Thursday, December 12, 2024

G.11 - நாட்டின் கோலம் - கவியரங்கம் 39

G.011

இப்பாடல் 2014-இல் எழுதப்பட்டது.

சந்தவசந்தக் கவியரங்கம் - 39 -

"சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்" என்ற தலைப்பு.


2014-01-11

G.11 - நாட்டின் கோலம் - கவியரங்கம் 39

---------------------------------------

0-1) --- இறைவணக்கம் -- அறுசீர்விருத்தம் - "மா கூவிளம் மா விளம் விளம் மா" ---

-- (முதற்சீர் குறில்/குறில்+ஒற்று என்று முடியும்.) --

துதிக்கும் நாவர சர்க்குத் துன்பமி லாதவா றன்று

கொதிக்கும் நீற்றறை தன்னைக் குளிர்ந்திட வைத்தவா அலையார்

நதிக்கும் சென்னிமேல் இடத்தை நல்கினாய் நாரியோர் பங்கா

உதிக்கும் செஞ்சுடர் வண்ணா உன்னடி உள்குமென் நெஞ்சே.


நீற்றறை - சுண்ணாம்புக் காளவாய்;

உதிக்கும் செஞ்சுடர் வண்ணா - எழுகின்ற ஞாயிறு போன்ற செம்மேனியனே;

உன்னடி உள்குமென் நெஞ்சே - உன் திருவடியை என் நெஞ்சம் சிந்திக்கும்;


0-2) --- அவைவணக்கம் -- கலிவிருத்தம் - "மா மா மா விளம்" ---

நஞ்சம் உண்டான் அடியே நச்சினீர்,

செஞ்சொல் அறிவீர், வணங்கிச் செப்புவேன்,

நெஞ்சம் கொதிக்கச் செய்யும் நிகழ்வுகள்

கொஞ்சம் கேட்டுக் கருத்துக் கூறுவீர்.


நஞ்சம் உண்டான் அடியே நச்சினீர் - நீலகண்டன் திருவடியையே விரும்பியவர்களே;

செஞ்சொல் அறிவீர் - நல்ல தமிழை அறிந்தவர்களே;


1) --- கலிவிருத்தம் - "விளம் மா மா காய்" ---

சத்திய மேவ ஜயதே என்றந்த

முத்திரை சொல்லும் நாட்டில் முடிவின்றி

எத்திசை நோக்கி னாலும் இருளாளும்

எத்தினை அரியா சனத்தில் ஏற்றினோமே.


அந்த - that; அந்தம் - அழகு;

எத்து - வஞ்சகம் (cheating, deceiving);


2) --- எண்சீர்விருத்தம் - "காய் காய் மா தேமா" என்ற அரையடி வாய்பாடு ---

திண்டாடும் மக்களுக்குச் செய்த தென்னே

.. தினந்தோறும் பிரிவினைகள் பேசி நாட்டைத்

துண்டாடும் போக்கொன்றே கொள்கை யானார்

.. சுருட்டுவதே தொழிலாகக் கொண்டார் ஊரில்

வண்டாடும் சோலைபல வைப்போம் என்பார்

.. வைத்ததுபோல் கணக்கிருக்கும் வரிப்ப ணத்தை

உண்டாடும் இன்னாரை எண்ணில் நெஞ்சில்

.. ஓங்கியெழும் உணர்வுகளை உரைக்கொ ணாதே.


உண்டாடும் - உண்டு ஆடும் - தின்று இயங்குகின்ற;

இன்னார் - இத்தன்மையர் (Person of such a character); பகைவர்;

உரைக்கொணாது - உரைக்க ஒண்ணாது;


3) --- கலிவிருத்தம் - "காய் காய் மா தேமா" ---

நாட்டிற்கா வாழ்கின்றேன் என்பார் நாளும்

நாட்டத்திற் காசிருக்கும் நானி லத்தில்

ஆட்டத்தின் முடிவணுகும் போதும் பேச்சிற்

காட்டத்தின் முடிவினைத்தான் காட்ட மாட்டார்.


நாட்டிற்கா - நாட்டிற்காக;

நாட்டம் - கண்; விருப்பம்; நோக்கம்;

காட்டம் - Pungency;

4) --- அறுசீர்விருத்தம் - "மா மா காய்" என்ற அரையடி வாய்பாடு ---

வெட்டிப் பேச்சில் வீரர்களாய்

.. வீதி யெங்கும் முழங்கிடுவார்

மட்டில் லாது வாக்குறுதி

.. வழங்கி வென்று நாடாளும்

கட்டில் ஏறிக் கூசாமல்

.. கையை நீட்டிக் கறைசேரும்

கட்டில் மகிழும் கைதவர்தம்

.. காலம் முடிவ தெந்நாளோ!


மட்டு - அளவு;

நாடாளும் கட்டில் - அரசுகட்டில் - சிங்காதனம் (Throne);

கறை சேரும் கட்டு - கறுப்புப்பணக் கட்டுகள்; (கட்டு - மூட்டை - Bundle, packet, pack, bale);

கைதவர் - வஞ்சகர்;


5)

மொழியைப் போற்றி முழங்கிடுவார்

.. முதலில் மக்கள் பசிதீர்க்கும்

வழியைப் பாரார் இலவசங்கள்

.. வழங்கி வெற்றி வாங்கிடுவார்

பழியை இழிவைப் பாராமல்

.. பரம்ப ரைக்குப் பொருள்சேர்ப்பார்

சுழியை நீங்கி மக்களெலாம்

.. சுகித்தி ருப்ப தெந்நாளோ!


சுழி - நீர்ச்சுழி (Whirl, vortex) - சுழல்;


6)

வார்த்தை ஜாலம் விரித்திடுவார்

.. மடையர் ஆக்கி மகிழ்ந்திடுவார்

நாத்தி கத்தை வணங்கிடுவார்

.. நன்மை செய்யச் சுணங்கிடுவார்

சேர்த்து வைப்பார் தம்பொருளைச்;

.. சேர்த்து வையார் நாட்டினரைத்;

தூர்த்தர் ஆளும் காலம்போய்ச்

.. சுகித்தி ருப்ப தெந்நாளோ!


சுணங்குதல் - தாமதித்தல் (To delay, loiter, linger);

தூர்த்தர் - கொடியவர்;


7) --- எண்சீர்விருத்தம் - "காய் காய் மா தேமா" என்ற அரையடி வாய்பாடு ---

பழம்பெருமை பேசிடுவார் பாதை போடப்

.. பழங்கோயில் இடிப்பதற்கும் அஞ்ச மாட்டார்;

தொழும்தமிழை என்றிடுவார்; தெய்வம் தன்னைத்

.. தொழும்தமிழைப் புறக்கணிப்பார்; நாளும் காதில்

விழும்தமிழைக் கேட்கிலது நாரா சம்பாய்

.. வேதனையைத் தருவதையும் பொருட்ப டுத்தார்;

அழும்தமிழைக் காட்டுகின்ற காலம் மாறி

.. அருந்தமிழை ஆதரிப்ப தெந்த நாளோ!


தொழும் - 1. போற்றுங்கள் என்ற ஏவல்; 2. தொழுகின்ற;

அழும்தமிழைக் காட்டுகின்ற காலம் மாறி - தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளிலும் வரும் ஆங்கிலம் கலந்த தமிழையும் பிழைகள் மலிந்த தமிழையும் சுட்டுவதாகவும், தமிழ் வாடுகின்றது என்றும் பொருள்கொள்ளலாம்;

(தமிழைக் காக்கின்றோம் என்று சொல்வார் நடத்தும் தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளில் இவை கண்கூடு);


வி. சுப்பிரமணியன்

------------- -------------

------------ Some comments from members of Santhavasantham group ---------


ramaNi wrote:

அவலத்தை அழகுறச் சொல்லி, இப்போதைக்கு பத்ரகிரியார் போலப் புலம்புவதொன்றே நன்மக்கள் செய்யக் கூடியது என்று காட்டியது அருமை!

--ரமணி


அவனடிமை wrote:

சிவனையே பாடும் சிவசிவா அவர்களையும் சிலிர்த்தெழுந்து சீற வைக்கிறதே சில்லறை அரசியல்! ஆச்சரியம்! தலைவர் கொடுத்த தலைப்பின் கொதிப்பு?


My response:

Good observation!

Since you wondered, here is the rest of the story! :)


இத்தலைப்பிற்கு எழுதலாமா வேண்டாமா என்று சிந்தித்தேன்.

ஏனெனில் எப்பாடலையும் எழுதுவதற்கு அதைப் பற்றிச் சிந்திக்கவேண்டும். அவ்வாறு சிந்திப்பதும் எழுதுவதும் நன்மை பயக்குமா என்றும் சிந்தித்தேன்!

பின், எழுதுவதும் நல்லதே என்று தோன்றியது!


நான் இட்ட பாடலில் சுட்டப்பெறும் விஷயங்களுக்குச் சில உதாரணங்கள்:


https://www.thehindu.com/news/national/tamil-nadu/highway-work-poses-a-threat-to-ancient-temple/article3207207.ece

Highway work poses a threat to ancient temple

It was built during the reign of Rajendra Chola I

Published - March 24, 2012


https://www.thehindu.com/news/national/tamil-nadu/1000yearold-cholaera-temple-facing-threat-of-demolition/article4718623.ece

1,000-year-old Chola-era temple facing threat of demolition

Road under the Thanjavur-Vikkiravandi four-way project to be expanded

Published - May 16, 2013


(தகவல் பரவியதும், அன்பர்கள் விழிப்புணர்வால் இவ்விரண்டும் தடுக்கப்பட்டன.


https://www.thehindu.com/news/national/tamil-nadu/nhai-spares-1000yearold-temple/article4815078.ece

NHAI spares 1000-year-old temple

It is taking up road expansion under the Thanjavur-Vikkiravandi four-lane project

Published - June 15, 2013

....... “We have decided to spare the temple. You can be assured that it will be protected,” NHAI sources said here on Friday .....


Interesting choice of words in the government department statement!

கொதித்த உள்ளத்தைக் குளிர்விக்க வேறு பாடல்களும் எழுதினேன்!! :)

------------- -------------

Monday, November 18, 2024

G.10 - காகத்தின் காலைக்-கவிதை

G.010

2005-12-15

G.10 - காகத்தின் காலைக்-கவிதை

----------

(அறுசீர் விருத்தம் - மா மா காய் - அரையடி வாய்பாடு)


1)

காலை நேரக் கவிதையினைக்

.. காகம் தினமும் படிக்கிறது

வாலை ஆட்டித் தெருநாயும்

.. வாழ்த்துப் பாடி முடிக்கிறது

பாலைப் பொழியும் பசுக்கூடப்

.. பாட்டைக் கேட்கும் ஆசையிலே

சாலை நடுவே மெய்ம்மறந்து

.. தலையை ஆட்டி நின்றிடுமே.


2)

காலை நேரக் கவிதையினைக்

.. காகம் தினமும் படிக்கிறது

சோலைக் குயிலும் சேர்ந்துகொண்டு

.. சோம்பல் வேண்டாம் எழுந்திருந்து

வேலை செய்யப் போவென்னும்

.. வேளை எங்கோ வீதியிலே

நாலைந் தாட்டோ அபசுரமாய்

.. நடுவே ஒலிக்கும் நகர்களிலே.


3)

காலை நேரக் கவிதையினைக்

.. காகம் தினமும் படிக்கிறது

வேலை வேலை எனமக்கள்

.. விரைந்தே ஓடும் மாநகரில்

ஆலைக் கரும்பாய்ப் பேருந்தில்

.. அல்லற் படுவோர் காதுகளில்

சாலை இரைச்சல் தான்கேட்கும்

.. சற்றும் கவிதை கேட்பதில்லை.


4)

காலை நேரக் கவிதையினைக்

.. காகம் தினமும் படிக்கிறது

"மாலை தொடுத்துப் போற்றியென்று

.. வாயால் மனத்தால் துதித்திடுவோர்

வேலை வெற்றி புகழ்பெறுவர்

.. வீணே இருப்போர் வாழ்க்கையொரு

பாலை வனமாய் இறுதியில்நம்

.. பசியைப் போக்கும் நல்விருந்தே".


(அப்பர் தேவாரம் - 5.14.4

இம்மை வானவர் செல்வம் விளைத்திடும்

அம்மையேல் பிறவித் துயர் நீத்திடும்

எம்மை ஆளும் இடை மருதன் கழல்

செம்மையே தொழுவார் வினை சிந்துமே.


அப்பர் தேவாரம் - 5.90.4

பூக் கைக்கொண்டு அரன் பொன்னடி போற்றிலார்

நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார்

ஆக்கைக்கே இரை தேடி அலமந்து

காக்கைக்கே இரையாகிக் கழிவரே.)


5)

காலை நேரக் கவிதையினைக்

.. காகம் தினமும் படிக்கிறது

"சேலை ஒத்த கண்ணுடைய

.. சீதை உடலை அன்றுகொத்தும்

காலை இராமன் எய்தஅம்(பு)ஓர்

.. கண்ணைக் கொண்ட(து) அறிவீர்நீர்*;

மாலை வணங்கி வழிபட்டால்

.. வந்த வினையை மாற்றிடலாம்".


