Thursday, October 16, 2025

G.26 - அடியும் முடியும் - (வேறு பாடல்கள்)

G.026

வை 2009-இல் எழுதப்பெற்ற பாடல்கள்.


2009-01-01 to 2009-07-01

G.26 - அடியும் முடியும் - (வேறு பாடல்கள்)

=============

(குறள்வெண்பாவில் முதலிலும் முடிவிலும் ஒரே சொல் வேறு பொருள்பட வருமாறு மடக்கு அமைந்தது)


முற்குறிப்பு: மதிசூடி துதிபாடி தொகுதி-3 நூலில் தொகுப்பில் இடம்பெறாத சில பாடல்கள் இவை. இச்சொற்களால் அமைந்த வேறு பாடல்கள் அத்தொகுப்பில் உள்ளன.


25-1) மதி

-----------

மதியில் தசமுகனை ஓர்விர லாலே

மிதித்தான் அணிவான் மதி.


மதி - 1. அறிவு; 2. சந்திரன்;


36-1) அசை

-----------------

அசைத்தஅர(வு) ஐயன் அரையிருக்கச் சென்னி

மிசையாடும் ஓர்பாம்(பு) அசைந்து.


அசைத்தல் - கட்டுதல்;

அசைதல் - இயங்குதல் (To move, stir);


60-1) குடி

-----------

குடிவிடம்சேர் கண்டனுக்குக் குற்றேவல் செய்யும்

அடியார் மனமே குடி.


குடிவிடம் - வினைத்தொகை - பருகிய நஞ்சு; (விடம் குடித்தல் என்பது இங்கே நஞ்சு உண்டலைச் சுட்டியது);

குடி - உறைவிடம்;


63-1) படை

--------------

படையெனத் தாக்கும் பழவினைதீர் ஈசன்

உடையானோர் சூலப் படை.


படை - 1. சேனை; 2. ஆயுதம்;

******


2009-01-01 to 2009-07-01

அடியும் முடியும் - (பொதுப்-பாடல்கள்)

=============

(குறள்வெண்பாவில் முதலிலும் முடிவிலும் ஒரே சொல் வேறு பொருள்பட வருமாறு மடக்கு அமைந்தது)


முற்குறிப்பு: இவை சிவபரமாக அமையாத பொதுப்பாடல்கள்.


1-b) முடி

--------------

முடிமுடி என்று முறைத்தார்; சமைத்து

முடித்தபின் பார்த்தேன் முடி!


முடி - 1. உச்சி; 2. கூந்தலை முடிதல்; 3. செய்து முடித்தல்; 4. இக்காலத் தமிழில் மயிர் என்ற பொருள்;


3-b) கொல்

--------

கொல்வெட்(டு) எனச்சிலர் கற்றுக் கொடுக்கிறார்

நல்வழி யென்(று)இஃதென் கொல்.


கொல் - 1. கொல்லுதல்; 2. ஓர் அசைச்சொல்;


4-b) கல்

------------

கல்லென்றும் கல்லார் சிலர்அவர் வாழ்வினில்

செல்லும் வழியெங்கும் கல்.


கல் - 1. கல்விகற்றல்; 2. கற்கள்;


5-b) பால்

----------

பால்வேண்டும்! பாலையில்காப் பிக்(கு)என்செய் வீர்!ஒரு

கால்பசு உண்டோஉம் பால்?


ஒருகால் - ஒருவேளை (perhaps);

உம்பால் - உம்மிடம்;


6-b) படு

--------

படுபடு என்றார். கொசுவலை இன்றி

நடுநடுத்தேன். சொன்னார் படு!


படுத்தல் - கிடத்தல்; படுத்துக்கொள்ளுதல்;

நடுநடுத்தல் - நடுங்குதல்;

படுதல் - துன்பமடைதல்;


7-b) நாட்டு

---------

நாட்டு நடப்பு நனிசிறக்க, வேற்றுமையை

ஓட்டு; மனத்திலன்பை நாட்டு.


நனி - மிக;

நாட்டுதல் - நிலைபெறச்செய்தல்;


8-b) காட்டு

---------

காட்டுவிலங் கின்கடையோர் கையில் விலங்கிட்டுப்

பூட்டு; திருந்தவழி காட்டு.


17-b) அறை

--------------

அறைவண்டு தேனுண் டுறங்கிவிட்டால் பூவே

நறைஆர் படுக்கை அறை.


