G.006
இப்பாடல் 2007-இல் எழுதப்பட்டது.
This may provide some entertainment - the folly (or uncanny insight) of predictions! :)
சந்தவசந்தக் கவியரங்கம் - 24
2007-06-04
G.6 - Year 2020 - கவியரங்கம்
---------------
0-1) -- இறைவணக்கம் -- (கலிவிருத்தம் - மாங்கனி மாங்கனி மாங்கனி மா)
பத்தோடொரு பத்தாய்இரு பதுமாகிய தலைப்பை
வைத்தார்எழு துகநீரென; மறிசேர்கரம் உடையாய்!
இத்தாரணி எல்லாம்படை ஈசா!விடை ஏறும்
அத்தா!அருள் புரிவாய்!இணை அடிநான்தொழு தேனே.
பதம் பிரித்து:
பத்தோடு ஒரு பத்தாய் இருபதும் ஆகிய தலைப்பை
வைத்தார் எழுதுக நீர் என; மறி சேர் கரம் உடையாய்!
இத் தாரணி எல்லாம் படை ஈசா! விடை ஏறும்
அத்தா! அருள் புரிவாய்! இணை அடி நான் தொழுதேனே.
0-2) -- அவை வணக்கம் -- (கலிவிருத்தம் - மா மா விளம் காய்)
தலைவன் பெயரைத் தாங்கிய தலைவர்க்கும்
மலையும் கடலும் கடந்துறை நண்பர்கள்
பலர்க்கும் வணக்கம்; பாடலைச் செவிமடுத்து
நலங்கள் குறைகள் எவையென நவில்வீரே;
1) -- (அறுசீர் விருத்தம் - "மா மா காய்" என்ற அரையடி வாய்பாடு) --
இருப திருப தென்றாலே
.. என்ன தோன்று கிறதென்றே
ஒருவ ரைப்போய்க் கேட்டேன்நான்;
.. ஒருமா திரியாய்ப் பார்த்துப்பின்
வருவ தெல்லாம் சொல்வேன்;நீர்
.. வையும் இருப திங்கென்றார்!
தருவ தாக நானில்லேன்;
.. சட்டென் றெழுந்த கன்றுவிட்டேன்!
2)
கோடி வீட்டில் வாழ்கிழவர்
.. கோலை ஊன்றி வரும்போது
நாடிச் சென்று சொல்கவென்றேன்!
.. "நாடு போகும் பாதையிலே
கோடி கோடி வந்தாலும்
.. கோட்டை விட்டார் கொள்கைகளை;
மூடி விடுவேன் நான்கண்ணை,
.. மோகம் நாட்டை விடுமுன்னே"!
3) -- (அறுசீர் விருத்தம் - "விளம் மா காய்" என்ற அரையடி வாய்பாடு) --
ஐம்பது வயதுப் பால்காரர்;
.. அவரிடம் போயும் நான்கேட்டேன்;
செம்பினில் பாலை விட்டபடிச்,
.. சிறியதோர் அலைபே சியிலேதோ
வம்புகள் பேசிச் சிரித்தபடி,
.. "வந்திடும் அந்தப் பொற்காலம்;
கொம்பிலா மாடு குடம்கறக்கும்;
.. குழாயினில் நீரும் வரும்"என்றார்!
4) -- (அறுசீர் விருத்தம் - "விளம் விளம் காய்" என்ற அரையடி வாய்பாடு) --
துணிக்கடைச் சோமுவைக் கேட்டவுடன்,
.. "சொல்லவும் வேண்டுமோ? புடைவைகளை
அணிபவர் நாட்டினில் இலராகி,
.. அரைகுறை ஆடையர் பலராவர்;
கணிப்பொறி வழிமிகப் பொருள்வாங்கிக்
.. கடைகளில் நெரிசலே இலையாகும்;
அணியெனக் கிழிசலே உடுத்துவதால்
.. ஆண்டியும் அரசனும் ஒன்றென்றார்!
5) -- (எண்சீர் விருத்தம் - "விளம் விளம் விளம் மா" என்ற அரையடி வாய்பாடு) --
பள்ளியில் படிக்கிற ஒருவனைக் கேட்டேன்;
.. "படிப்பதும் தேவையோ இருபதி ருபதில்!
உள்ளதெல் லாம்தரும் கூகிளும்; அதனால்
.. உலகினில் நூல்களை வாங்குவோர் இலரே;
கொள்ளையாய்ச் சம்பளம் வந்திடும், சும்மாக்
.. கொழகொழ ஆங்கிலப் பேச்சுவந் தாலே!
எள்ளுவர் என்பதால் தமிழினில் பேச
.. எவருமே தயங்கிடும் காலம்"என் றானே!
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment