Friday, October 13, 2023

G.1 - நாத்திகர் - ஆத்திகர் - சிலேடை

G.001

2008-01-08

G.1 - நாத்திகர் - ஆத்திகர் - சிலேடை

------------------------------------------

பொய்யே இலாத பொருள்என்பர் எந்நாளும்

செய்யார் திருத்தாள் வணக்கமே - செய்தார்

இருள்போக்க எண்ணுவர்தான் தோன்றியெல்லாம் என்று

கருதாத்தி கர்நாத்தி கர்.


சொற்பொருள்:

செய் - செம்மை; சிவப்பு;

செய்யார் - 1. செய்யமாட்டார்; 2. செய் + ஆர் = செம்மை பொருந்திய - சிவந்த;

செய்தார் இருள் - 1. செய்தவர் இருளை; 2. செய்து ஆர் இருள்;

இருள் - 1. அறியாமை; அஞ்ஞானம்; 2. துன்பம் (trouble, difficulty); குற்றம்; பிறப்பு;

ஆர் இருள் - அரும் துன்பம் - பெரும் துன்பம்;

தான்றோன்றி - தான் தோன்றி - 1. தானாகத்தோன்றியது; 2; (என்றும் இருப்பவனான) கடவுள்;

கருதுதல் - எண்ணுதல்;



நாத்திகர்:

"பொய்யே! இலாத பொருள்" என்பர் - "(கடவுள் என்பது) பொய்தான். கடவுள் என்று ஒன்று இல்லை" என்று சொல்வார்கள்.

எந்நாளும் செய்யார் திருத்தாள் வணக்கமே - ஒரு நாளும் அவர்கள் கடவுள் திருவடியை வணங்க மாட்டார்கள்.

செய்தார் இருள் போக்க எண்ணுவர் - (அப்படித் திருவடியை) வணங்குபவர்களது "அஞ்ஞானத்தை"ப் போக்க நினைப்பார்கள்.

தான்தோன்றி எல்லாம் என்று கருது - எல்லாம் தாமே உருவானவை (கடவுளால் படைக்கப்பட்டவை அல்ல) என்று கருதுகின்ற;

நாத்திகர் - நாஸ்திகர்;


ஆத்திகர்:

"பொய்யே இலாத பொருள்" என்பர் - "ஒரு சிறிதும் பொய் இல்லாத பொருள் - மெய்ப்பொருள் (கடவுள்)" என்று சொல்லுவர்.

எந்நாளும் செய் ஆர் திருத்தாள் வணக்கமே செய்து, ஆர் இருள் போக்க எண்ணுவர் - தினந்தோறும் (இறைவனது) சிவந்த திருவடியை வணங்கிப், பெரும் துன்பத்தைப் போக்க எண்ணுவர். (பெரும் துன்பம் - பிறவித் தொடர்ச்சி. "நரகம்" என்றும் பொருள்கொள்ளல் ஆம்);

தான்தோன்றி எல்லாம் என்று கருது - "தான்தோன்றி ஆகிய இறைவனே எல்லாம்" என்று கருதுகின்ற; ( = 1. அவன் சர்வவியாபி - இப்பிரபஞ்சத்தில் எல்லாம் அவன் வடிவமே; 2. தமக்கு உறவெல்லாம் அவனே);

ஆத்திகர் - ஆஸ்திகர்;

பிற்குறிப்புகள்:

1. அப்பர் தேவாரம் - 6.50.6 - "பொய்யிலா மெய்யன் தன்னை" - பொய் கலவாத மெய்யனாய்;

2. அப்பர் தேவாரம் - 6.21.1 - "மூவுலகுந் தாமாகி நின்றார் போலும் ...... தான்தோன்றி அப்பனாரே" - தான் தோன்றி என்பது சிவபிரானுக்குக் காரணப்பெயர். "ஒருவரால் தோற்றுவிக்கப்படாது, தானே தன் இச்சைவழி நினைத்த வடிவில் தோன்றுபவன்" என்பது பொருள்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

G.26 - அடியும் முடியும் - (வேறு பாடல்கள்)

G.026 இ வை 2009- இல் எழுதப் பெற்ற பாடல் கள் . 2009-01-01 to 2009-07-01 G.26 - அடியும் முடியும் - ( வேறு பாடல்கள் ) ============= ( ...