G.017
இப்பாடல் 2017-இல் எழுதப்பட்டது.
2017-12-28
G.17 - இப்படி எப்படி - கவியரங்கம் 44
-------------------------
0) –- அவை வணக்கம் – (அறுசீர் விருத்தம் - விளம் விளம் தேமா - அரையடி வாய்பாடு)
இப்படி எப்படி என்ற .. இத்தலைப் பினிலொரு பாடல்
செப்பிட நானு(ம்)மு யன்றேன் .. செந்தமிழ்ப் பாவலர் முன்னே
சொற்பொருட் பிழைகளைக் காணின் .. சுட்டியு ரைத்திட வேண்டும்
கற்பனை மிக்குடை யீரே .. கனிவொடு செய்திடு வீரே.
கற்பனை - கல்வி;
1) ---- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா ----
படியிதன்மேல் புல்பூச்சி பறவைநரன் என்றென்று
முடிவிலதாய்ப் பல்பிறவி முளைத்துமிக எய்த்தாலும்
மடிவதில்லை ஆசைஇந்த மாயவலை நீங்குவ(து)எப்
படியெனமா ஞானியர்கள் பாடினு(ம்)நான் உணரேனே.
படி - பூமி;
நரன் - மனிதன்;
எய்த்தல் - இளைத்தல்; வருந்துதல்;
2)
மடியினிலே தவழ்கின்ற வயதுமுதல் வலிமைமிகு
வடிவுடைய இளமையதன் வரம்புவரை எல்லாரும்
படிபடியென்(று) அனுதினமும் பகர்கின்றார் ஆனாலும்
படியமனம் மறுப்பதையே பார்க்கின்றோம் விந்தையிதே.
வரம்பு - எல்லை;
படி - 1. படித்தல் (ஓதுதல்; வாசித்தல்); / 2. படிதல் - கீழ்ப்படிதல்; அடங்குதல்;
3)
கொடியிடையும் கிளிமொழியும் கொண்டமட மங்கையவள்
நொடியளவும் நம்பக்கம் நோக்காளோ எனவாயிற்
படியெதிரே தவம்செய்து பன்னாளும் நின்றிருக்கும்
படிமதனின் மலர்க்கணைகள் பாயஇலக் கானோமே
படி - 1. சோபானம் (Step, stair; rung of a ladder); / 2. விதம் (Manner, mode);
மதன் - காமன்; மன்மதன்;
இலக்கு - Target for an arrow;
4)
இடியாதே தோல்விவரின் இதுவேபின் வெற்றிக்குப்
படியாகும் பாரென்பார் படித்தோர்கள் ஆனால்இப்
படியேனா யிற்றென்று பாராமல் தொடர்ந்தால்எப்
படியாகும் வெற்றிக்குப் படிபகரீர் பாரீரே.
பதம் பிரித்து:
"இடியாதே தோல்வி வரின்; இதுவே, பின் வெற்றிக்குப்
படி ஆகும் பார்" என்பார் படித்தோர்கள்; ஆனால்
இப்படி ஏன் ஆயிற்று என்று பாராமல் தொடர்ந்தால்,
எப்படி ஆகும் வெற்றிக்குப் படி? பகரீர் பாரீரே.
இடிதல் - வருந்துதல்; மனம்கலங்குதல்;
பகரீர் பாரீர் - உலகத்தீர் சொல்லுங்கள்;
ஏ – ஈற்றசை;
5)
இடியனைய குரலுடைய எருமையதன் மீதேறிக்
கொடியநமன் நம்முயிரைக் கொல்வதற்குக் கையிலொரு
பிடிகயிறோ(டு) அடையாமுன் பெரும்பஞ்சத்(து) இருவர்க்குப்
படியருள்செய் மிழலைநகர்ப் பரமனடி பணிநெஞ்சே.
இடி அனைய - இடி போன்ற;
பிடிகயிறு - பிடிக்கும் கயிறு; (உயிர்களைப் பிடித்துச்செல்லும் பாசம்);
படி - படிக்காசு - நாட்செலவுக்குக் கொடுக்கும் பணம் (Subsistence allowance for a day);
பெரும்-பஞ்சத்து இருவர்க்குப் படி அருள்செய் மிழலைநகர்ப் பரமன் - பெரிய பஞ்சம் ஏற்பட்டபோது சம்பந்தருக்கும் அப்பருக்கும் படிக்காசு அளித்த திருவீழிமிழலைப் பெருமான்;
6)
பொடியார்ந்த மேனியனே பொன்னாரும் சடையின்மேல்
கடியார்ந்த கொன்றையனே காரிகையோர் பங்கினனே
வடியேந்து சூலத்தாய் மணியாரும் கண்டத்தாய்
துடியேந்து கையினனே தொழுதேனைக் காத்தருளே.
பொடி ஆர்ந்த மேனியனே - திருநீற்றைத் திருமேனியில் பூசியவனே; (பொடி - திருநீறு); (ஆர்தல் - பொருந்துதல்; மிகுதல்; ஒத்தல்);
பொன் ஆரும் சடையின்மேல் கடி ஆர்ந்த கொன்றையனே - பொன் போன்ற சடைமேல் வாசனை மிகுந்த கொன்றைமலரை அணிந்தவனே; (கடி - வாசனை);
காரிகை ஓர் பங்கினனே - உமைபங்கனே;
வடி ஏந்து சூலத்தாய் - கூமையான சூலத்தை ஏந்தியவனே; (வடி - கூர்மை);
மணி ஆரும் கண்டத்தாய் - நீலமணி திகழும் கண்டனே;
துடி ஏந்து கையினனே - கையில் உடுக்கையை ஏந்தியவனே; (துடி - உடுக்கு);
தொழுதேனைக் காத்தருளே - தொழும் என்னை காத்தருள்க;
7) --- வஞ்சித்துறை - (கூவிளம் கூவிளம் - வாய்பாடு) / (தத்தன தத்தன - வண்ணம்) ---
இப்படி எப்படி?
அப்படி எப்படி?
செப்படி வித்தையோ?
அப்பனு ளப்படி!
செப்படி வித்தை - மாயாஜாலம்; தந்திரம்;
அப்பன் உளப்படி - எம்பெருமான் திருவுளம் செய்தவாறு;
வி. சுப்பிரமணியன்
------------- -------------
No comments:
Post a Comment