(கொத்தும்காலை = கொத்தும்பொழுது; காலை - When, while; பொழுதில்);

(* இராமாயணத்தில் காகாசுரன் கதை - சீதை அனுமனுக்கு அசோக வனத்தில் சொல்வது)


6)

காலை நேரக் கவிதையினைக்

.. காகம் தினமும் படிக்கிறது

"வேலை தருமா தமிழென்று

.. வேற்று மொழியே கற்குமிவர்

நூலைக் கற்றும் கல்லாதார்,

.. நூறு மதிப்பெண் பெற்றாலும்;

மாலை வரைநான் கரைந்தாலும்

.. மக்கள் காதில் விழுவதில்லை".


7)

காலை நேரக் கவிதையினைக்

.. காகம் தினமும் படிக்கிறது

"பாலைக் கொடுத்தும் பாடவைப்பான்;

.. பலநாள் தாள ஒண்ணாத

சூலை கொடுத்தும் பாடவைப்பான்;

.. சுற்றம் கூடும் திருமணத்தில்

ஓலை எடுத்தும் பாடவைப்பான்

.. உலகைப் படைத்த உத்தமனே".


(முறையே திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் இவர்களுக்கு அருள்செய்தது)


8)

காலை நேரக் கவிதையினைக்

.. காகம் தினமும் படிக்கிறது

"வேலை ஒன்றும் செய்யாது

.. வெட்டிப் பேச்சை விரும்புவதேன்?

காலைக் கையை அசையாமல்

.. காசு தேடி வந்திடுமோ?

மேலை நாடு போல்நாமும்

.. மேன்மை கொள்ள உழைத்திடுவீர்".


9)

காலை நேரக் கவிதையினைக்

.. காகம் தினமும் படிக்கிறது

"காலைப் பிடித்த பாலனுயிர்

.. கவர வந்த இரக்கமில்லாக்

காலன் மாள உதைத்தவன்மான்

.. கன்றை ஏந்தி ஒருகரியின்

தோலை அணிந்த பரமனைநீர்

.. தொழுது மேன்மை பெறுவீரே".


(* மார்க்கண்டேயர் கதை.

அப்பர் தேவாரம் - 4.107.1

மருட்டுயர் தீரவன் றர்ச்சித்த மாணிமார்க் கண்டேயற்காய்

இருட்டிய மேனி வளைவாள் எயிற்றெரி போலுங்குஞ்சிச்

சுருட்டிய நாவில்வெங் கூற்றம் பதைப்ப வுதைத்துங்ஙனே

உருட்டிய சேவடி யான்கட வூருறை உத்தமனே. )


10)

காலை நேரக் கவிதையினைக்

.. காகம் தினமும் படிக்கிறது

"நூலைக் கொண்டு வலைபின்னி

.. நோன்பு நோற்ற சிலந்திக்கும்*

பாலைக் கொண்டு மணல்இலிங்கம்

.. பணிதல் தடுத்த தன்தந்தை

காலை வெட்டு சண்டிக்கும்

.. கருணை செய்தான் கழல்துதிப்பீர்".


(* சிலந்தி - கோச்செங்கண் சோழன்

அப்பர் தேவாரம் - 4.49.4

சிலந்தியும் ஆனைக் காவிற் .. திருநிழற் பந்தர் செய்து

உலந்தவண் இறந்த போதே .. கோச்செங்க ணானு மாகக்

கலந்தநீர்க் காவி ரிசூழ் .. சோணாட்டுச் சோழர் தங்கள்

குலந்தனிற் பிறப்பித் திட்டார் .. குறுக்கைவீ ரட்ட னாரே.


9-ஆம் திருமுறை - திருப்பல்லாண்டு - 10

தாதையைத் தாளற வீசிய சண்டிக்(கு)இவ் அண்டத்தொடும் உடனே

பூதலத் தோரும் வணங்கப்பொற் கோயிலும் போனகமும் அருளிச்

சோதி மணிமுடித் தாமமும் நாமமும் தொண்டர்க்கு நாயகமும்

பாதகத் துக்குப் பரிசுவைத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.)


