G.023
இப்பாடல் 2019-இல் எழுதப்பட்டது.
2019-01-19
G.23 - மனித தெய்வம் யார்? - கவியரங்கம் 49
-------------------------
(கட்டளைக் கலிப்பா)
(அப்பர் தேவாரம் - 5.1.1 - "அன்னம் பாலிக்கும்");
(சம்பந்தர் தேவாரம் - 3.114.1 - "பாயு மால்விடை")
1)
தெய்வம் என்றவோர் சொல்லினைக் கேட்டதும்
.. திரைம லிந்த கடலது சூழ்தரும்
வையம் தன்னிலே வாழ்பவர் சிந்தையில்
.. வந்து நிற்பது என்னவென் றெண்ணினால்
கையில் உள்ள விரல்களைக் கொண்டுநாம்
.. கணக்கி டற்கரி தாவதைக் காண்பதில்
ஐயம் சற்றும் இலைஇதன் காரணம்
.. ஆய்ந்து சொன்னவர் சொல்லறி யாமையே.
எண்ணினால் - 1. சிந்தித்தால்; 2. கணக்கு எடுத்தோம் என்றால்;
கையில் உள்ள விரல்களைக் கொண்டு நாம் கணக்கிடற்கு அரிது ஆவதைக் காண்பதில் ஐயம் சற்றும் இலை - இருகை-விரல்களால் எண்ண முடியாது என்பதில் சந்தேகம் இல்லை; = மிகப் பல;
ஆய்ந்து சொன்னவர் சொல் அறியாமையே - 1. ஞானியர் சொல்லை மக்கள் அறியாது இருப்பதே; 2. ஞானியர் சொல்கின்ற அறியாமை என்ற விஷயம்;
2)
கடவுள் உள்ளான் எனில்அவன் தோற்றத்தைக்
.. காட்டு வீர்என் றொருகுழுச் சொல்லிடும்
மடமை நீங்கியெம் கூட்டத்தில் சேர்ந்திட
.. வாரும் என்றொரு பக்கம் அலறிடும்
அடஅ வன்பேர் அதுவன் றிதுவெனும்
.. அங்கு மற்றொரு கூட்டம் உலகினில்
தொடரும் இந்தச்சொற் போர்களைச் செய்பவர்
.. தூய அன்பினைச் சற்றும் அறிகிலார்.
தோற்றம் - உருவம்; வடிவம்; காட்சி;
அட அவன் பேர் அது அன்று இது எனும் - "அட, இறைவன் பெயர் அஃது அன்று, இறைவன் பெயர் இஃது என்று சொல்லும்"; (அட – அடா - இகழ்வு, வியப்பு முதலியவற்றை வெளிப்படுத்தும் ஒலிக்குறிப்பு);
அறிகிலார் - அறியமாட்டார்;
3)
அன்னை யைத்தெய்வம் என்று கருதுநீ
.. அப்ப னைத்தெய்வம் என்று கருதுநீ
உன்னை நல்வழி யிற்செலுத் தும்குரு
.. உனக்குத் தெய்வம் எனநீ கருதிடு
பின்னும் வந்த விருந்துமோர் தெய்வமாப்
.. பேணு வாயென் றதுதைத் திரீயம்தான்
மன்னும் நான்மறை சொன்னதை நானில
.. மாந்தர் கேட்டிலர் போல்தெரி கின்றதே.
பின்னும் - மேலும்;
விருந்து - அதிதி;
தைத்திரீயம் - தைத்திரீய உபநிஷத்;
मातृ देवो भव। पितृ देवो भव। आचार्य देवो भव। अतिथि देवो भव॥
The mantras are from the Taittiriya Upanishad, Shikshavalli I.11.2 that says: matru devo bhava, pitru devo bhava, acharya devo bhava, atithi devo bhava. = "be one for whom the Mother is God, be one for whom the Father is God, be one for whom the Teacher is God, be one for whom the guest is God."
