Monday, July 28, 2025

G.19 - காஞ்சி ஆசாரியர் - ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அஞ்சலி

G.019

து 2018-இல் எழுதப்பட்டது.


2018-03-19

G.19 - காஞ்சி ஆசாரியர் - ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அஞ்சலி

-------------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(10 பாடல்கள். பிற்பாதியில் உள்ள 5 பாடல்கள், "நமசிவாய" என்ற திருவைந்தெழுத்தில் உள்ள எழுத்துகளில் ஒவ்வொன்றை முதலாகக் கொண்டு தொடங்குவன)


1)

பொருள்நோக்கி உழல்கின்ற புவியோரை மெய்ஞ்ஞானப்

பொருள்நோக்கி வாழுமெனப் போதிக்கச் சோணாட்டில்

இருள்நீக்கி தனில்தோன்றி எல்லார்க்கும் எப்போதும்

அருள்நோக்கம் செய்தகுரு சயேந்திரர் அடிபோற்றி.


பொருள் நோக்கி உழல்கின்ற புவியோரை - காசு, சொத்து, முதலிய நிலையற்றவற்றை விரும்பி அலைந்து வருந்துகின்ற மக்களை; (நோக்கி - கருதி; விரும்பி);

மெய்ஞ்ஞானப் பொருள் - மெய்ப்பொருள், ஞானப்பொருள்; (திருநாவுக்கரசர் தேவாரம் - 6.67.3 - "மெய்ஞ்ஞானப் பொருள் ஆனானை");

சோணாட்டில் இருள்நீக்கிதனில் தோன்றி - சோழநாட்டில் இருள்நீக்கி என்ற ஊரில் பிறந்து;

எல்லார்க்கும் எப்போதும் அருள்நோக்கம் செய்தகுரு சயேந்திரர் அடிபோற்றி - எல்லாருக்கும் எப்பொழுதும் அருட்கண்ணால் பார்த்து அருள்செய்த குருவான ஜயேந்திரர் திருவடிகளுக்கு வணக்கம்;


2)

வலியோர்முன் அஞ்சாத மாண்புடைய அருளாளர்

பொலிவாரும் திருமுகத்தில் புன்னகையும் தேசத்தின்

கலிதீரும் வழிநாடிக் காணுளமும் கொண்டென்றும்

சலியாமல் உழைத்தகுரு சயேந்திரர் தாள்போற்றி.


தேசத்தின் கலி தீரும் வழி நாடிக் காண் உளமும்கொண்டு - நாட்டின் துன்பங்கள் தீர்வதற்கு உபாயங்களை ஆராய்ந்து காணும் உள்ளமும் கொண்டு;


3)

எத்துமிகச் செய்வோர்முன் எளியோர்க்கோர் அரணானார்

பத்திநெறி நமைக்காக்கும் படையென்று காட்டியவர்

எத்திசையும் சென்றுநெறி எடுத்துரைத்துச் சங்கரரின்

அத்துவித வழிநின்ற சயேந்திரர் அடிபோற்றி.


எத்து - வஞ்சனை;

அரண் - கோட்டை; காவல்;

பத்திநெறி நமைக் காக்கும் படைன்று காட்டியவர் - பக்திமார்க்கமே நம்மைக் காக்கும் சிறந்த ஆயுதம் என்று காட்டியவர்;

சங்கரரின் அத்துவித வழி நின்ற - ஆதிசங்கரர் உபதேசித்த அத்வைதக்-கொள்கையைப் பின்பற்றிய;


4)

எக்கணமும் முக்கணனின் இணையடியை ஏத்தியவர்

தெக்கணமும் வடநாடும் சென்றரிய தொண்டாற்றி

மக்களிடை ஒற்றுமைக்கு வழிவகுத்துப் பின்பற்றத்

தக்கனசெய் சற்குரவர் சயேந்திரர் தாள்போற்றி.


தெக்கணமும் வடநாடும் சென்று அரிய தொண்டு ஆற்றி - தென்னாடு வடநாடு எங்கும் பல இடங்களுக்குச் சென்று அரிய பணிகளைச் செய்து;

பின்பற்றத் தக்கன செய் சற்குரவர் - நாம் கடைப்பிடிக்கத் தகுந்தவற்றைச் செய்த சத்குரு;


5)

சச்சரவு சண்டையறத் தாமுழைத்தார் சற்றேனும்

அச்சமிலார் எல்லார்க்கும் அன்புடைய பண்புடையார்

கச்சியுறை அருட்கடலாம் காமாட்சி அவள்பாதம்

உச்சியணி சயேந்திரர் உபயமலர்த் தாள்போற்றி.