பிற்குறிப்பு:

 1) "காலை நேரக் கவிதையினைக் .. காகம் தினமும் படிக்கிறது" என்று இலந்தையார் சந்தவசந்தக்-குழுவில் கொடுத்த முதலடிக்கு எழுதிய பாடல்கள் இவை.


2) காலை நேரத்தில் காகம் கரைகிறது. அது இயற்கையாக நிகழ்வது. அதைக் காணும் கவியின் மனத்தில் அது கவிதை பாடுவதாகத் தோன்றுகிறது. இதுவே முதல் வரி. இதிலிருந்து, இரண்டு வகையில் மற்ற மூன்று வரிகளைக் கொண்டு செல்லலாம்.


a) காலை நேரக் காட்சியை ஒட்டி எழும் வர்ணனை.

b) அந்தக் காகம் என்ன பாடுகிறது என்று கவியின் மனத்தில் தோன்றுவது.


நான் எழுதிய சில பாடல்கள் முதல் வகையிலும், மற்றப் பாடல்கள் இரண்டாம் வகையிலும் அமைந்துள்ளன.


வி. சுப்பிரமணியன்

------------- -------------

Thursday, July 25, 2024

G.9 - "எதிரொலி" (echo verse)

G.009

2006-03-26

G.9 - "எதிரொலி" (echo verse)

---------------

( முற்குறிப்பு - எதிரொலிக் கவிதை - பாடலில் ஒரு வினா இருக்கும். பாடலின் இறுதியில் உள்ள சொல்லோ சொற்றொடரோ அந்த வினாவிற்கு விடையாக அமையும். குறள்-வெண்பாவில்தான் பாடல் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. கண்ணிகளாகவும் இருக்கலாம். நூற்பாக்கள் போல ஓரடியாகவும் இருக்கலாம்.

In English (and probably other western languages): Echo verse - is a type of verse in which repetition of the end of a line or stanza imitates an echo.)


1)

ஆளும் தரப்பும் எதிர்த்தரப்பும் எந்நாளும்

தோளில் இதுதரிப்ப துண்டு.

(துண்டு)


2)

மெல்லமெல்ல ஏன்நம் வியாபாரம் வீழ்ந்தது

சொல்லென்றால் என்னஉத் தரம்?

(உத்தரம் - மறுமொழி)

(தரம்)


3)

சிவன்விரும்பி ஏறுவது செப்புக என்றால்

அவன்சொன்ன(து) என்ன விடை?

(விடை - எருது)


4)

அரைநொடியில் நீர்சொல்வீர் பார்வதிக்(கு)இன் னோர்பேர்

உரையுமென்று கேட்டால் உமை

(உமை - உம்மை - உங்களை);

(உமை - உமாதேவி)


5)

அழுததும் அம்மையப்பர் பாலூட்டக் கையால்

தொழுதெடுத்தார் ஆனந்தத் தோடு.

(தோடு (உடைய செவியன்))


6)

இரவில் வெளிச்சம் இருப்பதெவ் வாறோ?

உரைத்திட வேண்டும் மதி.

(மதி - அறிவு);

(மதி - சந்திரன்)


வி. சுப்பிரமணியன்

------------- -------------

Tuesday, May 21, 2024

G.8 - பொழுதுபோக்கு - கவியரங்கம் 43

G.008

இப்பாடல் 2016-இல் எழுதப்பட்டது.

I wrote 2 sets of songs for this kaviyarangam at that time. This is the second set.


சந்தவசந்தக் கவியரங்கம் - 43

"எனக்குப் பிடித்த தலைப்பு" (எத்தலைப்பில் வேண்டுமானாலும் எழுதலாம்)


2016-06-07

G.8 - பொழுதுபோக்கு - கவியரங்கம் 43

-----------------------------

(அறுசீர் விருத்தம் - "விளம் மா தேமா" - அரையடி வாய்பாடு)


0-1) ---- இறைவணக்கம் ----

தொழுதிட எண்ணா என்னைத் தொழுதிட வைக்கும் தூயா

எழுதிட எண்ணா என்னை எழுதிட வைக்கும் ஈசா

கழுதுகள் உலவு கின்ற காட்டிடை நடஞ்செய் நாதா

மழுவினை ஏந்தெம் மானே மாதொரு பங்கா போற்றி.


கழுது - பேய்;


0-2) ---- அவைவணக்கம் ----

முழுமுதல் ஈசன் தன்னை முன்னடி போற்றி இங்குக்

குழுமிய அவையோ ருக்குக் கூப்பினேன் என்க ரங்கள்

விழுமிய பாட லெல்லாம் விருப்பொடு கேட்கும் காதீர்

உழுதசால் உழும்பண் பேன்என் உரையையும் பொறுக்க இன்று.