அறைதல் - ஒலித்தல்; (ரீங்காரம் செய்தல்);

நறை - தேன்; வாசனை;

ஆர்தல் - மிகுதல்; பொருந்துதல்;


18-b) சிறை

-------------

சிறைஆர் கிளிக்குச் சிலமக்கள் வைத்தார்

அறையிலே கூண்டுச் சிறை.


சிறை- 1. சிறகு; 2. அடைக்கும் இடம்;


36-b) அசை

------------

அசைவிளக்கும் ஆசிரியர் அங்(கு)ஓர் குறட்டை

இசைகேட்டுச் சொன்னார், "அசை"!


அசை - 1. தமிழ்ச்செய்யுளின் உறுப்பு; 2. ஒருவரை 'அசை' என்று அசைக்கும்படி ஏவுவது; (அசைத்தல் - ஆட்டுதல்);


45-b) ஈறு

------------

(று)இன்றி என்றுமினிப்(பு) உண்டிருந்தால் உண்டாமே

பே(று)இவர்க்குப் பல்லின்றி ஈறு.


ஈறு - 1. முடிவு; அளவு; 2. பல்லுக்கு ஆதாரமாக உள்ள தசை;


52-b) தொக்கு

-----------------

தொக்கிருந்த(து) அத்தயிர்ச் சோற்றின் நடுவினில்

மிக்கிருந்த(து) ஆமலகத் தொக்கு.


தொக்கு - 1. சேர்ந்து; மறைந்து; 2. ஊறுகாய் வகை;

தொகுதல் - கூடுதல் (collect, accumulate); ஒன்றாதல் (to aggregate); மறைதல் (To be elided, as a particle in the combination of words);

ஆமலகம் - நெல்லி;


68-b) நகர்

------------

நகர வொணாவண்ணம் நல்ல நெரிசல்;

பகர்வார் பெயர்தான் நகர்!


x-1) சொல்வதை

---------------

சொல்வதை நற்றமிழில் சொல்ல அறிகிலர்;

செல்லிடம்எல் லாம்சொல் வதை.


சொல் வதை - தமிழ்க்கொலை;


x-2) கடன்

--------

கடன்என்று வாங்கியதைக் காலம் தவறா(து)

அடைத்தல் ஒருவர் கடன்.


கடன் - 1. இருணம் (debt; loan); 2. கடமை (duty, obligation);

அடைத்தல் - கடனடைத்தல்;


வி. சுப்பிரமணியன்

------------- -------------


Saturday, October 4, 2025

G.25 - எங்கே செல்கின்றேன்? - கவியரங்கம் 41

G.025

இப்பாடல் 2014-இல் எழுதப்பட்டது.


2014-10-17

G.25 - எங்கே செல்கின்றேன்? - கவியரங்கம் 41

-------------------

(அறுசீர் விருத்தம் - மா மா காய் - அரையடி வாய்பாடு)


1)

பாட்டுப் பாடி அன்னையவள்

.. பரிவோ டணைக்க மகிழ்வோடு

கேட்டுத் துயின்ற தொருகாலம்

.. கீதத் தோடு போதனைகள்

ஊட்டும் காலம் அதுவன்றோ

.. ஒன்று கூட உணராமல்

ஓட்டி விட்ட பருவத்தை

.. ஓரேன் எங்கே செல்கின்றேன்?


ஓரேன் - எண்ணமாட்டேன்; எண்ணிப் பாராத நான்;


2)

ஏட்டில் உள்ள பாடத்தை

.. இருந்து படிக்கும் பள்ளியிலும்

காட்டில் திரியும் வானரம்போல்

.. கத்தி ஓடி விளையாடி

வீட்டில் உள்ள பெரியோரின்

.. விருப்பப் படியும் நடவாமல்

ஓட்டி விட்ட பருவத்தை

.. ஓரேன் எங்கே செல்கின்றேன்?


3)

தீட்டும் மைசேர் கண்ணுடைய

.. தெரிவை மார்கள் மையலெனும்

வாட்டும் தீயின் வசப்பட்டு

.. மற்ற தெல்லாம் மறந்துவிட்டுக்

காட்டும் கடைக்கண் பார்வைக்கே

.. காத்துக் காத்து மனங்கலங்கி

ஓட்டி விட்ட பருவத்தை

.. ஓரேன் எங்கே செல்கின்றேன்?


