G.013
2008-07-03
G.13 - கொசு - அரசன் - சிலேடை
-------------------------
இரியுமாற் றார்தம் இரத்தம் மிகவும்
பிரியமரிப் பாகுமங்கே பின்னர்; - பரிவாரத்
தோடு பறந்துசென்றங் கங்கடிக்கும் சூரமன்னர்க்(கு)
ஈடு கொசுவென்(று) இயம்பு.
சொற்பொருள்:
இரியுமாற்றார் - 1. இரியும் மாற்றார்; / 2. இரியும் ஆற்றார்;
இரிதல் - தோற்று ஓடுதல்; அஞ்சுதல்
மாற்றார் - பகைவர்;
ஆற்றார் - இயலாதவர்கள்;
இரத்தம் மிகவும் பிரியமரிப்பாகும் - 1. இரத்தம் மிகவும் பிரிய, மரிப்பு ஆகும்; / 2. இரத்தம் மிகவும் பிரியம்; அரிப்பு ஆகும்;
மரிப்பு - சாவு;
பரிவாரம் - படை (Army, body of troops); / சூழ்வோர் (Train, retinue, attendants);
பறத்தல் - 1. விரைந்து போதல்; / 2. காற்றில் பறத்தல்;
அங்கங்கடிக்கும் - 1. அங்கு அங்கு அடிக்கும் / 2. அங்கம் கடிக்கும்;
அடித்தல் - தாக்குதல்; தோற்கடித்தல்; கொல்லுதல்;
அங்கம் - உடல்;
அரசன்:
இரியு[ம்] மாற்றார்தம் இரத்தம் மிகவும்
பிரிய, மரிப்பு ஆகும் அங்கே பின்னர்; - பரிவாரத்தோடு
பறந்துசென்று அங்கு அங்கு அடிக்கும் சூர மன்னர்க்(கு)
ஈடு கொசுவென்(று) இயம்பு.
இரியு[ம்] மாற்றார்தம் இரத்தம் மிகவும் பிரிய, - தோற்று ஓடும் பகைவர்களுடைய இரத்தம் மிகவும் நீங்கிவிட,
மரிப்பு ஆகும் அங்கே பின்னர் - பிறகு அங்கே (போர்க்களத்தில்) மரணம் நிகழும்;
பரிவாரத்தோடு பறந்துசென்று அங்கு அங்கு அடிக்கும் சூர-மன்னர் - (அப்படிப்) படையோடு விரைந்து சென்று பல பக்கங்களில் இருந்து தாக்கிக் கொல்லும் சூரனான மன்னர்;
கொசு:
இரியும் ஆற்றார்தம் இரத்தம் மிகவும்
பிரியம்; அரிப்பு ஆகும் அங்கே பின்னர்; - பரிவாரத்தோடு
பறந்து சென்று அங்கம் கடிக்கும்; சூர மன்னர்க்(கு)
ஈடு கொசுவென்(று) இயம்பு.
இரியும் ஆற்றார்தம் இரத்தம் மிகவும் பிரியம் - (பாதுகாப்பு எதுவும் இன்றி) அஞ்சுகின்ற இயலாதவர்களின் இரத்தத்தை மிகவும் விரும்பும்;
அரிப்பு ஆகும் அங்கே பின்னர் - (கடித்த இடத்தில்) பிறகு அங்கே அரிக்கும்;
பரிவாரத்தோடு பறந்து சென்று அங்கம் கடிக்கும் - தன் கூட்டத்தோடு பறந்து போய் அவர் உடம்பைக் கடிக்கும்.
வி. சுப்பிரமணியன்
------------- -------------
No comments:
Post a Comment