(அப்பர் தேவாரம் - 5.90.8 - "உழுத சால்வழியே உழுவான்பொருட்டு இழுதை நெஞ்சமிது என் படுகின்றதே");


1) ---- பொழுதுபோக்கு ----

காலையில் எழுந்து காப்பி கையினில் ஏந்திச் சன்னல்

மூலையில் அமர்ந்து செய்தி முரசறை தாளை ஓதிச்

சாலையில் வருவார் போவார் தங்களைக் கண்கா ணிக்கும்

வேலையில் பொழுது போக்க விரும்புவார் சிலருள் ளாரே.


2)

கட்சியின் கொடியைக் கண்டு கைகளைக் குவித்து நிற்பார்

அச்சமே இல்லை என்பார் அங்கொரு தலைவர் வந்தால்

நிச்சயம் காலில் வீழ்வார் நேர்மையின் சிகரம் என்று

மெச்சிமெய் குளிர்வார் நம்மூர் வீதியில் காணும் ஒன்றே.


3)

கட்டிய கணவன் உண்ணக் காத்திருந் தாலும் தோளைத்

தட்டிய ழைத்த போதும் சற்றும றிந்தி லாள்அப்

பெட்டியில் ஓடு கின்ற பெருந்தொடர் மூழ்கம் மாது

திட்டியும் திருந்தாள் என்னே சிலரது பொழுது போக்கு.


4)

அரைத்ததை மீண்டும் மீண்டும் அரைக்கிற படங்கள் பார்த்துத்

திரைப்பட நடிகர் கட்குச் செய்கிறார் பால்மு ழுக்கே

உரைப்பதும் அவர்பு கழ்ச்சி ஒட்டுவ தவர்ப டங்கள்

கரைப்பது காசி னோடு காலமும் உணர்கி லாரே.


5)

பொழுதினைப் போக்க என்று புவியினில் மாந்தர் செய்யும்

பழுதுகள் எண்ணிப் பார்த்தால் பற்றிடும் அச்சம் பாட்டை

எழுதிடும் போதென் னுள்ளும் எழுந்திடக் கண்டேன் ஆரே

வழுவிலாப் பொழுது போக்கின் வகைதனை எடுத்து ரைப்பார்?


6)

நாட்டினை வளப்ப டுத்த நம்மியல் பிற்கு கந்த

காட்டுகள் முன்னோர் செய்து காட்டியுள் ளார்கள் நல்ல

பாட்டுகள் பாடி நூல்கள் பயின்றவை பயிற்று வித்தூர்

வாட்டம ழித்து வாழ்தல் மாசிலாப் பொழுது போக்கே.


பதம் பிரித்து:

நாட்டினை வளப்படுத்த நம் இயல்பிற்கு உகந்த

காட்டுகள் முன்னோர் செய்துகாட்டியுள்ளார்கள்; நல்ல

பாட்டுகள் பாடி, நூல்கள் பயின்று, அவை பயிற்றுவித்து, ஊர்

வாட்டம் அழித்து வாழ்தல் மாசு இலாப் பொழுதுபோக்கே.


(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.21.8 -

தொழுது தூமலர் தூவித் துதித்துநின்று

அழுது காமுற்று அரற்றுகின்றாரையும்

பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும்

எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே.)


வி. சுப்பிரமணியன்

------------- -------------

Saturday, May 18, 2024

G.7 - எத்தலைப்பில் எழுதுவது? - கவியரங்கம் 43

G.007

இப்பாடல் 2016-இல் எழுதப்பட்டது.

I wrote 2 sets of songs for this kaviyarangam at that time. This is the first set.


சந்தவசந்தக் கவியரங்கம் - 43

"எனக்குப் பிடித்த தலைப்பு" (எத்தலைப்பில் வேண்டுமானாலும் எழுதலாம்)


2016-05-21

G.7 - எத்தலைப்பில் எழுதுவது? - கவியரங்கம் 43

----------------------------------------------

(கலிவிருத்தம் - "தானா தனதானா தானா தனதானா" என்ற சந்தம்)

(மா மாங்காய் மா மாங்காய்)

(சம்பந்தர் தேவாரம் - 1.80.1 - "கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே")


0-1) ---- இறைவணக்கம் ---

தலைப்பை யரவோடு தண்ணார் மதிசூடீ

உலப்பில் பெருமானே உம்பர்க் கொருகோனே

மலைக்கு மகள்நாதா மழுவாள் உடையாயென்

மலைப்பை அறுவித்து வானம் அருளாயே.