தெரிவைமார்கள் - பெண்கள்;


4)

நாட்டம் எல்லாம் நானிலத்தில்

.. நாலு காசு சேர்ப்பதென

ஈட்டும் பொருளுக் கெனநாளும்

.. எங்கும் எதற்கும் எவரிடமும்

நீட்டும் கையை உடையேனாய்

.. நின்று வினைகள் பலகூட்டி

ஓட்டி விட்ட பருவத்தை

.. ஓரேன் எங்கே செல்கின்றேன்?


நாட்டம் - விருப்பம்; நோக்கம்;


5)

கூட்டிச் செல்லப் பாசத்தைக்

.. கொண்டு தூதர் வந்தவுடன்

வீட்டில் உள்ள உற்றார்கள்

.. விரைந்தெ டுங்கள் எனச்சொல்லிக்

கூட்டைக் காவிக் காட்டிலிட்டுக்

.. கொளுத்தி மூழ்கி என்நினைப்பை

ஓட்டி விடுவர் என்பதையும்

.. ஓரேன் எங்கே செல்கின்றேன்?


கூடு - உடல்;

காவுதல் - சுமத்தல்; தோளில் தண்டுகொண்டு சுமத்தல் (To carry on the shoulder);

காடு - சுடுகாடு;


(திருமந்திரம் - முதல் தந்திரம் - 5. யாக்கை நிலையாமை - #3

ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்

பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்

சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு

நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே. )


6)

பாட்டைப் பாடி நாவரசர்

.. பணிய இரங்கி மறைக்காட்டில்

பூட்டைத் திறந்த புண்ணியனே

.. பொருப்பு வில்லில் கணைகோத்துக்

கோட்டை மூன்றை எரித்தவனே

.. கொஞ்சம் கூட நில்லாமல்

சேட்டை செய்யும் என்மனத்தைச்

.. சிறிது நின்பால் திருப்பாயே.


(* வேதாரண்யத்தில் திருக்கோயில் கதவம் திருக்காப்புத் திறக்க வேண்டித் திருநாவுக்கரசர் பதிகம் பாடியதைப் பெரியபுராணத்தில் காண்க.

அப்பர் தேவாரம் - 5..10.1 - "பண்ணின் நேர்மொழியாள் உமைபங்கரோ" என்று தொடங்கும் பதிகத்தின் வரலாற்றில் காண்க);


பொருப்பு - மலை;


7)

நாட்டம் சேரும் நெற்றியினாய்

.. நரிகள் திரியும் சுடுகாட்டில்

ஆட்டம் பயிலும் பெற்றியினாய்

.. அங்கை கூப்பிப் பலதேவர்

கூட்டம் போற்றும் பெருமானே

.. கோலப் பிறையாய் ஒருகாலும்

கோட்டம் இல்லாய் நின்புகழே

.. கூறும் நாவை அருளாயே.


நாட்டம் சேரும் நெற்றியினாய் - நெற்றிக்கண்ணனே; (நாட்டம் - கண்);

நரிகள் திரியும் சுடுகாட்டில் ஆட்டம் பயிலும் பெற்றியினாய் - நரிகள் திரியும் சுடுகாட்டில் கூத்து ஆடுபவனே; (பயில்தல் - செய்தல்); (பெற்றி - பெருமை; தன்மை); (சம்பந்தர் தேவாரம் - 1.65.10 - "நடம்பயில்வார்");

அங்கை கூப்பிப் பலதேவர்-கூட்டம் போற்றும் பெருமானே - கைகூப்பிப் பல தேவர்கூட்டங்கள் போற்றும் பெருமானே;

கோலப் பிறையாய் - அழகிய பிறையைச் சூடியவனே;

ஒருகாலும் கோட்டம் இல்லாய் - எந்நாளும் நடுநிலை பிறழாதவனே; (ஒருகாலும் - எந்தக் காலத்திலும்); (கோட்டம் - வளைதல்; நடுநிலை பிறழ்தல்); (அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன்" - மனக்கோட்டம் இல்லாது எல்லார்க்கும் நன்மையைச் செய்யும் சிவபெருமான்);

நின் புகழே கூறும் நாவை அருளாயே - உன் புகழையே பாடும் நாக்கை எனக்கு அருள்வாயாக.


வி. சுப்பிரமணியன்

------------- -------------


Friday, October 3, 2025

G.24 - திரிகாலம்

G.024

இப்பாடல் 2014-இல் எழுதப்பட்டது.


