள்ளுதல் - விரைதல்;

திரிதல் - 1. செய்யுள் விகாரங்களுள் ஒன்று (சொல்லின் எழுத்து முதலியன மாறி வரும்); / 2. அலைதல்;

போல் - அசைச்சொல்;

செய்யுள்:

அசையும் அணியும் அது காட்டும்; ஏர்-கொண்(டு)

அசையும், அடி நான்கும் ஆகும்; - விசைகொண்டும்

செல்லும்; ஆங்காங்கே திரிதலும் காணலாம்;

புல் உண் எருது செய்யுள் போல்.


அசையும் அணியும் அது காட்டும் - செய்யுளில் அசை என்ற உறுப்பும், பலவகை அணிகளும் இருக்கும்.

ஏர் கொண்(டு) அசையும் - அழகுடன் இயங்கும்;

அடி நான்கும் ஆகும் - பெரும்பாலும் 4 அடிகள் இருக்கும்.

விசைகொண்டும் செல்லும் - "முடுகு" போன்ற விரைந்துசெல்லும் ஓசைநயங்களும் இருக்கும்.

ஆங்காங்கே திரிதலும் காணலாம் - சில இடங்களில் சொற்கள் திரிந்தும் (மாறியும்) வரக் காணலாம்;

செய்யுள் - தமிழ்ச்செய்யுள்;


எருது:

அசையு(ம்) மணியும் அது காட்டும்; ஏர் கொண்(டு)

அசையும்; அடி நான்கும் ஆகும்; - விசைகொண்டும்

செல்லும்; ஆங்காங்கே திரிதலும் காணலாம்;

புல் உண் எருது செய்யுள் போல்.


அசையு(ம்) மணியும் அது காட்டும் - (கழுத்தில்) அசைகின்ற மணி கட்டப்பட்டிருக்கும்;

ஏர் கொண்(டு) அசையும் - (வயலில்) ஏரை மெல்ல இழுத்துச் செல்லும்;

அடி நான்கும் ஆகும் - நான்கு கால்கள் இருக்கும்;

விசைகொண்டும் செல்லும் - சிலசமயம் வேகமாகவும் ஓடும்;

ஆங்காங்கே திரிதலும் காணலாம் - பல இடங்களில் திரிந்துகொண்டிருப்பதைக் காணலாம்;

புல் உண் எருது - புல்லை உண்ணும் எருது;


வி. சுப்பிரமணியன்

------------- -------------


No comments:

Post a Comment

G.42 - உயர உயர - கவியரங்கம் 30

G.042 இ து 2009- இல் எழுதப்பட்டது . 2009-06-28 G . 4 2 - உயர உயர - கவியரங்கம் 30 ------------ 0-1) --- இறைவணக்கம் --- ( வஞ்சி ...