G.014
இப்பாடல் 2016-இல் எழுதப்பட்டது.
2016-11-25
G.14 - உள்ளமெனுமூடகம் - கவியரங்கம்
-------------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
முற்குறிப்பு: சந்தவசந்தக் கவிதை அரங்கம்-1 - தலைப்பு - "உள்ளமெனும் ஊடகம்";
அதனைச் சந்தியோடு நோக்கினால், "உள்ளமெனுமூடகம்"! இச்சொற்றொடரை இருவிதமாகப் பிரிக்கலாம்!
உள்ளமெனுமூடகம் = 1. உள்ளமெனும் ஊடகம் / 2. "உள்ளம் எனும் மூடு அகம்";
மூடுதல் - மறைத்தல் - To hide, to obscure; அகம் - இடம் - Place;)
1)
உள்ளத் தினிற்கறுப்பை ஒளித்துவைத் தோயாமல்
கள்ளத் தனம்செய்யும் கையர்கள் ஆள்கின்றார்
எள்ளத் தனையுமுண்மை இலார்ஒழிந்து நாடுய்ய
வெள்ளத் தினையடைத்த விரிசடையன் அருள்கவே.
பதம் பிரித்து:
உள்ளத்தினில் கறுப்பை ஒளித்துவைத்து, ஓயாமல்
கள்ளத்தனம் செய்யும் கையர்கள் ஆள்கின்றார்;
எள்ளத்தனையும் உண்மை இலார் ஒழிந்து, நாடு உய்ய,
வெள்ளத்தினை அடைத்த விரிசடையன் அருள்கவே.
கறுப்பு - வஞ்சனை;
கையர் - கீழோர்;
எள்ளத்தனையும் - எள்ளளவும்; சிறிதளவும்;
2)
தமிழெங்கள் மூச்சென்பார் தயங்காமல் வெறுப்புகளை
உமிழுஞ்சொல் உரைத்திடுவார் அவர்நடத்தும் ஊடகத்தில்
அமிழுந்தான் ஆங்கிலத்தில் அத்தமிழும் இதுமாறக்
கமழ்கொன்றைச் சடையனருட் கண்கொண்டு நோக்குகவே.
பதம் பிரித்து:
"தமிழ் எங்கள் மூச்சு" என்பார்; தயங்காமல் வெறுப்புகளை
உமிழும் சொல் உரைத்திடுவார்; அவர் நடத்தும் ஊடகத்தில்,
அமிழும்தான் ஆங்கிலத்தில் அத்-தமிழும்; இது மாறக்,
கமழ்-கொன்றைச் சடையன் அருட்கண்கொண்டு நோக்குகவே.
ஊடகம் - Media (such as TV, Radio, Magazines, Newspapers);
3)
சாதிப்பேர் நீக்கென்பார் சாதிவெறி வளர்த்திடுவார்
பாதிப்பால் நாடழியப் பார்த்திருப்பார் மேன்மேலும்
ஊதிப்பேர் பெறுவாரிப் பிணிநீங்கி நாடுய்யப்
பாதிப்பெண் ஆனமுக்கட் பரமனருள் புரிகவே.
பதம் பிரித்து:
"சாதிப்பேர் நீக்கு" என்பார்; சாதிவெறி வளர்த்திடுவார்;
பாதிப்பால் நாடு அழியப் பார்த்திருப்பார்; மேன்மேலும்
ஊதிப், பேர் பெறுவார்; இப்-பிணி நீங்கி நாடு உய்யப்,
பாதிப்-பெண் ஆன முக்கட்-பரமன் அருள்புரிகவே.
4)
புதுமைகள்செய் வோமென்பார் பொதுச்சொத்தை அபகரிப்பார்
மதுவகைகள் மிகவிற்று மக்களுடல் நலம்கெடுப்பார்
இதுவுமிவர் இயல்பாகும் இன்னார்போய் நாடுய்ய
மதுரமொழி மலைமங்கை மணவாளன் அருள்கவே.
பதம் பிரித்து:
"புதுமைகள் செய்வோம்" என்பார்; பொதுச்சொத்தை அபகரிப்பார்;
மதுவகைகள் மிக விற்று, மக்கள் உடல்நலம் கெடுப்பார்;
இதுவும் இவர் இயல்பு ஆகும்; இன்னார் போய் நாடு உய்ய,
மதுரமொழி மலைமங்கை மணவாளன் அருள்கவே.
அபகரித்தல் - கவர்தல் (plunder);
இன்னார் - 1. இத்தகையோர்; 2. பகைவர்;
போய் - ஒழிந்து; நீங்கி;
மதுரமொழி மலைமங்கை மணவாளன் - இனிய மொழி பேசும் உமைக்குக் கணவன் - சிவபெருமான்;
5)
நஞ்சைச்சொல் வைத்தநய வஞ்சகர்கள் நெறிபிறழார்
அஞ்சப்பல் லின்னல்கள் அவர்க்கிழைத்து நாட்டுக்குக்
கிஞ்சித்தும் நன்மைசெயாக் கிராதர்கள் தங்களது
நெஞ்சத்தை வஞ்சத்தை மூடகமென் றறிவோமே.
பதம் பிரித்து:
நஞ்சைச் சொல் வைத்த நயவஞ்சகர்கள், நெறி-பிறழார்
அஞ்சப் பல்-இன்னல்கள் அவர்க்கு இழைத்து நாட்டுக்குக்
கிஞ்சித்தும் நன்மை செயாக் கிராதர்கள், தங்களது
நெஞ்சத்தை வஞ்சத்தை மூடு-அகம் என்று அறிவோமே.
நயவஞ்சகர் - இனிமைகாட்டி ஏமாற்றுபவர்;
நெறி பிறழார் - நேர்மை வழுவாத நல்லவர்கள்;
கிஞ்சித்தும் - கொஞ்சமும்;
கிராதர் - கொடியவர்;
வஞ்சத்தை மூடு அகம் - வஞ்சனையை மறைத்துவைத்திருக்கின்ற இடம்;
6)
பொருளாரும் வழியென்று பொல்லாத வழியோடும்
இருளார்ந்த உள்ளத்தில் எருதேறும் எம்பெருமான்
அருளார்ந்த கண்ணுடைய அப்பனவன் பெயர்பதிந்தால்
தெருளாரும் ஒளியாரும் திருமலியும் நிலைதானே.
பதம் பிரித்து:
பொருள் ஆரும் வழி என்று பொல்லாத வழி ஓடும்
இருள் ஆர்ந்த உள்ளத்தில், எருது ஏறும் எம்பெருமான்,
அருள் ஆர்ந்த கண்ணுடைய அப்பன்-அவன் பெயர் பதிந்தால்,
தெருள் ஆரும், ஒளி ஆரும், திரு மலியும் நிலைதானே.
ஆர்தல் - மிகுதல்; நிறைதல்;
இருள் - கறுப்பு; வஞ்சனை; அறியாமை;
தெருள் - அறிவின் தெளிவு; ஞானம்;
வி. சுப்பிரமணியன்
------------- -------------
No comments:
Post a Comment