கச்சிறை அருட்கடல் ஆம் காமாட்சிஅவள் பாதம் உச்சிணி - காஞ்சிபுரத்தில் உறைகின்ற கருணைக்கடலான காமாட்சியன்னையின் திருவடியைத் தம் தலைமேல் தாங்கிய;

உபய மலர்த்தாள் - மலர் போன்ற இரு-திருவடிகள்; (உபயம் - இரண்டு);


6) -- --

நருமதைகா விரிகங்கை நதிவளஞ்சேர் நாடெங்கும்

அருமறையின் நெறிவளர அரும்பணிகள் ஆற்றியவர்

ஒருவரையும் ஒதுக்காமல் ஒருங்கிணைத்துப் பாருய்யத்

தருமவழி காட்டியவர் சயேந்திரர் தாள்போற்றி.


நருமதை - நர்மதா என்ற ஆறு;

பார் உய்யத் தருமவழி காட்டியவர் - உலகம் உய்ய தர்ம-மார்க்கத்தைக் காட்டியவர்;


7) –- ம –-

மத்தமணி சடையுடைய மாதேவன் மலைபேர்த்த

பத்துமணி முடியினனைப் பருவரைக்கீழ் அடர்த்தான்பேர்

நித்தமணி நெஞ்சுடையார் நிறையன்பால் சேரியில்கால்

வைத்தமணி சயேந்திரர் மலர்க்கழல்கள் வாழியவே.


மத்தம் அணி சடையுடைய மாதேவன் மலை பேர்த்த - ஊமத்தமலரைச் சடையில் அணிந்த மகாதேவன் உறையும் கயிலைமலையைப் பெயர்த்த;

பத்து-மணிமுடியினனைப் பருவரைக்கீழ் அடர்த்தான் பேர் - அழகிய கிரீடம் அணிந்த பத்துத்தலைகளையுடைய இராவணனை அந்தப் பெரிய மலைக்கீழ் நசுக்கிய சிவபெருமானது திருநாமத்தை;

நித்தம் அணி நெஞ்சுடையார் - எப்போதும் தம் நெஞ்சில் தாங்கியவர்;

நிறைன்பால் சேரியில் கால்வைத்த மணி - மக்கள்மேல் உள்ள பேரன்பால் சேரி முதலிய இடங்களுக்கும் சென்று வழிகாட்டியவர், சிறந்த மணி போன்றவர்;

சயேந்திரர் மலர்க்கழல்கள் வாழியவே - அத்தகைய ஜயேந்திரர் மலரடிகள் வாழ்க ;


8) -- சி --

சிலைகுடையா ஏந்தரியும் செம்மலரின் மேலானும்

அலமருமா றுயர்சோதி அரனடியை மறவாத

நிலையுடையார் மேனிமிசை நீறுதிகழ் கோலத்தர்

உலகுபுகழ் சயேந்திரர் உபயமலர்த் தாள்போற்றி.


சிலை குடையா ஏந்து அரியும் செம்மலரின் மேலானும் அலமருமாறுயர் சோதி - மலையைக் குடையாக ஏந்திய திருமாலும் தாமரைமலர்மேல் உறையும் பிரமனும் அடிமுடி தேடி வாடும்படி உயர்ந்த ஜோதி; (மலையைக் குடையாகப் பிடித்தது கிருஷ்ணாவதார நிகழ்ச்சி);

அரன் அடியை மறவாத நிலைடையார் - அச்சிவபெருமானது திருவடியை என்றும் மறவாதவர்;

மேனிமிசை நீறு திகழ் கோலத்தர் - உடல்மீது திருநீற்றைப் பூசியவர்;

உலகு புகழ் சயேந்திரர் உபய மலர்த்தாள் போற்றி - பார் புகழும் ஜயேந்திரரது இரு-திருவடிகளுக்கு வணக்கம்;


9) -- வா --

வார்த்தைபல அடுக்கிமிக வஞ்சிப்பார்க் கருளானைப்

பார்த்தனுக்குப் படையருளப் பன்றிப்பின் செல்முக்கண்

மூர்த்திதனைப் போற்றியவர் முன்பணிந்த அன்பரிடர்

தீர்த்தமுனி சயேந்திரர் செம்மலர்த்தாள் வாழியவே.


பார்த்தனுக்குப் படைருளப் பன்றிப்பின் செல் முக்கண் மூர்த்திதனைப் போற்றியவர் - அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரம் கொடுப்பதற்காக வேடன் ஆகி ஒரு பன்றியைத் துரத்திச்சென்ற முக்கட்பெருமானை வழிபட்டவர்;

முன் பணிந்த அன்பர் இடர் தீர்த்த முனி - வந்து வணங்கிய அன்பர்களது கஷ்டங்களைத் தீர்த்த முனிவர்;

சயேந்திரர் செம்மலர்த்தாள் வாழியவே - ஜயேந்திரரது செந்தாமரை போன்ற திருவடிகள் வாழ்க;


10) -- --

யதியாகி அனைவர்க்கும் அறமுரைத்த குருவாகிக்

கதிநீரென் றடைந்தார்க்குக் கவலையறப் பொழியுமருள்

நிதியாகி ஏகம்பன் நீங்காத திருக்கச்சிப்

பதிமேய சயேந்திரர் பாதமலர் வாழியவே.


