Monday, November 18, 2024

G.10 - காகத்தின் காலைக்-கவிதை

G.010

2005-12-15

G.10 - காகத்தின் காலைக்-கவிதை

----------

(அறுசீர் விருத்தம் - மா மா காய் - அரையடி வாய்பாடு)


1)

காலை நேரக் கவிதையினைக்

.. காகம் தினமும் படிக்கிறது

வாலை ஆட்டித் தெருநாயும்

.. வாழ்த்துப் பாடி முடிக்கிறது

பாலைப் பொழியும் பசுக்கூடப்

.. பாட்டைக் கேட்கும் ஆசையிலே

சாலை நடுவே மெய்ம்மறந்து

.. தலையை ஆட்டி நின்றிடுமே.


2)

காலை நேரக் கவிதையினைக்

.. காகம் தினமும் படிக்கிறது

சோலைக் குயிலும் சேர்ந்துகொண்டு

.. சோம்பல் வேண்டாம் எழுந்திருந்து

வேலை செய்யப் போவென்னும்

.. வேளை எங்கோ வீதியிலே

நாலைந் தாட்டோ அபசுரமாய்

.. நடுவே ஒலிக்கும் நகர்களிலே.


3)

காலை நேரக் கவிதையினைக்

.. காகம் தினமும் படிக்கிறது

வேலை வேலை எனமக்கள்

.. விரைந்தே ஓடும் மாநகரில்

ஆலைக் கரும்பாய்ப் பேருந்தில்

.. அல்லற் படுவோர் காதுகளில்

சாலை இரைச்சல் தான்கேட்கும்

.. சற்றும் கவிதை கேட்பதில்லை.


4)

காலை நேரக் கவிதையினைக்

.. காகம் தினமும் படிக்கிறது

"மாலை தொடுத்துப் போற்றியென்று

.. வாயால் மனத்தால் துதித்திடுவோர்

வேலை வெற்றி புகழ்பெறுவர்

.. வீணே இருப்போர் வாழ்க்கையொரு

பாலை வனமாய் இறுதியில்நம்

.. பசியைப் போக்கும் நல்விருந்தே".


(அப்பர் தேவாரம் - 5.14.4

இம்மை வானவர் செல்வம் விளைத்திடும்

அம்மையேல் பிறவித் துயர் நீத்திடும்

எம்மை ஆளும் இடை மருதன் கழல்

செம்மையே தொழுவார் வினை சிந்துமே.


அப்பர் தேவாரம் - 5.90.4

பூக் கைக்கொண்டு அரன் பொன்னடி போற்றிலார்

நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார்

ஆக்கைக்கே இரை தேடி அலமந்து

காக்கைக்கே இரையாகிக் கழிவரே.)


5)

காலை நேரக் கவிதையினைக்

.. காகம் தினமும் படிக்கிறது

"சேலை ஒத்த கண்ணுடைய

.. சீதை உடலை அன்றுகொத்தும்

காலை இராமன் எய்தஅம்(பு)ஓர்

.. கண்ணைக் கொண்ட(து) அறிவீர்நீர்*;

மாலை வணங்கி வழிபட்டால்

.. வந்த வினையை மாற்றிடலாம்".


(கொத்தும்காலை = கொத்தும்பொழுது; காலை - When, while; பொழுதில்);

(* இராமாயணத்தில் காகாசுரன் கதை - சீதை அனுமனுக்கு அசோக வனத்தில் சொல்வது)


6)

காலை நேரக் கவிதையினைக்

.. காகம் தினமும் படிக்கிறது

"வேலை தருமா தமிழென்று

.. வேற்று மொழியே கற்குமிவர்

நூலைக் கற்றும் கல்லாதார்,

.. நூறு மதிப்பெண் பெற்றாலும்;

மாலை வரைநான் கரைந்தாலும்

.. மக்கள் காதில் விழுவதில்லை".


7)

காலை நேரக் கவிதையினைக்

.. காகம் தினமும் படிக்கிறது

"பாலைக் கொடுத்தும் பாடவைப்பான்;

.. பலநாள் தாள ஒண்ணாத

சூலை கொடுத்தும் பாடவைப்பான்;

.. சுற்றம் கூடும் திருமணத்தில்

ஓலை எடுத்தும் பாடவைப்பான்

.. உலகைப் படைத்த உத்தமனே".


