G.004
சந்தவசந்தக் கவியரங்கம் - 58
2024-01-25
G.4 - நனவாகும் கனவு - கவியரங்கம்
---------------
0-1) -- இறைவணக்கம் -- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) --
உனையென்றும் தொழமாட்டார் உளனென்றால் காட்டென்பார்
வினையென்ற குழிவீழ்வார் வெற்றுரையை விட்டுன்பேர்
நினையன்பர் மனத்திருக்கும் கனவெல்லாம் நனவாக்கும்
நினையொன்றி நினைகின்ற நெஞ்சத்தை அருளாயே.
உனை என்றும் தொழமாட்டார், "உளன் என்றால் காட்டு" என்பார் - உன்னை ஒருநாளும் வணங்காதவர்கள், "தெய்வம் உண்டு என்றால் எனக்குக் காட்டு" என்கின்றவர்கள்;
வினை என்ற குழி வீழ்வார் வெற்றுரையை விட்டு - வினைக்குழியில் விழுபவர்கள் சொல்லும் பொருளற்ற பேச்சை நீங்கி;
உன் பேர் நினை-அன்பர் மனத்து இருக்கும் கனவெல்லாம் நனவாக்கும் - உன் திருநாமத்தை நினைக்கும் பக்தர்கள் மனத்தில் எண்ணிய வரங்களை அருளும்;
நினை ஒன்றி நினைகின்ற நெஞ்சத்தை அருளாயே - உன்னை ஒன்றி எண்ணுகின்ற மனத்தை எனக்கு அருள்வாயாக; ( நினை - நின்னை - உன்னை);
1) -- (வெண்பா) --
பலர்கனவில் செல்லும் பரிசுடையான் ஓர்பால்
மலரணி ஓதிமலை மங்கை இலகுமரன்
வண்டார் பொழில்சூழ் மழபாடி மன்னியவன்
கண்டானே அன்றோர் கனவு!
பலர் கனவில் செல்லும் பரிசு உடையான் - பலரது கனவில் செல்லும் தன்மை உடையவன்; (பரிசு - இயல்பு);
ஓர்பால் மலர் அணி ஓதி மலைமங்கை இலகும் அரன் - மலர்களை அணிந்த கூந்தலை உடைய மலைமகள் திருமேனியில் ஒரு பக்கம் விளங்குகின்ற ஹரன்; (ஓதி - கூந்தல்);
வண்டு ஆர் பொழில் சூழ் மழபாடி மன்னியவன் - வண்டுகள் ஒலிக்கும் சோலை சூழ்ந்த திருமழபாடியில் உறைகின்றவன்; (ஆர்த்தல் - ஒலித்தல்); (மன்னுதல் - தங்குதல்);
கண்டானே அன்று ஓர் கனவு - அவனுக்கும் அன்று ஓர் ஆசை இருந்தது; (கனவு காண்தல் - கனாக் காண்தல் - ஒன்றை அடைய விரும்புதல்);
2) -- (கலிவிருத்தம் - விளம் காய் விளம் காய்) --
---- (சுந்தரர் தேவாரம் - 7.83.1 - "அந்தியும் நண்பகலும்") ----
மனமது கசிவாகி வழிபடும் ஒருதோழர்
தினமிக மணநாறும் சீரது திகழ்கின்ற
வனமலி தமிழ்கேட்டல் வயலணி மழபாடிக்
கனவிடை யான்கண்ட கனவென அறிவோமே!
* தினமிக (தினம் மிக), வனமலி (வனம் மலி) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;
மனமது கசிவு ஆகி வழிபடும் ஒரு தோழர் - மனம் உருகி வணங்கும் ஒப்பற்ற தோழரான சுந்தரமூர்த்தி நாயனார்;
தினம் மிக மணம் நாறும் சீரது திகழ்கின்ற வனம் மலி தமிழ் கேட்டல் - அவர் தினமும் பாடுகின்ற வாசனை மிக்க பெருமையுடைய அழகிய தமிழ்ப் பாமாலைகளக் கேட்பது; (வனம் - அழகு);
வயல் அணி மழபாடிக் கன-விடையான் கண்ட கனவு என அறிவோமே - வயல் சூழ்ந்த மழபாடியில் எழுந்தருளிய பெரிய விடையை வாகனமாக உடைய பெருமானது விருப்பம் என்று அறிவோம்; (கனவிடை - பெரிய இடபம்); (அப்பர் தேவாரம் - 5.3.9 - "காழியானைக் கனவிடை ஊருமெய் வாழியானை");
3)
மதுரையில் விளையாடி மகிழ்பரன் மழுவாளன்
கதுமென முதியோனாய்க் கைதனில் கோலோடு
வதுவையின் இடைவந்து வாவென தாளென்றான்
புதுவகை வழக்காடிப் புன்மொழி பலகேட்டான்.