(https://en.wikipedia.org/wiki/Taittiriya_Upanishad )
4)
ஈசன் எங்குளன் என்று வினவிடும்
.. எவர்க்கும் நாவுக் கரசர் இயம்பினார்
வாசல் வந்தடை பத்தர்கள் யாவரும்
.. மழுவை ஏந்திய முக்கணன் ஆகவே
நேச மாகி உபசரித் தின்புறும்
.. நீர்மை கொண்டவர் நெஞ்சே இறையவன்
வாசம் செய்திடும் கோயில் அறியுங்கள்
.. மற்றெங் கும்சென்று தேடவேண் டாவென்றே.
நீர்மை - சிறந்த குணம்;
(அப்பர் தேவாரம் - 6.61.3 - "எவரேனுந் தாமாக இலாடத்து இட்ட திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி.. .. ஈசன் திறமே பேணிக் கவராதே தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே" - இறைவனிடத்துச் செய்யும் செயல்களையே அடியவரிடத்தும் விரும்பிச் செய்து, அங்ஙனம் செய்யும்பொழுது இறைவனையும் அடியவரையும் ஒரே நிலையில் மனத்துக்கொண்டு தொழும், அடியவர் உள்ளத்தில் கன்றாப்பூர் நடுதறியப்பனான சிவபெருமானைக் காணலாம்);
(அப்பர் தேவாரம் - 5.1.10 - "நாடி நாரணன் நான்முகன் என்றிவர் தேடியும் திரிந்தும் காண வல்லரோ மாடமாளிகை சூழ் தில்லை-அம்பலத்து ஆடி பாதம் என் நெஞ்சுள் இருக்கவே.");
5)
மீண்டும் மாந்தருள் தெய்வம் எவரென்ற
.. வினாவ கத்தினில் வந்திடின்? சூலைதீர்த்
தாண்டு கொள்ளப்பெற் றார்தெளி விக்கின்றார்;
.. அளவி லாநிதி நாடிவை தந்தாலும்
தீண்டோம் மாதே வனுக்கன் பிலாரெனின்;
.. தேகம் தேய்ந்த தொழுநோயர் என்றாலும்
நீண்ட வேணியற் கன்பரே என்றால்நாம்
.. நினைந்து போற்றி வணங்கும் கடவுளே.
பதம் பிரித்து:
மீண்டும் மாந்தருள் தெய்வம் எவர் என்ற
.. வினா அகத்தினில் வந்திடின்? சூலைதீர்த்து
ஆண்டுகொள்ளப் பெற்றார் தெளிவிக்கின்றார்;
.. "அளவு இலா நிதி நாடு இவை தந்தாலும்
தீண்டோம் மாதேவனுக்கு அன்பு இலார் எனின்;
.. தேகம் தேய்ந்த தொழுநோயர் என்றாலும்
நீண்ட வேணியற்கு அன்பரே என்றால் நாம்
.. நினைந்து போற்றி வணங்கும் கடவுளே".
சூலை தீர்த்து ஆண்டுகொள்ளப்பெற்றார் தெளிவிக்கின்றார் - சிவபெருமானால் சூலைநோயைத் தீர்த்து ஆட்கொள்ளப்பெற்றவரான திருநாவுக்கரசர் தெளிவுபடுத்துகின்றார்;
(அப்பர் தேவாரம் - 6.93.3 - "முடிகொண்டார் .. .. துடிகொண்டார் கங்காளம் தோள்மேல் கொண்டார் சூலைதீர்த்து அடியேனை ஆட்கொண்டாரே");
(அப்பர் தேவாரம் - 6.95.10 -
சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து,
.. தரணியொடு வானாளத் தருவ ரேனும்,
மங்குவார் அவர்செல்வம் மதிப்போம் அல்லோம்,
.. மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லாராகில்;
அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயராய்
.. ஆ உரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கை வார்சடைக் கரந்தார்க்கு அன்பராகில்
.. அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே.)
பிற்குறிப்பு: யாப்புக்குறிப்பு:
கட்டளைக் கலிப்பா - திருக்குறுந்தொகை அமைப்பின் இரட்டித்த வடிவம். (அடிதோறும் 8 சீர்கள்).
அரையடியில் 4 சீர்கள். அரையடிகளின் அமைப்புத் திருக்குறுந்தொகைப் பாடல்களின் அடி அமைப்பில் இருக்கும்.
வி. சுப்பிரமணியன்
------------- -------------