(முறையே திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் இவர்களுக்கு அருள்செய்தது)


8)

காலை நேரக் கவிதையினைக்

.. காகம் தினமும் படிக்கிறது

"வேலை ஒன்றும் செய்யாது

.. வெட்டிப் பேச்சை விரும்புவதேன்?

காலைக் கையை அசையாமல்

.. காசு தேடி வந்திடுமோ?

மேலை நாடு போல்நாமும்

.. மேன்மை கொள்ள உழைத்திடுவீர்".


9)

காலை நேரக் கவிதையினைக்

.. காகம் தினமும் படிக்கிறது

"காலைப் பிடித்த பாலனுயிர்

.. கவர வந்த இரக்கமில்லாக்

காலன் மாள உதைத்தவன்மான்

.. கன்றை ஏந்தி ஒருகரியின்

தோலை அணிந்த பரமனைநீர்

.. தொழுது மேன்மை பெறுவீரே".


(* மார்க்கண்டேயர் கதை.

அப்பர் தேவாரம் - 4.107.1

மருட்டுயர் தீரவன் றர்ச்சித்த மாணிமார்க் கண்டேயற்காய்

இருட்டிய மேனி வளைவாள் எயிற்றெரி போலுங்குஞ்சிச்

சுருட்டிய நாவில்வெங் கூற்றம் பதைப்ப வுதைத்துங்ஙனே

உருட்டிய சேவடி யான்கட வூருறை உத்தமனே. )


10)

காலை நேரக் கவிதையினைக்

.. காகம் தினமும் படிக்கிறது

"நூலைக் கொண்டு வலைபின்னி

.. நோன்பு நோற்ற சிலந்திக்கும்*

பாலைக் கொண்டு மணல்இலிங்கம்

.. பணிதல் தடுத்த தன்தந்தை

காலை வெட்டு சண்டிக்கும்

.. கருணை செய்தான் கழல்துதிப்பீர்".


(* சிலந்தி - கோச்செங்கண் சோழன்

அப்பர் தேவாரம் - 4.49.4

சிலந்தியும் ஆனைக் காவிற் .. திருநிழற் பந்தர் செய்து

உலந்தவண் இறந்த போதே .. கோச்செங்க ணானு மாகக்

கலந்தநீர்க் காவி ரிசூழ் .. சோணாட்டுச் சோழர் தங்கள்

குலந்தனிற் பிறப்பித் திட்டார் .. குறுக்கைவீ ரட்ட னாரே.


9-ஆம் திருமுறை - திருப்பல்லாண்டு - 10

தாதையைத் தாளற வீசிய சண்டிக்(கு)இவ் அண்டத்தொடும் உடனே

பூதலத் தோரும் வணங்கப்பொற் கோயிலும் போனகமும் அருளிச்

சோதி மணிமுடித் தாமமும் நாமமும் தொண்டர்க்கு நாயகமும்

பாதகத் துக்குப் பரிசுவைத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.)


பிற்குறிப்பு:

 1) "காலை நேரக் கவிதையினைக் .. காகம் தினமும் படிக்கிறது" என்று இலந்தையார் சந்தவசந்தக்-குழுவில் கொடுத்த முதலடிக்கு எழுதிய பாடல்கள் இவை.


2) காலை நேரத்தில் காகம் கரைகிறது. அது இயற்கையாக நிகழ்வது. அதைக் காணும் கவியின் மனத்தில் அது கவிதை பாடுவதாகத் தோன்றுகிறது. இதுவே முதல் வரி. இதிலிருந்து, இரண்டு வகையில் மற்ற மூன்று வரிகளைக் கொண்டு செல்லலாம்.


a) காலை நேரக் காட்சியை ஒட்டி எழும் வர்ணனை.

b) அந்தக் காகம் என்ன பாடுகிறது என்று கவியின் மனத்தில் தோன்றுவது.


நான் எழுதிய சில பாடல்கள் முதல் வகையிலும், மற்றப் பாடல்கள் இரண்டாம் வகையிலும் அமைந்துள்ளன.


வி. சுப்பிரமணியன்

------------- -------------

G.26 - அடியும் முடியும் - (வேறு பாடல்கள்)

G.026 இ வை 2009- இல் எழுதப் பெற்ற பாடல் கள் . 2009-01-01 to 2009-07-01 G.26 - அடியும் முடியும் - ( வேறு பாடல்கள் ) ============= ( ...