மதுரையில் விளையாடி மகிழ்-பரன் - மதுரையில் திருவிளையாடல் செய்து மகிழ்ந்த பரமன்; (விளையாடுதல் - திருவிளையாடல் செய்தல்);
மழுவாளன் - மழுவை ஏந்தியவன்;
கதுமென முதியோனாய்க் கைதனில் கோலோடு வதுவையினிடை வந்து - நம்பியாரூரர் திருமணத்தில் திடீரென்று ஒரு முதியவன் கோலத்தில் கையில் ஒரு கோல் ஏந்தி வந்து; (கதுமெனல் - விரைவுக்குறிப்பு - திடீரென்று; சட்டென்று); (வதுவை - திருமணம்);
வா எனது ஆள் என்றான் - "வா, நீ என் அடிமை" என்றான்; (ஆள் - அடிமை);
புதுவகை வழக்காடிப் புன்மொழி பல கேட்டான் - உலகோர் யாரும் கேள்விப்பட்டிராத அத்தகைய வழக்கிட்டுச் சுந்தரர் இகழ்ந்துரைத்த பல சொற்களைக் கேட்டான்; (புன்மொழி - ஏச்சு); (பெரியபுராணம் - 12.186 - "ஆசில் அந்தணர்கள் வேறோர் அந்தணர்க் கடிமை யாதல் பேசஇன் றுன்னைக் கேட்டோம் பித்தனோ மறையோன் என்றார்"); (பெரியபுராணம் - 12.198 - "அந்தணர் அவையின் மிக்கார் மறையவர் அடிமை ஆதல் இந்தமா நிலத்தில் இல்லை என்சொன்னாய் ஐயா என்றார்")
4)
திருமலி ஆரூரில் சீர்மலி அடியார்கள்
இருள்தனில் துயிலுங்கால் ஒருகன வதில்வந்து
பொருவிலி ஆரூரன் பொற்கொடி பரவைக்குத்
திருமணம் செய்கென்றான் திகழ்மதிச் சடையானே.
திரு மலி ஆரூரில் சீர் மலி அடியார்கள் இருள்தனில் துயிலுங்கால் ஒரு கனவதில் வந்து - செல்வம் மிக்க திருவாரூரில் சிறந்த அடியார்கள் இரவில் உறங்கும்பொழுது அவர்கள் கனவில் சென்று;
பொருவிலி ஆரூரன் பொற்கொடி பரவைக்குத் திருமணம் செய்கென்றான் - "ஒப்பற்றவனான நம்பியாரூரனுக்கும் அழகிய கொடி போன்ற பரவையாருக்கும் திருமணம் செய்க" என்றான்; (பொருவிலி - ஒப்பற்றவன்); (பொற்கொடி - அழகிய கொடி போன்றவள்); (செய்கென்றான் - செய்க என்றான் - தொகுத்தல் விகாரம்); (பெரியபுராணம் - 12.324 - "செல்வத் திருவாரூர்வாழ் பெருமானடிகள் அன்றங் கவர்மன்றலை நீர் செயுமென்று அடியார் அறியும்படியால் அருளி");
திகழ்மதிச் சடையானே - ஒளிவீசும் திங்களைச் சடையில் அணிந்தவன்;
5) -- (கலிவிருத்தம் - மா மாங்காய் மா மாங்காய்) --
---- (1.80.1 - கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே) ----
அந்தி போல்வண்ணன் ஆலம் பொழில்தன்னில்
சந்தத் தமிழ்பாடித் தங்கித் துயில்தொண்டர்
சிந்தை நெகிழ்வாகச் செல்வ மழபாடி
வந்து தொழுதேத்த மறந்தாய் போலென்றான்.
அந்தி போல் வண்ணன் - அந்திச் செவ்வானம்போல் செம்மேனியன்; (அந்தி - மாலைநேரத்து வானம்);
ஆலம்பொழில்தன்னில் சந்தத்-தமிழ் பாடித், தங்கித் துயில்-தொண்டர் - திருவாலம்பொழிலில் இனிய ஒலிநயமுடைய பாமாலைகள் பாடி, அன்றிரவு அங்கே தங்கி உறங்கிக்கொண்டிருந்த சுந்தரரது;
சிந்தை நெகிழ்வாகச், "செல்வ மழபாடி வந்து தொழுதேத்த மறந்தாய் போல்" என்றான் - மனம் உருகும்படி (அவர் கனவில்), "வளம் மிக்க திருமழபாடிக்கு வந்து போற்ற மறந்துவிட்டாய்போல்" என்று சொன்னான்; (பெரியபுராணம் - ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணம் - 12.29.72 - "மழபாடியினில் வருவதற்கு நினைக்க மறந்தாயோ என்று குழகாகிய தம் கோலம் எதிர் காட்டியருளக்");
6) -- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) --
என்னேவுன் கருணையென எழுந்தவுடன் அத்தலம்போய்ப்
பொன்னாரும் மேனியனே புரிசடைமேல் கொன்றையினாய்
மன்னேயென் றுள்ளுருகி வன்றொண்டர் வாழ்த்தியெழத்
தன்னேயர் தமிழ்கேட்டான் தாழ்குழைதோ டணிசெவியன்.
"என்னே உன் கருணை" என எழுந்தவுடன் அத்தலம் போய்ப் - "என்னே உன் கருணை" என்று வியந்து, துயிலெழுந்தவுடன் திருமழபாடிக்குச் சென்று;
"பொன் ஆரும் மேனியனே, புரி-சடைமேல் கொன்றையினாய், மன்னே" என்று - "பொன் போன்ற மேனியனே, சுருண்ட சடையில் கொன்றை அணிந்தவனே, தலைவா" என்று; (ஆர்தல் - ஒத்தல்); (புரிதல் - முறுக்குக்கொள்தல்; (மன் - அரசன்; தலைவன்); (சுந்தரர் தேவாரம் - 7.24.1 - "பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து");
உள் உருகி வன்றொண்டர் வாழ்த்தியெழத் - மனம் உருகி வன்தொண்டர் வாழ்த்தி வணங்க;
தன் நேயர் தமிழ் கேட்டான் தாழ்-குழை தோடு அணி-செவியன் - தன் அன்பரது தமிழை கேட்டு மகிழ்ந்தான் தன் காதுகளில் தாழும் குழையும் தோடும் அணிந்த பெருமான்; (சம்பந்தர் தேவாரம் - 1.63.4 - "தோடுபெய்து காதிலொர் தாழ்குழையன்");
7) -- (கலிவிருத்தம் - மா மாங்காய் மா மாங்காய்) --
கனவு நனவாகும் கவலை இனியில்லை
தினமும் மறவாது சீரார் கழலேத்தில்
சினவெள் விடையேறி தேவி ஒருபாகன்
புனல்வெண் பிறைசூடும் புனிதன் அருள்வானே.
கனவு நனவு ஆகும், கவலை இனி இல்லை - நம் கனவெல்லாம் நிறைவேறும், இனிக் கவலை இல்லை;
தினமும் மறவாது சீர் ஆர் கழல் ஏத்தில் - தினமும் மறத்தல் இன்றித் திருவடியைத் துதித்தால்;
சின-வெள்விடை ஏறி - கோபம் மிக்க வெண்ணிற எருதை வாகனமாக உடையவன்;
தேவி ஒரு பாகன் - உமையொருபங்கன்;
புனல் வெண்பிறை சூடும் புனிதன் அருள்வானே - கங்கையையும் வெண்திங்களையும் சூடும் தூயன் அருள்செய்வான்;
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------