தலைப் பையரவோடு தண் ஆர் மதி சூடீ - தலையில் படம் உடைய நாகப்பாம்போடு குளிர்ந்த பிறைச்சந்திரனையும் அணிந்தவனே; (பை - பாம்பின் படம்);

உலப்பு இல் பெருமானே - அழிவற்றவனே; (உலப்பு - அழிவு; சாவு);

உம்பர்க்கு ஒரு கோனே - தேவர்களுக்கெல்லாம் ஒரு தலைவனே; (உம்பர் - தேவர்);

மலைக்கு மகள் நாதா - உமைக்குக் கணவனே; (மலைக்கு மகள் - மலைமகள் - உமை)

மழுவாள் உடையாய் - மழுவாயுதத்தை ஏந்தியவனே;

என் மலைப்பை அறுவித்து வானம் அருளாயே - என் அறிவுமயக்கத்தைத் தீர்த்து நற்கதி அருள்வாயாக; (அறுவித்தல் - அறுத்தல் - இல்லாமற்செய்தல்; நீக்குதல்); (திருநாவுக்கரசர் தேவாரம் - 5.62.8 - "மாசார் பாச மயக்கு அறுவித்து எனுள்" - மாசு ஆர் - குற்றம் பொருந்திய. பாசமயக்கு - ஆசையாகிய மயக்கத்தை. அறுவித்து - நீங்கச்செய்து.);


0-2) --- அவைவணக்கம் ---

தலைப்புத் தருபோதும் சங்கை மிகவாகி

அலைப்புண் நிலையேனான் அதுவும் இலையென்றால்

இலக்குத் தெரியாதே எழுத முயல்வேன்தன்

கலக்கம் அளவில்லை காணீர் அவையீரே.


தலைப்புத் தருபோதும் சங்கை மிக ஆகி - தலைப்பைத் தந்தபொழுதும் சந்தேகம்/அச்சம் மிக ஆகி; (தருபோதும் - வினைத்தொகை - தந்த போதும்); (சங்கை - ஐயம்; அச்சம்);

அலைப்பு உண் நிலையேன் நான் - வருந்துகின்ற நிலையை உடைய நான்; (அலைப்பு - வருத்தம்; அலைப்பு உண்ணுதல் - வருத்தம் அடைதல்);


1)

கலவ மயிலன்னார் காதல் கவினாரும்

நிலவு கதிர்சாயும் நேரம் கடல்சூழ்ந்த

உலகை அரசாள்வோர் ஊழல் எனநாளும்

பலரும் சலியாமற் பாக்கள் புனைகின்றார்.


பதம் பிரித்து:

கலவ மயில் அன்னார் காதல், கவின் ஆரும்

நிலவு, கதிர் சாயும் நேரம், கடல் சூழ்ந்த

உலகை அரசு ஆள்வோர் ஊழல், என நாளும்

பலரும் சலியாமல் பாக்கள் புனைகின்றார்


கலவமயில் அன்னார் - தோகைமயில் போன்ற பெண்கள்;

கதிர் - சூரியன்;

சலியாமல் - சலித்தல் இன்றி; (சலித்தல் - 1. சோர்தல்; 2. To sift; சல்லடையாற் சலித்தல்);


2)

மண்ணிற் பலகோடி மாக்கள் உயிர்வாழ்ந்து

மண்ணில் மறைகின்ற வண்ணம் அதுகண்டோம்

எண்ணிற் புனைபாவின் எல்லை எதுவென்று

திண்ணம் உணர்வோமேல் செப்பல் தெளிவாமே.


மாக்கள் - விலங்குகள்; மனிதர்கள்;

எண்ணில் புனை பாவின் எல்லை எது என்று திண்ணம் உணர்வோமேல் - சிந்தித்தால், புனைகின்ற பாக்களின் கால அளவு எது என்று உறுதியாக உணர்ந்தோம் என்றால்;

செப்பல் தெளிவு ஆம் - நாம் சொல்வதில் (இயற்றும் பாக்களில்) தெளிவு உண்டாகும்;


3)

கற்றைப் பணம்நாடிக் காலம் கழியாமல்

வெற்றுக் கவிபாடி விழலுக் கிறையாமல்

வெற்றிக் கொடிமீது விடையை உடையான்தாள்

பற்றிப் புகழ்மாலை பாடிப் பணிவோமே.


