Friday, January 19, 2024

G.3 - ஒரு புலவரின் புலம்பல் - (வக்ரோக்தி)

G.003

2024-01-19

G.3 - ஒரு புலவரின் புலம்பல் - (வக்ரோக்தி)

----------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)


ஈயென்றால் ஓட்டுக என்றுரைத் தான்தாராய்

நீயென்றால் பார்த்தான்தன் நீள்மாலை என்னிலை

யாயென்றால் வெற்றிலையே அங்கையில் என்றான்நான்

சீயென்றே செல்லுங்கால் வைத்தியம்செய் என்றானே!


"" ன்றால் ஓட்டுக என்றுரைத்தான் - "" (தா) என்று நான் இரந்தால், அந்தச் செல்வன், "ஈயா, அதனை ஓட்டு" என்று சொன்னான்; (- 1. தா; 2. ஈ என்ற பூச்சி Fly);

"தாராய் நீ" என்றால் பார்த்தான் தன் நீள்மாலை - "நீ தாராய்" (தருவாயாக) என்று சொன்னால், அவன் தான் அணிந்திருந்த நீண்ட மாலையைப் பார்த்தான்; (தார் - மாலை); (தாராய் - 1. தருவாயாக; 2. தாரை அணிந்துள்ளாய்);

"என்னிலையாய்" என்றால் வெற்றிலையே அங்கையில் என்றான் - "என் நிலை ஆய்" (1. என் நிலையை எண்ணிப்பார் / 2. என்ன இல்லாதவன் நீ ( எல்லாம் உடையவன் நீ) ) என்று சொன்னால், கையில் இருப்பது வெற்றிலை என்றான்; (என்னிலையாய் - 1. என் நிலை ஆய்; 2. என் இலையாய்); (என் - 1. என்னுடைய; 2. என்ன); (இலை - 1. பத்திரம் leaf; 2. இல்லை); (ஆய்தல் - ஆராய்தல்);

நான் "சீ" என்றே செல்லுங்கால், "வைத்தியம் செய்" என்றானே - நான், (இவன் ஒன்றும் தரமாட்டான் என்று வெறுப்போடு) "சீ" என்று கிளம்பியபொழுது, "வைத்தியம் செய்துகொள்" என்றான்; (சீ - 1. An exclamation of contempt, disgust, repudiation; இகழ்ச்சி வெறுப்புக்களின் குறிப்பு; 2. Pus; சீழ்.);


குறிப்பு: இது வக்கிரோக்தி என்ற அணி.

வக்கிரோக்தி - n. < vakrōkti. (Rhet.) A figure of speech in which a repartee is based on a double entendre; சொன்ன சொற்களுக்கு வெவ்வேறு பொருள் கொண்டு மறுமொழி உரைப்பதாகிய அணி.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment

G.26 - அடியும் முடியும் - (வேறு பாடல்கள்)

G.026 இ வை 2009- இல் எழுதப் பெற்ற பாடல் கள் . 2009-01-01 to 2009-07-01 G.26 - அடியும் முடியும் - ( வேறு பாடல்கள் ) ============= ( ...