G.019
இது 2018-இல் எழுதப்பட்டது.
2018-03-19
G.19 - காஞ்சி ஆசாரியர் - ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அஞ்சலி
-------------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(10 பாடல்கள். பிற்பாதியில் உள்ள 5 பாடல்கள், "நமசிவாய" என்ற திருவைந்தெழுத்தில் உள்ள எழுத்துகளில் ஒவ்வொன்றை முதலாகக் கொண்டு தொடங்குவன)
1)
பொருள்நோக்கி உழல்கின்ற புவியோரை மெய்ஞ்ஞானப்
பொருள்நோக்கி வாழுமெனப் போதிக்கச் சோணாட்டில்
இருள்நீக்கி தனில்தோன்றி எல்லார்க்கும் எப்போதும்
அருள்நோக்கம் செய்தகுரு சயேந்திரர் அடிபோற்றி.
பொருள் நோக்கி உழல்கின்ற புவியோரை - காசு, சொத்து, முதலிய நிலையற்றவற்றை விரும்பி அலைந்து வருந்துகின்ற மக்களை; (நோக்கி - கருதி; விரும்பி);
மெய்ஞ்ஞானப் பொருள் - மெய்ப்பொருள், ஞானப்பொருள்; (திருநாவுக்கரசர் தேவாரம் - 6.67.3 - "மெய்ஞ்ஞானப் பொருள் ஆனானை");
சோணாட்டில் இருள்நீக்கிதனில் தோன்றி - சோழநாட்டில் இருள்நீக்கி என்ற ஊரில் பிறந்து;
எல்லார்க்கும் எப்போதும் அருள்நோக்கம் செய்தகுரு சயேந்திரர் அடிபோற்றி - எல்லாருக்கும் எப்பொழுதும் அருட்கண்ணால் பார்த்து அருள்செய்த குருவான ஜயேந்திரர் திருவடிகளுக்கு வணக்கம்;
2)
வலியோர்முன் அஞ்சாத மாண்புடைய அருளாளர்
பொலிவாரும் திருமுகத்தில் புன்னகையும் தேசத்தின்
கலிதீரும் வழிநாடிக் காணுளமும் கொண்டென்றும்
சலியாமல் உழைத்தகுரு சயேந்திரர் தாள்போற்றி.
தேசத்தின் கலி தீரும் வழி நாடிக் காண் உளமும்கொண்டு - நாட்டின் துன்பங்கள் தீர்வதற்கு உபாயங்களை ஆராய்ந்து காணும் உள்ளமும் கொண்டு;
3)
எத்துமிகச் செய்வோர்முன் எளியோர்க்கோர் அரணானார்
பத்திநெறி நமைக்காக்கும் படையென்று காட்டியவர்
எத்திசையும் சென்றுநெறி எடுத்துரைத்துச் சங்கரரின்
அத்துவித வழிநின்ற சயேந்திரர் அடிபோற்றி.
எத்து - வஞ்சனை;
அரண் - கோட்டை; காவல்;
பத்திநெறி நமைக் காக்கும் படை என்று காட்டியவர் - பக்திமார்க்கமே நம்மைக் காக்கும் சிறந்த ஆயுதம் என்று காட்டியவர்;
சங்கரரின் அத்துவித வழி நின்ற - ஆதிசங்கரர் உபதேசித்த அத்வைதக்-கொள்கையைப் பின்பற்றிய;
4)
எக்கணமும் முக்கணனின் இணையடியை ஏத்தியவர்
தெக்கணமும் வடநாடும் சென்றரிய தொண்டாற்றி
மக்களிடை ஒற்றுமைக்கு வழிவகுத்துப் பின்பற்றத்
தக்கனசெய் சற்குரவர் சயேந்திரர் தாள்போற்றி.
தெக்கணமும் வடநாடும் சென்று அரிய தொண்டு ஆற்றி - தென்னாடு வடநாடு எங்கும் பல இடங்களுக்குச் சென்று அரிய பணிகளைச் செய்து;
பின்பற்றத் தக்கன செய் சற்குரவர் - நாம் கடைப்பிடிக்கத் தகுந்தவற்றைச் செய்த சத்குரு;
5)
சச்சரவு சண்டையறத் தாமுழைத்தார் சற்றேனும்
அச்சமிலார் எல்லார்க்கும் அன்புடைய பண்புடையார்
கச்சியுறை அருட்கடலாம் காமாட்சி அவள்பாதம்
உச்சியணி சயேந்திரர் உபயமலர்த் தாள்போற்றி.
கச்சி உறை அருட்கடல் ஆம் காமாட்சிஅவள் பாதம் உச்சி அணி - காஞ்சிபுரத்தில் உறைகின்ற கருணைக்கடலான காமாட்சியன்னையின் திருவடியைத் தம் தலைமேல் தாங்கிய;
உபய மலர்த்தாள் - மலர் போன்ற இரு-திருவடிகள்; (உபயம் - இரண்டு);
6) -- ந --
நருமதைகா விரிகங்கை நதிவளஞ்சேர் நாடெங்கும்
அருமறையின் நெறிவளர அரும்பணிகள் ஆற்றியவர்
ஒருவரையும் ஒதுக்காமல் ஒருங்கிணைத்துப் பாருய்யத்
தருமவழி காட்டியவர் சயேந்திரர் தாள்போற்றி.
நருமதை - நர்மதா என்ற ஆறு;
பார் உய்யத் தருமவழி காட்டியவர் - உலகம் உய்ய தர்ம-மார்க்கத்தைக் காட்டியவர்;
7) –- ம –-
மத்தமணி சடையுடைய மாதேவன் மலைபேர்த்த
பத்துமணி முடியினனைப் பருவரைக்கீழ் அடர்த்தான்பேர்
நித்தமணி நெஞ்சுடையார் நிறையன்பால் சேரியில்கால்
வைத்தமணி சயேந்திரர் மலர்க்கழல்கள் வாழியவே.
மத்தம் அணி சடையுடைய மாதேவன் மலை பேர்த்த - ஊமத்தமலரைச் சடையில் அணிந்த மகாதேவன் உறையும் கயிலைமலையைப் பெயர்த்த;
பத்து-மணிமுடியினனைப் பருவரைக்கீழ் அடர்த்தான் பேர் - அழகிய கிரீடம் அணிந்த பத்துத்தலைகளையுடைய இராவணனை அந்தப் பெரிய மலைக்கீழ் நசுக்கிய சிவபெருமானது திருநாமத்தை;
நித்தம் அணி நெஞ்சு உடையார் - எப்போதும் தம் நெஞ்சில் தாங்கியவர்;
நிறை அன்பால் சேரியில் கால்வைத்த மணி - மக்கள்மேல் உள்ள பேரன்பால் சேரி முதலிய இடங்களுக்கும் சென்று வழிகாட்டியவர், சிறந்த மணி போன்றவர்;
சயேந்திரர் மலர்க்கழல்கள் வாழியவே - அத்தகைய ஜயேந்திரர் மலரடிகள் வாழ்க ;
8) -- சி --
சிலைகுடையா ஏந்தரியும் செம்மலரின் மேலானும்
அலமருமா றுயர்சோதி அரனடியை மறவாத
நிலையுடையார் மேனிமிசை நீறுதிகழ் கோலத்தர்
உலகுபுகழ் சயேந்திரர் உபயமலர்த் தாள்போற்றி.
சிலை குடையா ஏந்து அரியும் செம்மலரின் மேலானும் அலமருமாறு உயர் சோதி - மலையைக் குடையாக ஏந்திய திருமாலும் தாமரைமலர்மேல் உறையும் பிரமனும் அடிமுடி தேடி வாடும்படி உயர்ந்த ஜோதி; (மலையைக் குடையாகப் பிடித்தது கிருஷ்ணாவதார நிகழ்ச்சி);
அரன் அடியை மறவாத நிலை உடையார் - அச்சிவபெருமானது திருவடியை என்றும் மறவாதவர்;
மேனிமிசை நீறு திகழ் கோலத்தர் - உடல்மீது திருநீற்றைப் பூசியவர்;
உலகு புகழ் சயேந்திரர் உபய மலர்த்தாள் போற்றி - பார் புகழும் ஜயேந்திரரது இரு-திருவடிகளுக்கு வணக்கம்;
9) -- வா --
வார்த்தைபல அடுக்கிமிக வஞ்சிப்பார்க் கருளானைப்
பார்த்தனுக்குப் படையருளப் பன்றிப்பின் செல்முக்கண்
மூர்த்திதனைப் போற்றியவர் முன்பணிந்த அன்பரிடர்
தீர்த்தமுனி சயேந்திரர் செம்மலர்த்தாள் வாழியவே.
பார்த்தனுக்குப் படை அருளப் பன்றிப்பின் செல் முக்கண் மூர்த்திதனைப் போற்றியவர் - அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரம் கொடுப்பதற்காக வேடன் ஆகி ஒரு பன்றியைத் துரத்திச்சென்ற முக்கட்பெருமானை வழிபட்டவர்;
முன் பணிந்த அன்பர் இடர் தீர்த்த முனி - வந்து வணங்கிய அன்பர்களது கஷ்டங்களைத் தீர்த்த முனிவர்;
சயேந்திரர் செம்மலர்த்தாள் வாழியவே - ஜயேந்திரரது செந்தாமரை போன்ற திருவடிகள் வாழ்க;
10) -- ய --
யதியாகி அனைவர்க்கும் அறமுரைத்த குருவாகிக்
கதிநீரென் றடைந்தார்க்குக் கவலையறப் பொழியுமருள்
நிதியாகி ஏகம்பன் நீங்காத திருக்கச்சிப்
பதிமேய சயேந்திரர் பாதமலர் வாழியவே.
யதி ஆகி - துறவி ஆகி;
அனைவர்க்கும் அறம் உரைத்த குரு ஆகிக் - எல்லார்க்கும் தர்மத்தைப் போதித்த குரு ஆகி;
"கதி நீர்" என்று அடைந்தார்க்குக் கவலை அறப் பொழியும் அருள்நிதி ஆகி - "நீங்களே எமக்குத் துணை" என்று சரண்புகுந்தவர்களது கவலைகள் தீரும்படி பொழிகின்ற அருள்நிதி ஆகி;
ஏகம்பன் நீங்காத திருக்கச்சிப் பதி மேய சயேந்திரர் பாதமலர் வாழியவே - ஏகாம்பரேஸ்வரன் நிலைத்து உறையும் காஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் ஜயேந்திரரது திருவடித்தாமரை வாழ்க;
வி. சுப்பிரமணியன்
------------- -------------
No comments:
Post a Comment