காலம் கழியாமல் - காலத்தைப் போக்காமல்;

விழலுக்கிறையாமல் - வீணே பாடுபடாமல்; பயனற்ற செயலில் ஈடுபடாமல்;

வெற்றிக் கொடிமீது விடையை உடையான் - இடபச்சின்னம் பொறித்த வெற்றிக்கொடி உடையவன்;

உடையான் தாள் பற்றிப் புகழ்மாலை பாடி - இறைவன் திருவடியைப் பிடித்துத் துதிகள் பாடி; இறைவன் திருவடியைக் குறித்துப் பாமாலைகள் பாடி; (பற்றி - 1. பிடித்து (பற்றுதல்); 2. குறித்து));


4)

ஆற்றுச் சடையின்மேல் அரவும் அணிதிங்கட்

கீற்றும் புனையீசன் கேடில் மலைபேர்த்தான்

போற்ற விரலூன்றிப் புகழார் பெயரீந்த

ஏற்றன் தனைநாமும் ஏத்தி மகிழ்வோமே.


ஆற்றுச் சடையின்மேல் அரவும் அணி திங்கட் கீற்றும் புனை ஈசன் - கங்கையை இருக்கும் சடையின்மேல் பாம்பையும் அழகிய பிறைச்சந்திரனையும் அணிந்த ஈசனது;

கேடு இல் மலை பேர்த்தான் போற்ற விரல் ஊன்றிப் புகழ் ஆர் பெயர் ஈந்த - அழியாத கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் தன்னைப் போற்றுமாறு ஒரு திருப்பாத விரலை ஊன்றி நசுக்கிப், பின் அவனுக்கு இராவணன் என்ற புகழ்மிக்க பெயரைக் கொடுத்த;

ஏற்றன்தனை நாமும் ஏத்தி மகிழ்வோமே - இடபவாகனனான சிவபெருமானை நாமும் துதித்து இன்புறுவோம்; (ஏற்றன் - இடபவாகனன்);


5)

தொழுத இமையோர்க்குச் சுதையை அருளீசன்

பழுதில் பெருமான்றன் பாதம் தனையுன்னி

எழுதில் தெளிவாகும் எண்ணம் அதனாலே

பழுதை தனையென்றும் பாம்பா நினையோமே


சுதை - அமுதம்;

பழுது இல் பெருமான் - குற்றமற்ற பெருமான்;

உன்னி - நினைத்து; சிந்தித்து;

எழுதில் - எழுதினால்;

பழுதைதனை என்றும் பாம்பா நினையோமே - பழுதையைப் பாம்பாக நினைக்கமாட்டோம்; (பழுதை - கயிறு; வைக்கோற்புரி);


6)

வேலைப் பளுவென்றும் வேளை இலையென்றும்

ஆலைப் படுகன்னல் அதுவாய்த் தினமோடிக்

கோலைப் பிடிகாலம் குறுகா முனமீசன்

காலைப் பணிவோமேல் காலன் பிடியானே.


பளு / பளுவு - கனம்; சுமை;

வேளை - பொழுது; காலம்;

கன்னல் - கரும்பு;

கோல் - கம்பு; ஊன்றுகோல்;

குறுகுதல் - அணுகுதல்; நெருங்குதல்;

ஆலைப் படு கன்னல் அது ஆய் - கரும்பாலையில் நசுக்கப்படும் கரும்பு போல ஆகித் துன்புற்று;

தினம் ஓடிக் கோலைப் பிடி காலம் குறுகாமுனம் - நாள்கள் சென்று, மூப்பு அடைந்து, ஒரு கைத்தடியைப் பிடிக்கும் காலம் வந்தடைவதன் முன்னமே;

ஈசன் காலைப் பணிவோமேல் - ஈசன் திருவடியை நாம் வணங்கினால்;

காலன் பிடியானே - நம்மைக் காலன் பிடிக்கமாட்டான்;


வி. சுப்பிரமணியன்

------------- -------------


G.26 - அடியும் முடியும் - (வேறு பாடல்கள்)

G.026 இ வை 2009- இல் எழுதப் பெற்ற பாடல் கள் . 2009-01-01 to 2009-07-01 G.26 - அடியும் முடியும் - ( வேறு பாடல்கள் ) ============= ( ...