Wednesday, September 10, 2025

G.21 - தாமிரபரணியைக் காப்போம்

G.021

து 2018-இல் எழுதப்பட்டது.


2019-09-18

G.21 - தாமிரபரணியைக் காப்போம்

-------------------------

முற்குறிப்பு: நிகழவிருந்த தாமிரபரணி புஷ்கரத்தை ஒட்டி, நதிகளைப் பேணும் அவசியத்தை வலியுறுத்த எழுதியது இது.


1)

பொதிகைமலை தனில்பிறந்து புவியோரின் பசிதீர்க்கும்

நதியெனவே நவில்வார்கள் நானிலத்தில் பிறரெல்லாம்;

உதிரமது பாலாக்கி ஊட்டுகின்ற அன்னையினும்

அதிகமிவள் அருளென்பர் அறிவுமிகு தமிழோரே.


2)

தண்ணீரைத் தருகின்ற தாமிர பரணித்தாய்

கண்ணீரை விடலாமோ? காப்பதுநம் கடமையென்றே

எண்ணாரும் இங்குளரோ? இன்னமுதைச் சாக்கடைநீர்

பண்ணாமல் போற்றுவது பண்புடையோர் செயலன்றோ!


3)

நீருயர நெல்லுயரும்; நெல்லுயர ஊருயரும்;

ஊருயர நாடுயரும்; உணராதார் செயல்களினால்

சேருகிற மாசுகளால் செல்வத்தைத் தொலைப்போமோ?

வாருமினிப் பொருநைதனை வாழ்வித்து வாழ்வோமே!


பொருநை - தாமிரபரணிநதி;


4)

குப்பைகளும் கழிவுகளும் கொட்டுமிடம் நதியென்றால்

தப்பன்றோ? இனியென்றும் தாமிர பரணிதனைச்

செப்பமுறக் காத்திடுவோம்; "தீமையிலா நன்னீரே

எப்பொழுதும் பாயட்டும்" என்றுறுதி மொழிவோமே!


வி. சுப்பிரமணியன்

------------- -------------


No comments:

Post a Comment

G.26 - அடியும் முடியும் - (வேறு பாடல்கள்)

G.026 இ வை 2009- இல் எழுதப் பெற்ற பாடல் கள் . 2009-01-01 to 2009-07-01 G.26 - அடியும் முடியும் - ( வேறு பாடல்கள் ) ============= ( ...