யதிகி - துறவி ஆகி;

அனைவர்க்கும் அறம் உரைத்த குருகிக் - எல்லார்க்கும் தர்மத்தைப் போதித்த குரு ஆகி;

"கதி நீர்" ன்று அடைந்தார்க்குக் கவலைறப் பொழியும் அருள்நிதிகி - "நீங்களே எமக்குத் துணை" என்று சரண்புகுந்தவர்களது கவலைகள் தீரும்படி பொழிகின்ற அருள்நிதி ஆகி;

ஏகம்பன் நீங்காத திருக்கச்சிப் பதி மேய சயேந்திரர் பாதமலர் வாழியவே - ஏகாம்பரேஸ்வரன் நிலைத்து உறையும் காஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் ஜயேந்திரரது திருவடித்தாமரை வாழ்க;


வி. சுப்பிரமணியன்

------------- -------------


Tuesday, July 8, 2025

G.18 - மைசூர்பாகு - (வக்கிரோக்தி)

G.018

து 2007-இல் எழுதப்பட்டது.


2007-05-20

G.18 - மைசூர்பாகு - (வக்கிரோக்தி)

-------------------------

முற்குறிப்பு: மைசூர்பாகு செய்து தருவேன் என்று முன்பு சொன்ன ஒருவரோடு ஒரு கற்பனை உரையாடல்.


கடினம் என்றார் உதவுவோம் என்றோம்

உறுதி என்றார் நிச்சயம் என்றோம்

கல்லென்றார் என்றும் கற்போம் என்றோம்

பல்பத் திரம்என்றார் இலைகள் உளஎன்றோம்

இரும்பாகும் அறிஎன்றார் ஆகா என்றோம்

மெல்ல முடியாது என்று விட்டார்

நல்ல வேளை தப்பி னோமே.


கடினம் - 1. கெட்டி; / 2. கஷ்டம்;

உறுதி - 1. திடம் (கெட்டி); / 2. நிச்சயம்;

கல் - 1. பாறை முதலிய கல்; / 2. கற்றுக்கொள்;

பல் பத்திரம் - 1. பல் ஜாக்கிரதை; / 2. பல இலைகள்;

இரும்பாகுமறி - 1. இரும்பு ஆகும் அறி (இரும்பு போல இருக்கும்); / 2. இரும்-பாகும் அறி (சிறந்த பாகு); (இருமை - சிறந்தது);

மெல்ல முடியாது1. வாயில் கடித்து உண்ண இயலாது; / 2. மெதுவாகத், தர முடியாது;


வி. சுப்பிரமணியன்

------------- -------------


G.17 - இப்படி எப்படி - கவியரங்கம் 44

G.017

இப்பாடல் 2017-இல் எழுதப்பட்டது.


2017-12-28

G.17 - இப்படி எப்படி - கவியரங்கம் 44

-------------------------

0) –- அவை வணக்கம் – (அறுசீர் விருத்தம் - விளம் விளம் தேமா - அரையடி வாய்பாடு)

இப்படி எப்படி என்ற .. இத்தலைப் பினிலொரு பாடல்

செப்பிட நானு(ம்)மு யன்றேன் .. செந்தமிழ்ப் பாவலர் முன்னே

சொற்பொருட் பிழைகளைக் காணின் .. சுட்டியு ரைத்திட வேண்டும்

கற்பனை மிக்குடை யீரே .. கனிவொடு செய்திடு வீரே.


கற்பனை - கல்வி;


1) ---- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா ----

படியிதன்மேல் புல்பூச்சி பறவைநரன் என்றென்று

முடிவிலதாய்ப் பல்பிறவி முளைத்துமிக எய்த்தாலும்

மடிவதில்லை ஆசைஇந்த மாயவலை நீங்குவ(து)எப்

படியெனமா ஞானியர்கள் பாடினு(ம்)நான் உணரேனே.


படி - பூமி;

நரன் - மனிதன்;

எய்த்தல் - இளைத்தல்; வருந்துதல்;


2)

மடியினிலே தவழ்கின்ற வயதுமுதல் வலிமைமிகு

வடிவுடைய இளமையதன் வரம்புவரை எல்லாரும்

படிபடியென்(று) அனுதினமும் பகர்கின்றார் ஆனாலும்

படியமனம் மறுப்பதையே பார்க்கின்றோம் விந்தையிதே.


