G.005
2006-11-30
G.5 - தொலைக்காட்சித் தொடர்கள்
-------------------------------------
(வெண்பா - அந்தாதி)
1)
அழுகைத் தொடரைப்போய் ஆனந்தம் என்பார்;
இழுத்(து)இழுத்துச் சோதிப்பார்; இந்தக் - கழுத்தறுப்பைக்
கண்டு மகிழ்ச்சிக் கடலில் திளைக்கின்றார்
பெண்டுகள் பித்துப் பிடித்து.
2)
பிடித்த தொடரில் பிலாக்கணம் கேட்டு
முடிப்பார் முதலில்;பின் சோறு - வடித்திடச்
செல்வார் சிலர்;என்ன செய்வது, தற்காலத்(து)
இல்வாழ்க்கைக் காட்சி இது.
3)
இதற்குப் பிற(கு)என்ன என்(று)அறிய ஆவல்;
அதன்தொடர்ச்சி கண்டால் அதிலும் - முதல்நாள்
அழுகை தொடர்ந்துவரும்; ஐயகோ ஏன்தான்
இழுக்கின்றார் இவ்வா(று) இவர்.
4)
இவரைக் கொலைசெய்வோம் இவ்வாறு; வஞ்சித்(து)
அவளை அழிக்கலாம் அவ்வா(று); - அவமே
தொடர்ந்து வழங்கும் தொலைக்காட்சி காட்டும்
தொடர்களெலாம் நின்றால் சுகம்.
(அவம் - கேடு; பயனின்மை;)
5)
சுகமான வாழ்க்கை, தொடர்கள் இரவு
பகலாய் வருவதென்றார் பக்கத்(து) - அகத்துத்
தலைவி; அவள்கணவர் தாங்க முடியாத்
தலைவலி என்றார் தனக்கு.
6)
தனக்குத் தனித்தொலைக் காட்சியைத் தந்தால்
மனக்கவலை இன்றி மகிழ்ந்து - தினந்தோறும்
இட்டம்போல் பார்த்திடுவேன் எல்லாத் தொடர்களையும்
பட்டணத்துப் பெண்சொன்னாள் பார்.
7)
பார்க்கும் தொடரிலெலாம் பற்றாக் குறைசிரிப்பே;
ஈர்ப்ப(து) அழுகைஒன்றே இங்குப்போல்; - சேர்த்துவைக்கும்
மாமியா ரோடு மருமகளை; ஓலங்கள்
தாமிணைக்கும் என்றால் சகி.
(சகித்தல் - தரித்தல் - பொறுத்தல்).
8)
சகிப்பைப் பெருக்கத் தமிழ்த்தொலைக் காட்சி
மகிழ்ச்சி துளியும் வழங்கா - நிகழ்ச்சி
பலவும் தொடர்ந்து படைக்கும்; அழுகை
விலைகொடுத்து வாங்குகிறோ மே.
9)
மேதினியில் மாதர் விரும்பும் தொடர்களில்
பாதிக்கும் மேலே படுஅழுகை - மீதியில்
காதிலே பூச்சுற்றும் காட்சிகள்; காணாத
போதிருக்கும் நிம்மதி போல்.
(போல் - அசைச் சொல்).
10)
நிம்மதி என்னும் நிகழ்ச்சி கெடுத்திடும்
நம்மன நிம்மதியை; நல்லவராய்ச் - செம்மனப்
பெண்களாய்க் காட்டும் பெருந்தொடர் காண்பதென்(று)என்
கண்கள்தாம்? போது(ம்)அழு கை.
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment