Saturday, May 18, 2024

G.7 - எத்தலைப்பில் எழுதுவது? - கவியரங்கம் 43

G.007

இப்பாடல் 2016-இல் எழுதப்பட்டது.

I wrote 2 sets of songs for this kaviyarangam at that time. This is the first set.


சந்தவசந்தக் கவியரங்கம் - 43

"எனக்குப் பிடித்த தலைப்பு" (எத்தலைப்பில் வேண்டுமானாலும் எழுதலாம்)


2016-05-21

G.7 - எத்தலைப்பில் எழுதுவது? - கவியரங்கம் 43

----------------------------------------------

(கலிவிருத்தம் - "தானா தனதானா தானா தனதானா" என்ற சந்தம்)

(மா மாங்காய் மா மாங்காய்)

(சம்பந்தர் தேவாரம் - 1.80.1 - "கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே")


0-1) ---- இறைவணக்கம் ---

தலைப்பை யரவோடு தண்ணார் மதிசூடீ

உலப்பில் பெருமானே உம்பர்க் கொருகோனே

மலைக்கு மகள்நாதா மழுவாள் உடையாயென்

மலைப்பை அறுவித்து வானம் அருளாயே.


தலைப் பையரவோடு தண் ஆர் மதி சூடீ - தலையில் படம் உடைய நாகப்பாம்போடு குளிர்ந்த பிறைச்சந்திரனையும் அணிந்தவனே; (பை - பாம்பின் படம்);

உலப்பு இல் பெருமானே - அழிவற்றவனே; (உலப்பு - அழிவு; சாவு);

உம்பர்க்கு ஒரு கோனே - தேவர்களுக்கெல்லாம் ஒரு தலைவனே; (உம்பர் - தேவர்);

மலைக்கு மகள் நாதா - உமைக்குக் கணவனே; (மலைக்கு மகள் - மலைமகள் - உமை)

மழுவாள் உடையாய் - மழுவாயுதத்தை ஏந்தியவனே;

என் மலைப்பை அறுவித்து வானம் அருளாயே - என் அறிவுமயக்கத்தைத் தீர்த்து நற்கதி அருள்வாயாக; (அறுவித்தல் - அறுத்தல் - இல்லாமற்செய்தல்; நீக்குதல்); (திருநாவுக்கரசர் தேவாரம் - 5.62.8 - "மாசார் பாச மயக்கு அறுவித்து எனுள்" - மாசு ஆர் - குற்றம் பொருந்திய. பாசமயக்கு - ஆசையாகிய மயக்கத்தை. அறுவித்து - நீங்கச்செய்து.);


0-2) --- அவைவணக்கம் ---

தலைப்புத் தருபோதும் சங்கை மிகவாகி

அலைப்புண் நிலையேனான் அதுவும் இலையென்றால்

இலக்குத் தெரியாதே எழுத முயல்வேன்தன்

கலக்கம் அளவில்லை காணீர் அவையீரே.


தலைப்புத் தருபோதும் சங்கை மிக ஆகி - தலைப்பைத் தந்தபொழுதும் சந்தேகம்/அச்சம் மிக ஆகி; (தருபோதும் - வினைத்தொகை - தந்த போதும்); (சங்கை - ஐயம்; அச்சம்);

அலைப்பு உண் நிலையேன் நான் - வருந்துகின்ற நிலையை உடைய நான்; (அலைப்பு - வருத்தம்; அலைப்பு உண்ணுதல் - வருத்தம் அடைதல்);


1)

கலவ மயிலன்னார் காதல் கவினாரும்

நிலவு கதிர்சாயும் நேரம் கடல்சூழ்ந்த

உலகை அரசாள்வோர் ஊழல் எனநாளும்

பலரும் சலியாமற் பாக்கள் புனைகின்றார்.


பதம் பிரித்து:

கலவ மயில் அன்னார் காதல், கவின் ஆரும்

நிலவு, கதிர் சாயும் நேரம், கடல் சூழ்ந்த

உலகை அரசு ஆள்வோர் ஊழல், என நாளும்

பலரும் சலியாமல் பாக்கள் புனைகின்றார்


கலவமயில் அன்னார் - தோகைமயில் போன்ற பெண்கள்;

கதிர் - சூரியன்;

சலியாமல் - சலித்தல் இன்றி; (சலித்தல் - 1. சோர்தல்; 2. To sift; சல்லடையாற் சலித்தல்);


2)

மண்ணிற் பலகோடி மாக்கள் உயிர்வாழ்ந்து

மண்ணில் மறைகின்ற வண்ணம் அதுகண்டோம்

எண்ணிற் புனைபாவின் எல்லை எதுவென்று

திண்ணம் உணர்வோமேல் செப்பல் தெளிவாமே.


மாக்கள் - விலங்குகள்; மனிதர்கள்;

எண்ணில் புனை பாவின் எல்லை எது என்று திண்ணம் உணர்வோமேல் - சிந்தித்தால், புனைகின்ற பாக்களின் கால அளவு எது என்று உறுதியாக உணர்ந்தோம் என்றால்;

செப்பல் தெளிவு ஆம் - நாம் சொல்வதில் (இயற்றும் பாக்களில்) தெளிவு உண்டாகும்;


3)

கற்றைப் பணம்நாடிக் காலம் கழியாமல்

வெற்றுக் கவிபாடி விழலுக் கிறையாமல்

வெற்றிக் கொடிமீது விடையை உடையான்தாள்

பற்றிப் புகழ்மாலை பாடிப் பணிவோமே.


காலம் கழியாமல் - காலத்தைப் போக்காமல்;

விழலுக்கிறையாமல் - வீணே பாடுபடாமல்; பயனற்ற செயலில் ஈடுபடாமல்;

வெற்றிக் கொடிமீது விடையை உடையான் - இடபச்சின்னம் பொறித்த வெற்றிக்கொடி உடையவன்;

உடையான் தாள் பற்றிப் புகழ்மாலை பாடி - இறைவன் திருவடியைப் பிடித்துத் துதிகள் பாடி; இறைவன் திருவடியைக் குறித்துப் பாமாலைகள் பாடி; (பற்றி - 1. பிடித்து (பற்றுதல்); 2. குறித்து));


4)

ஆற்றுச் சடையின்மேல் அரவும் அணிதிங்கட்

கீற்றும் புனையீசன் கேடில் மலைபேர்த்தான்

போற்ற விரலூன்றிப் புகழார் பெயரீந்த

ஏற்றன் தனைநாமும் ஏத்தி மகிழ்வோமே.


ஆற்றுச் சடையின்மேல் அரவும் அணி திங்கட் கீற்றும் புனை ஈசன் - கங்கையை இருக்கும் சடையின்மேல் பாம்பையும் அழகிய பிறைச்சந்திரனையும் அணிந்த ஈசனது;

கேடு இல் மலை பேர்த்தான் போற்ற விரல் ஊன்றிப் புகழ் ஆர் பெயர் ஈந்த - அழியாத கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் தன்னைப் போற்றுமாறு ஒரு திருப்பாத விரலை ஊன்றி நசுக்கிப், பின் அவனுக்கு இராவணன் என்ற புகழ்மிக்க பெயரைக் கொடுத்த;

ஏற்றன்தனை நாமும் ஏத்தி மகிழ்வோமே - இடபவாகனனான சிவபெருமானை நாமும் துதித்து இன்புறுவோம்; (ஏற்றன் - இடபவாகனன்);


5)

தொழுத இமையோர்க்குச் சுதையை அருளீசன்

பழுதில் பெருமான்றன் பாதம் தனையுன்னி

எழுதில் தெளிவாகும் எண்ணம் அதனாலே

பழுதை தனையென்றும் பாம்பா நினையோமே


சுதை - அமுதம்;

பழுது இல் பெருமான் - குற்றமற்ற பெருமான்;

உன்னி - நினைத்து; சிந்தித்து;

எழுதில் - எழுதினால்;

பழுதைதனை என்றும் பாம்பா நினையோமே - பழுதையைப் பாம்பாக நினைக்கமாட்டோம்; (பழுதை - கயிறு; வைக்கோற்புரி);


6)

வேலைப் பளுவென்றும் வேளை இலையென்றும்

ஆலைப் படுகன்னல் அதுவாய்த் தினமோடிக்

கோலைப் பிடிகாலம் குறுகா முனமீசன்

காலைப் பணிவோமேல் காலன் பிடியானே.


பளு / பளுவு - கனம்; சுமை;

வேளை - பொழுது; காலம்;

கன்னல் - கரும்பு;

கோல் - கம்பு; ஊன்றுகோல்;

குறுகுதல் - அணுகுதல்; நெருங்குதல்;

ஆலைப் படு கன்னல் அது ஆய் - கரும்பாலையில் நசுக்கப்படும் கரும்பு போல ஆகித் துன்புற்று;

தினம் ஓடிக் கோலைப் பிடி காலம் குறுகாமுனம் - நாள்கள் சென்று, மூப்பு அடைந்து, ஒரு கைத்தடியைப் பிடிக்கும் காலம் வந்தடைவதன் முன்னமே;

ஈசன் காலைப் பணிவோமேல் - ஈசன் திருவடியை நாம் வணங்கினால்;

காலன் பிடியானே - நம்மைக் காலன் பிடிக்கமாட்டான்;


வி. சுப்பிரமணியன்

------------- -------------


No comments:

Post a Comment

G.26 - அடியும் முடியும் - (வேறு பாடல்கள்)

G.026 இ வை 2009- இல் எழுதப் பெற்ற பாடல் கள் . 2009-01-01 to 2009-07-01 G.26 - அடியும் முடியும் - ( வேறு பாடல்கள் ) ============= ( ...