Showing posts with label எழுசீர் விருத்தம். Show all posts
Showing posts with label எழுசீர் விருத்தம். Show all posts

Friday, September 11, 2026

G.41 - வேடிக்கை மனிதர்கள் -- (அரசியல்வாதி) - கவியரங்கம் 29

G.041

இது 2009-இல் எழுதப்பட்டது.


2009-04-20

G.41 - வேடிக்கை மனிதர்கள் -- (அரசியல்வாதி) - கவியரங்கம் 29

------------

0-1) --- இறைவணக்கம் --- (நாலடித்தரவு கொச்சகக் கலிப்பா) ---

நாடிக்கை தொழுசுரர்க்கா நஞ்சுண்டாய், அன்றயன்மால்
தேடிக்கை தொழுமாறு தீயாகி நின்றவனே;
வேடிக்கை மனிதரினை விருத்தத்தில் எழுதஅருள்;
பாடிக்கை குவித்துன்றன் பதமலரைப் பணிந்தேனே.

சுரர்க்கா - தேவர்களுக்காக;

0-2) --- அவை வணக்கம் --- (அறுசீர் விருத்தம் - மா மா காய் - அரையடி வாய்பாடு) ---
ஆவ லோடு சபையினிலே
.. அமர்ந்தி ருக்கும் அன்பர்காள்
நாவ லர்காள் வணங்குகிறேன்
.. நானு ரைக்கப் போகின்ற
பாவை நீவிர் செவிமடுத்துப்
.. பாராட்(டு) ஐயம் குற்றமென
யாவ தாயி னும்சொல்வீர்
.. யான்நும் பால்வேண் டுவதிதுவே.

ஐயம் - சந்தேகம்;

1) --- (அறுசீர் விருத்தம் - மா மா காய் - அரையடி வாய்பாடு) ---
தமிழன் என்றோர் இனமுண்டு
.. தனியே அவர்க்கோர் குணமுண்டு
நிமிர்ந்து நிற்போம் நாமென்பார்
.. நெருங்கித் தேர்தல் வந்தாலோ
திமிலம் தானே தெருவெங்கும்
.. சேலை வேட்டி வினியோகம்
குமிழி போல மறைந்தொழியும்
.. கூட்டிச் சொன்ன அப்பண்பே.

திமிலம் - ஆரவாரம்;
கூட்டிச் சொல்லுதல் - 1. மிகைப்படுத்திச் சொல்லுதல்; 2. மக்களைத் திரட்டிப் பேசுதல்;

2) --- (கலிவிருத்தம் - விளம் மா விளம் மா - வாய்பாடு) ---
பெற்றவர் வைத்த பெயரினைச் சொல்லி
மற்றவர் அழைத்தல் மதிப்பினுக் கிழிவாம்
சுற்றிய தொண்டர் சொல்கிற பட்டம்
வெற்றுரை விரும்பல் தலைவருக் கழகே.

வெற்றுரை - பொருளற்ற சொல்;

3) --- (எழுசீர் விருத்தம் - விளம் மா விளம் மா விளம் விளம் மா - வாய்பாடு) ---
தலையினைக் கொடுத்தும் தமிழினைக் காப்போம்
.. தாயினும் மதிக்கிறோம் என்பார்;
அலையெனத் தொண்டர் திரண்டுரை கேட்பார்
.. அவர்க்கென உயிரையும் கொடுப்பார்;
பலபெயர் களையும் மாற்றிடும் தலைவர்
.. பண்பொடு தம்தொலைக் காட்சிக்(கு)
உலகினர் உவக்க ஆங்கிலப் பெயரை
.. ஒளிமிக வைத்திடு வாரே.

4) --- (எண்சீர் விருத்தம் - கருவிளம் தேமா கருவிளம் தேமா - அரையடி வாய்பாடு) ---
அடுக்கடுக் காகச் சொற்களைச் சொல்லி
.. அவையினில் நீண்ட உரையினைச் செய்வார்;
தொடுக்கிற சொல்லில் சுவையிருந் தாலும்
.. துளியள வேனும் பொருளதி ராதே;
அடுக்கிற பேரைக் கெடுக்கிற பண்போ
.. அளவிட லாகா வணம்மிக உண்டு;
நடுக்குறு வோர்கள் அடியினில் வீழ
.. நனிமகிழ்ந் தங்கே அவரிருப் பாரே.

பொருளது இராதே - பொருளின்றி (/ உண்மையின்றி) இருக்கும்;
அளவிடல் ஆகா-வணம் - அளவிட இயலாதபடி;

நடுக்குறுதல் - அஞ்சுதல்;

5) --- (அறுசீர் விருத்தம் - மா மா காய் - அரையடி வாய்பாடு) ---
யாதும் ஊரே எல்லாரும்
.. ஆவர் கேளிர் என்றுரைப்பார்;
ஓதும் சொல்லை உடன்மறப்பார்
.. ஊரைப் பிரிக்க வழிசெய்வார்;
சூதும் வாதும் மிக்கிருப்பார்
.. சுயந லத்தைப் பார்த்திருப்பார்;
தீதும் செய்ய அஞ்சாரே
.. சேவை என்றே சொல்வாரே.

6) --- (அறுசீர் விருத்தம் - மா மா காய் - அரையடி வாய்பாடு) ---
இறைவன் இல்லை இல்லையென்பார்;
.. எதற்குப் பூசை அவற்கென்பார்;
குறைவில் லாமல் நாடெங்கும்
.. கூச்சம் சிறிதும் இல்லாமல்
மறைந்த தலைவர்க் கெனச்சிலைகள்
.. வைத்து மாலை அணிவிப்பார்,
பிறந்த நாளில் துதிசெய்து
.. பெரிய பதவி வரம்கேட்பார்.

அவற்கு - அவன்+கு - அவனுக்கு;

7) --- (எண்சீர் விருத்தம் - மா மா மா தேமா - அரையடி வாய்பாடு) ---
வறுமை யாலே வாடும் மக்கள்
.. வாழ்வில் நிலவும் துன்பத் தோடு
வெறுமை எல்லாம் மிக்கி ருந்தும்
.. வேடிக் கையாய் வேடம் போட்டுச்
சிறுமை மிக்க செயல்கள் செய்து
.. சிரிக்க வைக்கும் தலைவர் தம்மைப்
பெறுவ தற்கு நாடு செய்த
.. பெருந்த வத்தை அறிகி லோமே.


வி. சுப்பிரமணியன்

------------- -------------


G.42 - உயர உயர - கவியரங்கம் 30

G.042 இ து 2009- இல் எழுதப்பட்டது . 2009-06-28 G . 4 2 - உயர உயர - கவியரங்கம் 30 ------------ 0-1) --- இறைவணக்கம் --- ( வஞ்சி ...