Wednesday, April 9, 2025

G.15 - வாடா மலர் - கவியரங்கம்

G.015

இப்பாடல் 2017-இல் எழுதப்பட்டது.


2017-04-01

G.15 - வாடா மலர் - கவியரங்கம்

-------------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)


1)

பூப்பறிக்கத் தோட்டத்துள் புகுந்தேன்என் காலைதனில்;

தீப்பறக்கும் உச்சியன்றோ திருப்பள்ளி எழுச்சிக்கே!

ஆர்ப்பளிகள் செய்கின்ற அணிமலர்கள் தமைக்காணேன்

பார்ப்பனவெல் லாம்வாடிப் படிவீழும் பழமலரே!


தீப் பறக்கும் உச்சி அன்றோ திருப்பள்ளி எழுச்சிக்கே - நான் உறக்கத்திலிருந்து விழிப்பதே நண்பகலில்தான்;

ஆர்ப்பு அளிகள் செய்கின்ற அணி மலர்கள்தமைக் காணேன் - வண்டுகள் ரீங்காரம் செய்யும் அழகிய பூக்களை நான் காணேன்;

பார்ப்பன எல்லாம் வாடிப் படி வீழும் பழமலரே - பார்த்தவை எல்லாம் வாடி நிலத்தில் விழும் பழைய பூக்களே;


2)

பணங்கொண்டு கடைக்குப்போய்ப் பரிமளமே பரவுகின்ற

குணங்கொண்ட பூவாங்கிக் கொணர்வதற்கு நினைந்தேன்நான்;

மணங்கொண்ட மலரென்றேன் வர்த்தகரோ எஞ்சியுள

உணங்கும்பூங் கொத்தொன்றை உடனேஎன் கைத்தந்தார்!


பரிமளம் - வாசனை;

எஞ்சியுள - (இன்னும் விற்றுப்போகாமல்) மிச்சம் இருந்த;

உணங்குதல் - உலர்தல்;


3)

காலத்தின் கோலமிது, கனவிருளில் விழித்திருந்து

ஞாலத்தின் மறுபக்க நாட்டினர்க்குப் பணிசெய்தல்!

மாலைக்குப் போதென்றாள் மனையாட்டி! மிகத்தேடி

மாலைப்போ ததுகொணர்ந்தேன்! வாடிவிட்டாள் இல்லாளும்!


கன-இருளில் விழித்திருந்து ஞாலத்தின் மறுபக்க நாட்டினர்க்குப் பணிசெய்தல் - உலகின் அடுத்த பக்கத்தில் உள்ள நாட்டினருக்காக இராத்திரி வேளையில் வேலை செய்தல் (night shift);

மாலைக்குப் போது என்றாள் மனையாட்டி - மாலை தொடுக்கப் பூ வேண்டும் என்றாள் மனைவி; (போது - பூ);

மிகத் தேடி மாலைப்போது அது கொணர்ந்தேன் - மிக அலைந்து திரிந்து சாயங்கால வேளையில் அதனைக் கொண்டுவந்தேன்; (போது - பொழுது);

வாடிவிட்டாள் இல்லாளும் - மனைவியின் முகமும் வாடியது; (உம் - எச்சவும்மை; பூவும் வாடியிருந்தது என்பது குறிப்பு);


4)

வாடியவள் முகம்தன்னில் மலர்ச்சிவர வழியொன்றை

நாடியதென் மனம்;அதற்கு நல்லவழி நாவாரக்

கூடியவா றவள்புகழைக் கூறுவதே! அவ்வாறே

பாடியதும் அவள்வாட்டம் பறந்துநகை பிறந்ததே.


நகை - சிரிப்பு;


5)

வாடாத மலர்கேட்ட மனைவியவள் மனமாறும்

பாடாத புகழ்பாடில் பாரீர்நீர் வல்வினைகள்

மூடாத நிலைவேண்டில் முக்கண்ணன் சீர்பாடீர்

வீடாத பேரின்பம் விளைவிக்கும் அதுதானே.


மனமாறும் - மனம் ஆறும்; (ஆறுதல் - சினம் தணிதல்; சூடு தணிதல்);

பாடாத புகழ் பாடில் - மிகவும் புகழ் பாடினால்;

பாரீர் நீர் - நீங்கள் பாருங்கள்; உலகோரே நீங்கள்;

வல்வினைகள் மூடாத நிலை வேண்டில் முக்கண்ணன் சீர் பாடீர் - வலிய வினை உம்மைச் சூழாத நிலையை விரும்பினால், நீங்கள் முக்கண்ணனன் சிவபெருமான் புகழைப் பாடுங்கள்;

வீடாத பேரின்பம் விளைவிக்கும் அதுதானே - அது அழியாத பேரின்பத்தை அளிக்கும்; (வீடுதல் - அழிதல்; ஒழிதல்);


வி. சுப்பிரமணியன்

------------- -------------


G.26 - அடியும் முடியும் - (வேறு பாடல்கள்)

G.026 இ வை 2009- இல் எழுதப் பெற்ற பாடல் கள் . 2009-01-01 to 2009-07-01 G.26 - அடியும் முடியும் - ( வேறு பாடல்கள் ) ============= ( ...