Thursday, January 9, 2025

G.12 - எனக்குப் பிடித்தது - கவியரங்கம் - 40

G.012

இப்பாடல் 2014-இல் எழுதப்பட்டது.

சந்தவசந்தக் கவியரங்கம்-40 -

"எனக்குப் பிடித்த ...." என்ற தலைப்பு.


2014-04-12

G.12 - எனக்குப் பிடித்தது - கவியரங்கம் - 40

-------------------------

0-1) ---- இறைவணக்கம் --- (அறுசீர் விருத்தம் - "மா மா காய்" - அரையடி வாய்பாடு) --

படித்த படிப்பின் பயனெல்லாம் .. பணத்தைத் திரட்ட என்றபித்துப்

பிடித்து நாளைக் கழிக்கின்ற .. பேதை மார்கள் காலமிதில்,

துடித்த தேவர் ஓடிவந்து .. துதிக்கக் கடலின் நஞ்சுண்டாய்,

அடித்த லத்தை ஆதரிக்கும் .. அகமெ னக்குத் தந்தாயே!


நஞ்சுண்டாய் - நஞ்சை உண்டவனே;

("துடித்த தேவர் ஓடிவந்து துதிக்கக் கடலின் நஞ்சுண்டாய்" - என்ற அடியை முதலிற்கொண்டு பொருள்கொள்க.)


0-2) -- இறைவணக்கம் --- (கலிவிருத்தம் - "மா மா விளம் காய்" - வாய்பாடு) --

அலையார் சடையா அம்மலர்த் தாள்போற்றி

தலைமா லையணி தலைவனே தாள்போற்றி

சிலையால் எயில்கள் செற்றவா தாள்போற்றி.

தொலையாச் செல்வா தூமலர்த் தாள்போற்றி


அம் - அழகிய;

சிலை - வில்;

எயில் - கோட்டை;


0-3) -- அவை வணக்கம் -- (அறுசீர் விருத்தம் - "மா மா மா மா மா காய்" - வாய்பாடு) --

கொன்றை சூடும் கூத்தன் கழலைக் கும்பிட் டும்முன்னே

என்றன் விருப்பில் ஒன்றைப் பாட்டில் இயம்ப ஆசைகொண்டேன்

மன்றில் திரண்டி ருக்கும் அன்பீர் வணங்கி மகிழ்கின்றேன்

இன்று சொல்லும் இதனிற் குறைகள் இருப்பின் உரைப்பீரே.


எனக்குப் பிடித்தது

-------------------------

(மண்டலித்துவரும் அந்தாதித்தொடை அமைந்த பாடல்கள்)


1) -- அறுசீர் விருத்தம் - "விளம் மா தேமா" - அரையடி வாய்பாடு –

உளமகிழ் கின்ற வற்றுள் .. ஒன்றினை எழுத வந்தேன்;

பளபள வென்றி ருக்கப் .. பலநினை வுகளைத் தேய்த்தேன்;

மளமள வென்று தாளில் .. வரைந்திட அமர்ந்தேன்; ஆனால்

உளறலாய்ப் போகும் என்ற .. உண்மையை உணர்ந்து கொண்டேன்.


2)

கொள்கிற பொருள்கள் வீட்டில் .. குவிந்துகி டப்ப தொத்தே

உள்கிடில் உணர லாகும்; .. உகப்பன எண்ணல் ஆகா;

வெள்கினேன் எவ்வா றொன்றை .. விரும்பிய தென்பேன்; சொன்னால்

எள்குமே என்னை நோக்கி .. ஏனைய விருப்ப மெல்லாம்.


கொள்ளுதல் - விலைக்கு வாங்குதல்; பெறுதல்;

உள்குதல் - சிந்தித்தல்;

உகப்பன எண்ணல் ஆகா - விரும்புவன எண்ணற்றவை;

வெள்குதல் - நாணுதல்;

எள்குதல் - இகழ்தல்;


3) -- அறுசீர் விருத்தம் - "மா மா காய்" - அரையடி வாய்பாடு --

எல்லா ருக்கும் தெரிந்தவொன்றே .. இப்பி றப்பைத் தந்ததெது

வில்லால் காமன் எய்தகணை .. விளைத்த தென்பர் இவ்வுடலை

வல்லார் அறிவர் வல்வினையால் .. வாய்த்த திந்தப் பிறப்பென்று

பொல்லா ஆசைப் புயலோய்ந்தால் .. புவியில் மீண்டும் பிறவோமே.


4) -- அறுசீர் விருத்தம் - "விளம் மா காய் மா மா காய்" - வாய்பாடு --

பிறவியைக் கொடுக்கும் விருப்பங்கள்; .. பிறந்த பின்னும் பருவத்தின்

உறவினில் உதிக்கும் விருப்பங்கள்; .. உயிரைக் கொள்ளப் பக்கத்தில்

மறலியின் தமர்கள் வந்தாலும் .. மனத்தில் இன்னும் விருப்பங்கள்;

அறவிடல் ஆமோ ஆசைகளை? .. அதற்கோர் வழியும் இங்குண்டோ?


மறலி - யமன்;

அற - முழுதும்;


5) -- அறுசீர் விருத்தம் - "மா மா காய்" - அரையடி வாய்பாடு --

உண்டென் கின்றார் வள்ளுவரும்; .. ஒருவன் கழலைப் பற்றிவிடில்

விண்டு போகும் பற்றென்றார்; .. மிகவும் எளிய வழிபோலக்

கண்டும் வாழ்வில் கடைப்பிடிக்கக் .. கருது வார்கள் மிகச்சிலரே;

தொண்டு பட்டார் தொடர்பிருந்தால் .. சுலப மாகப் பெறலாமே.


விண்டு - நீங்கி; (விள்ளுதல் - நீங்குதல்);

தொண்டுபட்டார் - தொண்டுசெய்யும் அடியவர்கள்;


6) -- கலிவிருத்தம் - "மா மா மா விளம்" - வாய்பாடு) --

பெறலாம் மண்ணிற் பெரிதும் நயந்தன;

சிறவா வினைபோய்ச் சேமம் எய்தலாம்;

நறவார் தமிழாம் நாவுக் கரசர்சொல்

மறவா மனத்தார்க் கருங்காப் பாலனே.


நயந்தன - விரும்பியன;

சிறவா வினை - சிறத்தல் இல்லாத வினை - தீவினை;

சேமம் - க்ஷேமம் - நல்வாழ்வு; பாதுகாவல்;

நறவு ஆர் தமிழ் ஆம் நாவுக்கரசர் சொல் - தேன் பொருந்திய தமிழான அப்பர் தேவாரத்தை;

மறவா மனத்தார்க்கு அருங்-காப்பு ஆலனே - மறத்தல் இன்றி எண்ணும் (/ ஓதும்) மனம் உடையவர்களுக்கு கல்லாலின்கீழ் இருக்கும் தட்சிணாமூர்த்தி அரிய பாதுகாவல் ஆவான்; (ஆலன் - கல்லால-மரத்தின்கீழ் இருப்பவன்);


**7**) -- திருநாவுக்கரசர் தேவாரம் - திருநேரிசை - 4.67.9.

பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதை மார்தம்

மேலனாய்க் கழிந்த நாளு(ம்) மெலிவொடு மூப்பு வந்து

கோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோளி லாது கெட்டேன்

சேலுலாம் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்து ளானே.


வி. சுப்பிரமணியன்

------------- -------------


No comments:

Post a Comment

G.26 - அடியும் முடியும் - (வேறு பாடல்கள்)

G.026 இ வை 2009- இல் எழுதப் பெற்ற பாடல் கள் . 2009-01-01 to 2009-07-01 G.26 - அடியும் முடியும் - ( வேறு பாடல்கள் ) ============= ( ...