2014-08-31

G.24 - திரிகாலம்*

-------------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)


* திரிகாலம் - 1. முக்காலம்; 2. திரி+காலம் - என்று வினைத்தொகையாகவும் கொள்ளலாம். (திரிதல் - அலைதல், மாறுதல், நிலைகெடுதல்);


நேற்று:

1)

கொஞ்சம் இருந்தாலும் குறைகளின்றி வாழ்ந்தார்கள்

வஞ்சம் மனத்திலின்றி வரவுக்குள் வாழ்ந்தார்கள்

செஞ்சொல் தமிழ்பாடித் தெய்வத்தைத் தொழுதார்கள்

நஞ்சம் கலவாத நல்வாழ்க்கை வாழ்ந்தார்கள்.


கலவாத - கலத்தல் இல்லாத;


2)

சுற்றம் தனைப்பேணிச் சுகமாக வாழ்ந்தார்கள்

குற்றம் புரிந்தாரைக் கொற்றவனும் தண்டித்து

மற்றக் குடிமக்கள் மனக்கலக்கம் தீர்த்திருந்தான்

மற்றும் வனத்துள்ள மாக்களும்தான் தழைத்தனவே.


மற்றக் குடிமக்கள் - பிறர்; (மற்ற என்ற சொல்லின்பின் வல்லொற்று மிகும்).

மற்றும் - மேலும்;

மா - விலங்கு;

* குற்றம் புரிந்தவர்களும் அந்நாட்டுக் குடிகளே. அவர்களுக்குத் தண்டனை பெறும் மனக்கலக்கம் உண்டு. அத்தகையோரால் பிறருக்கு ஏற்படக்கூடிய மனக்கலக்கத்தை மன்னன் தீர்த்தான்.


3)

நச்சரவம் எதுவென்று நாட்டுமக்கள் அறிந்திருந்தார்

தச்சர்முதல் தலைவர்வரை தம்பணிகள் செய்திருந்தார்

இச்சைகளை வரம்பிற்குள் இருத்திமனம் மகிழ்ந்திருந்தார்

உச்சிவெயில் தனில்மரங்கள் ஒதுங்கநிழல் தந்தனவே.


நச்சரவம் - விஷப்பாம்பு;


இன்று:

4)

கொஞ்சம் இருந்தாலும் கொடுஎன்று பிடுங்குகின்றார்

நெஞ்சில் பலவிருப்பம் நித்தமெழக் கடன்வாங்கித்

துஞ்சும் வரைஅடைத்துத் துன்பத்தில் உழல்கின்றார்

வெஞ்சொல் உரையாநாள் வீணென்றே எண்ணுகின்றார்


நித்தம் - தினந்தோறும்; எப்பொழுதும்;

துஞ்சும்வரை - இறக்கும்வரை;

வெஞ்சொல் உரையாநாள் - கொடும்சொற்களைப் பேசாத நாள்;


5)

குற்றம் பலபேசிக் குடும்பத்தைப் பிரிக்கின்றார்

கற்றுத் தரத்தொலைக் காட்சிகளில் தொடர்களுண்டே

வெற்றுக் கதைபேசிக் காலத்தை வீணாக்கிக்

கற்றைப் பணமொன்றே கருத்தாகி அலைகின்றார்.


6)

காற்றினையும் மாசாக்கிக் காட்டினையும் கரியாக்கி

ஆற்றுமணல் காசாக்கி அடுத்ததலை முறைக்கிடரே

ஏற்றுவதை எண்ணாமல் இயங்குகிற காலமிது

மாற்றமிது மறுப்பில்லை முன்னேற்றம் இதுதானோ?


நாளை:

7)

மாற்றம் வரவேண்டும் தடுமாற்றம் அறவேண்டும்

ஆற்றும் செயல்களினால் அனைத்துயிர்க்கும் நலம்வேண்டும்

காற்றும் நதிநீரும் கனைகடலும் கறைதீரப்

போற்றும் மனம்பெற்றால் பொற்காலம் அதுதானே.


கனைகடலும் - ஒலிக்கின்ற கடலும்;


வி. சுப்பிரமணியன்

------------- -------------


G.26 - அடியும் முடியும் - (வேறு பாடல்கள்)

G.026 இ வை 2009- இல் எழுதப் பெற்ற பாடல் கள் . 2009-01-01 to 2009-07-01 G.26 - அடியும் முடியும் - ( வேறு பாடல்கள் ) ============= ( ...