G.022
இது 2018-இல் எழுதப்பட்டது.
முற்குறிப்பு: மயிலாப்பூரில்கூட ஓட்டல்களில் பூண்டு இல்லாமல் சாம்பார் முதலியன இல்லையே என்று யாரோ ஒருவர் அங்கலாய்த்து எழுதிய வெண்பா ஒன்றை ஒரு நண்பர் அனுப்பியிருந்தார். அதற்கு இன்னொரு நண்பர் சபரிமலையிலும் கடைகளில் வெங்காயம் இன்றி உணவு கிட்டுவதில்லை என்றார். அவற்றை ஒட்டி நான் எழுதிய வெண்பா இது.
2018-12-14
G.22 - விரதம் பூண்டு
-------------------------
(வெண்பா)
வெகுளாமை பூண்டு விடமன்ன பொய்கள்
புகலாமை என்பதும் பூண்டு - புகழாசை
நாட்டமிவை நண்ணாமை பூண்டுவந்தால் நாடெங்கும்
போட்ட உணவெல்லாம் பூண்டு!
வெகுளாமை பூண்டு - கோபப்படாமையை மேற்கொண்டு (= சினத்தைத் துறந்து); (வெகுளாமை - கோபம் இன்றி இருத்தல்); (பூண்தல் - மேற்கொள்தல்);
விடம் அன்ன பொய்கள் புகலாமை என்பதும் பூண்டு - விஷம் போன்றதான பொய் சொல்லுதலையும் துறந்து (= பொய்சொல்லாமையையும் மேற்கொண்டு); (அன்ன - போன்ற);
புகழ்-ஆசை நாட்டம்-இவை நண்ணாமை பூண்டு வந்தால் - புகழுக்கு ஆசையும் பிற ஆசைகளும் நெருங்காமையை மேற்கொண்டு (= ஆசைகளைத் துறந்து), (உண்ண) வந்தால்; (நாட்டம் - விருப்பம்);
நாடெங்கும் போட்ட உணவெல்லாம் பூண்டு - நாட்டில் பல கடைகளிலும் பரிமாறும் உணவுவகைகள் எல்லாவற்றிலும் பூண்டு! (பூண்டு - Garlic, வெள்ளைப்பூண்டு);
வி. சுப்பிரமணியன்
------------- -------------
No comments:
Post a Comment