வரம்பு - எல்லை;

படி - 1. படித்தல் (ஓதுதல்; வாசித்தல்); / 2. படிதல் - கீழ்ப்படிதல்; அடங்குதல்;


3)

கொடியிடையும் கிளிமொழியும் கொண்டமட மங்கையவள்

நொடியளவும் நம்பக்கம் நோக்காளோ எனவாயிற்

படியெதிரே தவம்செய்து பன்னாளும் நின்றிருக்கும்

படிமதனின் மலர்க்கணைகள் பாயஇலக் கானோமே


படி - 1. சோபானம் (Step, stair; rung of a ladder); / 2. விதம் (Manner, mode);

மதன் - காமன்; மன்மதன்;

இலக்கு - Target for an arrow;


4)

இடியாதே தோல்விவரின் இதுவேபின் வெற்றிக்குப்

படியாகும் பாரென்பார் படித்தோர்கள் ஆனால்இப்

படியேனா யிற்றென்று பாராமல் தொடர்ந்தால்எப்

படியாகும் வெற்றிக்குப் படிபகரீர் பாரீரே.


பதம் பிரித்து:

"இடியாதே தோல்வி வரின்; இதுவே, பின் வெற்றிக்குப்

படி ஆகும் பார்" என்பார் படித்தோர்கள்; ஆனால்

இப்படி ஏன் ஆயிற்று என்று பாராமல் தொடர்ந்தால்,

எப்படி ஆகும் வெற்றிக்குப் படி? பகரீர் பாரீரே.


இடிதல் - வருந்துதல்; மனம்கலங்குதல்;

பகரீர் பாரீர் - உலகத்தீர் சொல்லுங்கள்;

– ஈற்றசை;


5)

இடியனைய குரலுடைய எருமையதன் மீதேறிக்

கொடியநமன் நம்முயிரைக் கொல்வதற்குக் கையிலொரு

பிடிகயிறோ(டு) அடையாமுன் பெரும்பஞ்சத்(து) இருவர்க்குப்

படியருள்செய் மிழலைநகர்ப் பரமனடி பணிநெஞ்சே.


இடி அனைய - இடி போன்ற;

பிடிகயிறு - பிடிக்கும் கயிறு; (உயிர்களைப் பிடித்துச்செல்லும் பாசம்);

படி - படிக்காசு - நாட்செலவுக்குக் கொடுக்கும் பணம் (Subsistence allowance for a day);

பெரும்-பஞ்சத்து இருவர்க்குப் படி அருள்செய் மிழலைநகர்ப் பரமன் - பெரிய பஞ்சம் ஏற்பட்டபோது சம்பந்தருக்கும் அப்பருக்கும் படிக்காசு அளித்த திருவீழிமிழலைப் பெருமான்;


6)

பொடியார்ந்த மேனியனே பொன்னாரும் சடையின்மேல்

கடியார்ந்த கொன்றையனே காரிகையோர் பங்கினனே

வடியேந்து சூலத்தாய் மணியாரும் கண்டத்தாய்

துடியேந்து கையினனே தொழுதேனைக் காத்தருளே.


பொடிர்ந்த மேனியனே - திருநீற்றைத் திருமேனியில் பூசியவனே; (பொடி - திருநீறு); (ஆர்தல் - பொருந்துதல்; மிகுதல்; ஒத்தல்);

பொன் ஆரும் சடையின்மேல் கடி ஆர்ந்த கொன்றையனே - பொன் போன்ற சடைமேல் வாசனை மிகுந்த கொன்றைமலரை அணிந்தவனே; (கடி - வாசனை);

காரிகை ஓர் பங்கினனே - உமைபங்கனே;

வடி ஏந்து சூலத்தாய் - கூமையான சூலத்தை ஏந்தியவனே; (வடி - கூர்மை);

மணி ஆரும் கண்டத்தாய் - நீலமணி திகழும் கண்டனே;

துடி ஏந்து கையினனே - கையில் உடுக்கையை ஏந்தியவனே; (துடி - உடுக்கு);

தொழுதேனைக் காத்தருளே - தொழும் என்னை காத்தருள்க;


7) --- வஞ்சித்துறை - (கூவிளம் கூவிளம் - வாய்பாடு) / (தத்தன தத்தன - வண்ணம்) ---

இப்படி எப்படி?

அப்படி எப்படி?

செப்படி வித்தையோ?

அப்பனு ளப்படி!


செப்படி வித்தை - மாயாஜாலம்; தந்திரம்;

அப்பன் உளப்படி - எம்பெருமான் திருவுளம் செய்தவாறு;


வி. சுப்பிரமணியன்

------------- -------------


G.26 - அடியும் முடியும் - (வேறு பாடல்கள்)

G.026 இ வை 2009- இல் எழுதப் பெற்ற பாடல் கள் . 2009-01-01 to 2009-07-01 G.26 - அடியும் முடியும் - ( வேறு பாடல்கள் ) ============= ( ...